நாமக்கல் நகரில் சேந்தமங்கலம் சாலையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான சுப்பராயன் (82). கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் மீது தாக்கல் செய்திருந்தார். அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு.
கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் ஜவ்வரிசி 250 கிராம், சோம்பு 100 கிராம், சீரகம் 100 கிராம், பருப்பு 250 கிராம், பொட்டுக்கடலை 500 கிராம் ஆகியவற்றை ரூ 196/- செலுத்தி வாங்கினேன். அந்த பொருட்களை பாலிதீன் பொட்டலங்களாக கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டின் விற்பனையாளர் வழங்கினார். அந்த பொட்டலங்களின் மீது பொட்டலத்தின் எடை, விலை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய லேபிள் ஏதும் ஓட்டப்படவில்லை. இது குறித்து விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் தரவில்லை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி பொட்டல பொருள்களில் உள்ளவற்றின் தரம், அளவு, தூய்மை தன்மை ஆகியவற்றை லேபிள் இல்லாததால் தெரிந்து கொள்ள முடியவில்லை. நுகர்வோர் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால் தமக்கு ரூ 75,000/- இழப்பீடும் ரூ 10,000/- வழக்கின் செலவு தொகையும் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வழங்க உத்தரவுடுமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தவர் கேட்டிருந்தார்.
தாங்கள் விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டிய பொட்டலங்களைதான் விற்பனை செய்தோம் என கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று (23-07-2024) வழங்கிய தீர்ப்பில் நுகர்வோர் புகாரை தக்க சாட்சியம் மற்றும் ஆவணங்களுடன் நிரூபித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் வாங்கிய பொட்டல பொருட்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டதால் அதற்கான ரூ 196/- மற்றும் இழப்பீடாக நுகர்வோர் செலுத்திய தொகையின் பத்து மடங்கு தொகையான ரூ.1,960/- மற்றும் செலவு தொகையாக ரூ.1,000/- ஆக மொத்தம் ரூ.3,156/- ஐ கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்த நுகர்வோருக்கு நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.