spot_img
November 21, 2024, 6:19 pm
spot_img

பகுதி – 3: மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகுவது எப்படி? புகார் தாக்கல் செய்வது எப்படி?

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய  அமைப்பு முறை, அதிகார வரம்பு, கட்டணம் உள்ளிட்டவற்றை முதலாம் பகுதியில் பார்த்தோம். இரண்டாம் பகுதியில் நுகர்வோர் என்பவர் யார்?  யாரெல்லாம் புகாரை தாக்கல் செய்யலாம்?  என்று  பார்த்தோம். இந்தப் பகுதியில் புகாரை தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்க உள்ளோம்.

கால வரையறை

முறையீட்டாளரால் நுகர்வோர் புகார் எதிர் தரப்பினர் மீது இறுதியாக பரிவர்த்தனை நடந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புகாரை தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் புகாருடன்  காலதாமத்தை மன்னிப்பதற்கான   விண்ணப்பமும் அதற்கு ஆதரவாக பிரமாண வாக்கு மூலமும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  காலதாமதத்தை மன்னித்து புகாரை ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்கும் விண்ணப்பம் மீது விளக்கம் தருமாறு  எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு  பதிலை பெற்ற பின்பு விசாரணை நடத்தி காலதாமதம் மன்னிக்க தகுந்தது என்றால் நுகர்வோர் ஆணையங்கள்   காலதாமதத்தை மன்னித்து புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். காலதாமத்தை மன்னிக்க கூறும்   காரணம் திருப்திகரமாக இல்லை என்றால் நுகர்வோர் ஆணையங்கள்   இந்த விண்ணப்பங்களை தள்ளுபடி செய்கின்றன.

புகார்

நுகர்வோர் ஆணையங்களில் தாக்கல் செய்யப்படும் புகார் என்பது மிக முக்கியமான ஆவணம் என்பதால் புகாரை தாக்கல் செய்யும் முறையீட்டாளர்  இதனை கவனமாக தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும்.  இங்கு கூறப்படுவது மாதிரி புகார் தயாரிக்கும் முறையாகும். தங்களுக்கு ஏற்றவாறு புகாரை தயாரித்துக் கொள்ளலாம்.  புகாரில் கீழ்க்கண்ட அம்சங்களை சமர்ப்பிப்பது அவசியமானதாகும்.

1. ஆணையத்தின் பெயர், குறுந்தலைப்பு, நெடுந்தலைப்பு

உதாரணம்:

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கிருஷ்ணகிரி

நுகர்வோர் புகார் எண் /2024

கிருஷ்ணப்பா –  முறையீட்டாளர்

மருந்து கடை –  எதிர் தரப்பினர்

முறையீட்டாளர் தரப்பில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 35 -ன்படி தாக்கல் செய்யும் புகார் 

முறையீட்டாளர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், மத்தகிரி கிராமம், பேருந்து நிலையம் அருகில், காளியம்மன் தெருவில் வசிக்கும் சந்திரசேகர் மகன்   கிருஷ்ணப்பா.

எதிர் தரப்பினர்:  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தேன்கனிக்கோட்டை கிராமத்தில் பேருந்து நிலையம் எதிரில்  உள்ள ராஜா மருந்து கடை,  அதன் உரிமையாளர் மூலம்.

ஆணையத்தின் பெயர், குறுந்தலைப்பு, நெடுந்தலைப்பு ஆகியவற்றிற்கு பின்னர் வரும்   பத்தியில் வழக்கை தாக்கல் செய்பவர் எவ்வாறு எதிர் தரப்பினருக்கு நுகர்வோர் ஆவார்?  என்பது விளக்கப்பட வேண்டும். உதாரணம்: கடந்த 29-01-2024 ஆம் தேதியில் எதிர் தரப்பினரின் கடையில் ரூ  120/- செலுத்தி இருமல் மருந்தை வாங்கினேன். அதற்கு எதிர் தரப்பினர் ரசீது வழங்கினார். இந்த வகையில் தான் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவேன்.  இதே பத்தியில் புகாரை தாக்கல் செய்வோருக்கு ஏற்பட்ட பிரச்சனை விளக்கப்பட வேண்டும். உதாரணமாக, ரூ  110/- அதிகபட்ச விலை என்று குறிப்பிட்டுள்ள மருந்துக்கு ரூ  120/- ஐ எம் எதிர்த் தரப்பினர் வசூலித்தார் அல்லது காலாவதியான மருந்தை விற்பனை செய்தார் அல்லது வழங்கப்பட்ட மருந்து தரம் குறைந்ததாக இருந்தது. 

