spot_img
December 3, 2024, 10:45 pm
spot_img

ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், சித்தர் குகைகள், கரடிகள், ஆட்டுக்கால் கிழங்கு, வயல் வெளிகள், மிளகு – நெஞ்சை கொள்ளை கொள்ளும் கொல்லிமலை

அமைவிடம்

தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டம் – கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.  கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின்   கடைசி மலையாக   சிறிய மலை தொடராக கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில்   28 கி.மீ., நீளம், 19 கி.மீ., அகலத்தில் 441.4 சதுர கி. மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.  இதன் உயர்ந்த சிகரம் வேட்டைக்காரன் மலை 1400 மீட்டராகும் (4663 அடிகள்).   தம்மம்பட்டி வரையில் நீண்டு செல்லும் இம் மலையானது   துறையூர் பள்ளத்தாக்கால் பச்சை மலைகளில் இருந்தும் ஆயில்பட்டிக் கணவாயினால் போத மலைகளில் இருந்தும் பிரிக்கப்படுகிறது. இம்மலையானது நான்கு பக்கங்களில் உயர்ந்தும் நடுவில் தாழ்ந்தும்   பசுமை படர்ந்து இருக்கும் விளைநிலங்களை கொண்ட உயரமான பகுதியில் உள்ள  சமதளமான பீடபூமியையும்  தன்னகத்தை கொண்டுள்ளது.

சரித்திர குறிப்புகள்

சங்க கால பாடல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலிய காப்பியகங்ளிலும் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.    சுமார் கி.பி., 200-ல்  வரலாற்று சிறப்பு கொண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையையும்   கழுவுள்   அரசன் முசிறியையும்  அதியமான் தகடூரையும் தனி ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஆடி 18 அன்று தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி திருவிழா கொல்லிமலையில் கொண்டாடப்படுகிறது.

சித்தர் குகைகள்

அரிய வகை மூலிகைகளை கொண்ட கொல்லிமலையில் பல சித்தர்கள்   வாழ்ந்ததற்கு அடையாளமாக சித்தர் குகைகள் பல இந்த மலையில் இன்னும் இருக்கின்றன. போகர் மற்றும் அகஸ்தியரின் குகைகள் ஆகாய கங்கை அருவிக்கு அருகிலும், கோரக்கா சித்தர் மற்றும் காலாங்கிநாத சித்தர் குகைகள்  வனப்பகுதிக்குள்ளும் அமைந்துள்ளன.  இம்மலையில் உள்ள மூலிகைகள் தவிர பதிணென்கீழ் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட பல அரிய மருந்துகளான தைலம், ரசமணி, மூப்பு, சுண்ணம் போன்றவை  கல்லறைகளில் புதை பொருளாக வைக்கப்பட்டிருப்பதாக காலங்கி நாதர் மலைவளம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். வேலால் தாக்கப்பட்ட புண்ணை ஆற்றும் சாவல்யகரணி, துண்டிக்கப்பட்ட பாகங்களை ஒன்று சேர்க்கும் சந்தான கரணி, ஜோதி விருட்சகம், சாயா விருட்சகம், அழுகுண்ணி, தொழுகண்ணி  போன்ற அரிய வகை மூலிகைகள் கொல்லிமலையில் உள்ளதாக கூறப்படுகிறது.  

ஜோதிப்புல், சாய்ந்தாடும் பாவை, கருநெல்லி, சிவப்பு கற்றாழை, கருவாழை, சிவப்புக்கடுக்காய், ரோம விருட்சம் உள்ளிட்ட மூலிகைகள் கொல்லிமலையில் உள்ளன. ஜோதிப்புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தானாம். இதேபோல் ரோம விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலை முடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாமாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக் கூடாது, அந்த சாறு பட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம். கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கல் வாழை, இதன் பழத்தை இரண்டு மண்டலம் (96 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவார்களாம். 

மக்கள்

கொல்லிமலையில் நகரங்கள் எதுவும் இல்லாத  305 சின்ன சின்ன கிராமங்களை   கொண்ட 16 பகுதிகள் உள்ளன. இதனை வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு, ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு என்று இங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். இங்கு சுமார் 75 ஆயிரம் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பூர்வீக குடி மலைவாழ் மக்கள் என்றும் மலை கவுண்டர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.  இவர்களது பண்பாடு தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது.   இம்மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். 

