spot_img
November 11, 2024, 7:07 am
spot_img

ரிசார்ட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணம் இல்லாமல் அறைகளை வழங்க உத்தரவு

கடந்த 2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கோயம்புத்தூர், சத்தியமங்கலம் சாலையில் உள்ள கணபதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் மகன் ரங்கநாதன் (41) மகேந்திரா ரிசார்ட்ஸ் நிறுவனம் மீது தாக்கல் செய்த வழக்கில் தெரிவித்திருப்பதாவது. 

மகேந்திரா ரிசார்ட்ஸ்   உறுப்பினர் திட்டத்தில் இணைந்தால் வருடத்துக்கு ஏழு நாட்கள் இந்தியாவில் உள்ள எந்த ரிசார்ட்ஸிலும் தங்கிக் கொள்ளலாம் என்று ரிசார்ட்ஸ் நிறுவன பிரதிநிதிகள் தம்மை சந்தித்து தெரிவித்ததால்   கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ 2,13,751/-  செலுத்தி 25 ஆண்டு கால   திட்டத்தில் சேர்ந்தேன்.  ஆனால், நிறுவனம் கூறியபடி தனக்கு   அறைகளை ஒதுக்கி தரவில்லை.  இதனால் 2034 ஆம் ஆண்டு வரை தமக்கு நிறுவனம்     அறைகளை ஒதுக்கி தர வேண்டும். நிறுவனத்தின் சேவை  குறைபாட்டுக்காக தமக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என  புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக கோயம்புத்தூரில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  விடுமுறை கால ரிசார்ட்ஸ்  திட்டத்தின் கீழ் உறுப்பினராக சேருபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் திட்டத்திற்கு ஏற்ப ஆண்டு சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். தங்களிடம் உறுப்பினராக சேர்ந்த ரகுநாதன் தற்போது வரை ஒரு வருடம் கூட ஆண்டு  சந்தா கட்டணம் செலுத்தவில்லை. நிபந்தனைகளை பின்பற்றாமல் ரகுநாதன்   தாக்கல் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு இன்று (14-05-2024) தீர்ப்பு வழங்கியது. ரிசார்ட்ஸ்களில் தங்குவதற்கான வசதி வழங்குவது உள்ளிட்ட எந்த ஒரு சேவை திட்டங்களிலும் நுகர்வோர் உறுப்பினராக சேரும் போது நிபந்தனைகளை படித்து  பார்த்து சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த வழக்கை தாக்கல் செய்தவர் ரூ 2,13,751/-   சேர்க்கை கட்டணம் செலுத்தி இருந்தாலும் விதிமுறையின்படி ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் விடுதிகளில் தங்கினாலும் தங்காவிட்டாலும்   ஆண்டு சந்தாவை செலுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்  அறை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கேட்க முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்தவர் நிறுவனத்திடம் ஒயிட் சீசன் என்ற திட்டத்தில் சேர்ந்துள்ளார். ஆனால், வழக்கு தாக்கல் செய்தவர் முழு பணத்தையும் செலுத்தி ஓராண்டு முடிவதற்கு முன்னதாகவே தன்னிச்சையாக  அவரை ப்ளூ சீசன் என்ற திட்டத்திற்கு நிறுவனம் மாற்றி உள்ளது. வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் அவர் சேர்ந்த திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு உறுப்பினராக மாற்றியது நிறுவனத்தின் சேவை குறைபாடு என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு 2034 ஆம் ஆண்டு வரை நிறுவன ரிசார்ட்களில்  ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் தங்குமிட வசதி வழங்க வேண்டும் என்று நிறுவனத்திற்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்