கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் வசிக்கும் வெங்கிடபதி மகன் வி ராஜேந்திரன் (46) டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட காரை கோயம்புத்தூரில் உள்ள எஸ் ஆர் டிராஸ் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற டீலரிடம் கடந்த 2018 ஜூலை மாதத்தில் ரூ 20,54,677- செலுத்தி வாங்கியுள்ளார். கார் வாங்கிய சில தினங்களிலேயே இன்ஜினில் இருந்து அதிக சத்தம் வந்துள்ளது. ஓரிருமுறை கார் உற்பத்தி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்ற போது அவ்வப்போது இன்ஜினில் சப்தம் வராமல் செய்து கொடுத்துள்ளனர்.
திடீரென ஒரு நாள் ராஜேந்திரன் வாங்கிய கார் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது நின்று விட்டது. டாடா மோட்டார் சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள் காரை எடுத்துச் சென்று ஆய்வு செய்த பின்னர் என்ஜினை மாற்ற வேண்டும் என கூறி ரூபாய் 5 லட்சம் கேட்டுள்ளனர்.
உற்பத்தி குறைபாடு உள்ள காரை தமக்கு விற்றதாக கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும் விற்பனையாளர் மீதும் ராஜேந்திரன் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
வழக்கு தாக்கல் செய்தவர் அளித்துள்ள சாட்சியம் மற்றும் அவரது தரப்பிலும் எதிர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு விற்பனை செய்யப்பட்ட கார் உற்பத்தி குறைபாடானது என நிரூபிக்கப்பட்டுள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுது அடைந்த காரின் என்ஜினை மாற்ற ரூபாய் 5 லட்சம் கேட்டு ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரத்தை கட்டாயப்படுத்தி காரை பழுது பார்க்கும் உற்பத்தி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் பெற்றுள்ளதும் அதனைப் பெற்றுக் கொண்டும் பல மாதங்கள் காரை பழுது நீக்கி வழங்காததும் சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி உற்பத்தியில் குறைபாடு பொருளில் இருந்தால் பொருளின் உற்பத்தியாளர் பொறுப்பாவார் என்பதால் காரின் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு காரை வாங்க செலுத்தப்பட்ட தொகை ரூ 20,75,677- ஐ கார் விற்பனை செய்யப்பட்ட 2018 ஜூலை மாதம் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் (தற்போது வரை வட்டி சுமார் ரூ1,45,000/-) நான்கு வாரங்களுக்குள் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரில் உள்ள இன்ஜினை மாற்ற தாக்கல் செய்தவர் செலுத்திய ரூ 3,20,000/– ஐ பணம் செலுத்திய நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் உற்பத்தி குறைபாடு உள்ள காரை விற்பனை செய்ததன் காரணமாகவும் அதற்கு பிந்திய சேவை குறைபாடு காரணமாகவும் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 2,00,000/- வழங்கவும் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.