புகாரில் அடுத்த பத்தியில் எதிர்தரப்பினரின் செயலால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமம்   மற்றும் இழப்புகள் என்ன? என்பது விளக்கப்பட வேண்டும்.  புகாரை கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்ய பூகோள அதிகார வரம்பு உள்ளதா? என்பதும்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் புகார் தாக்கல் செய்யப்பட்டு  உள்ளதா? என்பதும் கேட்கும் பரிகாரத்துக்கு உரிய நீதிமன்ற கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதும் விளக்கப்பட வேண்டும்.  (எங்கு புகார் தாக்கல் செய்ய வேண்டும்? எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? போன்ற விவரங்கள் முந்தைய பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன).  

அடுத்த பத்தியில் வழக்கு மூலம் எனக் குறிப்பிட்டு எந்த தேதியில் பிரச்சனை தோன்றியது என்பது முதல் நடைபெற்ற பரிவர்த்தனைகளை விளக்க வேண்டும். வழக்கு மூலம்:  உதாரணம்: கடந்த 29-01-2024 ஆம் தேதியில் எதிர் தரப்பினரின் கடையில் ரூ  120/- செலுத்தி இருமல் மருந்தை வாங்கிய நாளிலும் வீட்டுக்கு சென்று பார்த்த மருந்தை உபயோகப்படுத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என்பதை அறிந்து அடுத்த நாள் கடைக்காரரிடம் சென்று மருந்தை மாற்றித்   தருமாறு கேட்டபோது அதனை அவர் மறுத்து விட்ட நாளிலும் பின்னர் 04-02-2024 ஆம் தேதியில் மருந்து கடைக்காரருக்கு கடிதம் அனுப்பிய நாளிலும் வழக்கு உற்பத்தி.

அடுத்த பத்தியில் கேட்கும் பரிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உதாரணம்:  1. எதிர் தரப்பினர் விற்பனை செய்த மருந்து காலாவதியானது என்பதால் செலுத்தப்பட்ட கட்டணம் ரூ  110/- திரும்ப வழங்க வேண்டும். 2. எதிர் தரப்பினரின்   செயலால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சிரமங்களுக்கு ரூ  50,000/- இழப்பீடு வழங்க வேண்டும். 3. எதிர் தரப்பினர் வழக்கின் செலவு தொகையை வழங்க வேண்டும்.

இதன் பின்னர் புகாரில்   சொல்லப்பட்டுள்ள சங்கதிகள் உண்மையானவை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். உதாரணம்: புகாரில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகள் அனைத்தும் உண்மையானவை என்று உறுதிமொழி அளிக்கிறேன்.  இதற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் பட்டியல், சான்று பொருட்களின் பட்டியல் பின்வருமாறு தெரிவிக்கப்பட வேண்டும்.

ஆவணங்களின் பட்டியல்

எண் தேதிஆவணத்தின் விபரம்ஆவணத்தின் தன்மை
0129-02-2024எதிர் தரப்பினர் வழங்கிய ரசீது ஜெராக்ஸ்
0204-02-2024எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம் அசல்

சான்று பொருட்களின் பட்டியல்

எண் தேதிஆவணத்தின் விபரம்ஆவணத்தின் தன்மை
0129-02-2024எதிர் தரப்பினர் விற்ற மருந்து பாட்டிலுடன்அசல்

புகாருடன் தாக்கல் செய்ய வேண்டியவை

புகாரை வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்தால் அவருக்கு வழங்கப்பட்ட வக்காலத்து அல்லது நுகர்வோர் தன்னார்வ அமைப்பின் மூலம் தாக்கல் செய்தால் அதற்கான அதிகார ஆவணங்கள்,  புகாரில் சொல்லப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சான்று பொருட்கள், எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்ப   கேட்கும் குறிப்பாணை (process memo) (சரியான எதிர்தரப்பினரின் முகவரியுடன்) உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் புகாருடன் தாக்கல் செய்யப்பட வேண்டும். புகாரை தாக்கல் செய்பவர் 18 வயதுக்கு குறைவான   இளவர் என்றால்  காப்பாளரின் அனுமதி விண்ணப்பம்,   இடைக்கால தடை (Injunction), ஆணையர் நியமனம் (Commissioner Appointment)   சான்று பொருளை ஆய்வுக்கு அனுப்புதல் (for laboratory analysis), எதிர் தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டல் போன்ற இடைக்கால கோரிக்கைகள் இருந்தால் அதற்கென தனியான இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இணையதள வழியில் புகாரை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தில் புகாரையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளவையும் சமர்ப்பித்து சான்று பெற்று அதனையும் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

புகாரை தாக்கல் செய்ய   மாதிரி வழிமுறைகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் அவரவர் வழக்குக்கு ஏற்றவாறு சட்டத்தை பின்பற்றி புகாரை தாக்கல் செய்ய வேண்டும். நுகர்வோர் ஆணையங்களில் புகார் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் விசாரணை நடைமுறைகளைப் பற்றி அடுத்த பகுதியில் விரைவில் காண்போம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்