விவசாயம்

கொல்லிமலையில் இருந்து சுவேதா நதி, கோம்பை ஆறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு,  பஞ்ச நதி முதலான சிற்றாறுகள் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள் வழியாக காவிரி ஆற்றில் கலக்கின்றது. இங்கு காபி, மிளகு, பலாப்பழம், பேரிக்காய், கொய்யா, அன்னாசிப்பழம்,   வாழை, மரவள்ளிக்கிழங்கு, ஏலக்காய், பட்டை, கிராம்பு உள்ளிட்டவை விளைகின்றன. சமவெளியில் உள்ளதை போல நெல் வயல்வெளிகள் உள்ளன.  கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது. வீரிய ஒட்டு ரகங்கள், மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் போன்ற எந்த செயற்கை சூழலும் இல்லாமல் இயற்கையான கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களை பல   ஆண்டுகளாக பல நூறு ஏக்கரில்   இங்கு மக்கள் பயிரிட்டு வருகிறார்கள்.    மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் ஆட்டுக்கால் கிழங்கு இங்கு   விற்கப்படுகிறது. இங்குள்ள குன்றுகளில் தேன் கூடுகளைக் காணலாம். இங்கு அரிய வகை தேன்களும் கிடைக்கின்றன.  

இயற்கை

பசுமை கொஞ்சும் வனம், வளமான விவசாய பூமி, ஓசை எழுப்பும் சிற்றாறுகள், அருவிகள், மலைகளுக்கிடையே பீடபூமி, பள்ளத்தாக்குகள், நீர் ஊற்றுகள்   என்று இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும் சுற்றுலாவாசிகள் அதிகம் படை எடுக்காத பகுதியாக  கொல்லிமலை திகழ்கிறது. கொல்லிமலைப் பகுதியில் தேன்கரடிகள், காட்டுப் பன்றிகள்,   குரங்குகள், மயில்கள் உள்ளிட்டவை உள்ளன.  அபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லா தண்ணீரும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் பலமும் கொடுக்கும் சிறுதானியங்களும் கொண்டதுதான் கொல்லிமலை.

பயணம் கவனம்

நாமக்கல்லில் இருந்து   சேந்தமங்கலம் வழியாக 28 கிலோமீட்டர் தரை மார்க்கமாக பயணித்து  காரவள்ளி  என்ற மலை அடிவார கிராமத்தை அடைந்து 26 கிலோ மீட்டர் மலையில் பயணிக்க வேண்டும். அல்லது ராசிபுரத்தில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வழியாக 31 கிலோமீட்டர் தரை மார்க்கமாக பயணித்து  காரவள்ளி   கிராமத்தை அடைந்து 26 கிலோ மீட்டர் மலையில் பயணிக்க வேண்டும்.  காரவள்ளிக்கு செல்வதற்கு முன்பாக சாலையின் இரு புறங்களிலும் கண்ணை கவரும் மூங்கில் மற்றும் பாக்கு தோப்புகள் உள்ளன.    காரவள்ளி மலைச்சாலை தொடங்கும் இடத்தில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது.  இந்த மலைச்சாலை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. சில கொண்டை ஊசி வளைவுகள் அபாயகரமாக உள்ளது. பல இடங்களில் அகலம் குறைவாக   உள்ளதால் காரவள்ளி வரை மட்டுமே பேருந்துகள் அனுமதிக்கப்படுகிறது.  அங்கிருந்து சிறிய வகை பேருந்துகளில் மட்டுமே மலை மேல் செல்ல வேண்டும். மலை பாதையில் செல்லும் போது வாகனத்தை நன்கு இயக்க தெரிந்தவர்களாக இருப்பது அவசியம்   மற்றும் இரு சக்கர வாகனங்களும் கவனமாக பயணிக்க வேண்டும்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து மெட்டாலா, முள்ளுக்குறிச்சி வழியாக தரை மார்க்கமாக 40 கிலோமீட்டர்    பயணித்து  மூலக்குறிச்சி என்ற மலை அடிவார கிராமத்தை அடைந்து 37 கிலோமீட்டர்     மலைச்சாலையில் பயணித்து கொல்லிமலையை அடையலாம். மூலக்குறிச்சி மலைச்சாலை தொடங்கும் இடத்தில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது. ஆத்தூரில் இருந்து தம்மம்பட்டி வழியாக சேரடி என்ற மலை கிராமத்தை அடைந்து   அங்கிருந்தும் கொல்லிமலைக்கு செல்லலாம். துறையூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல் மாவட்ட எல்லையான புளியஞ்சோலையில் இருந்து சுமார் இரண்டரை மணி நேரம் செங்குத்தான   மலைப்பாதைகளின் வழியாக   நடந்து சென்று கொல்லி மலையை அடையலாம்.  மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த பாதை மகிழ்ச்சியானதாக உள்ளது. புளியஞ்சோலையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் பயணியர் சுற்றுலா விடுதி உள்ளது

காண வேண்டிய இடங்கள் 

கொல்லிமலை வனப்பகுதியில் மையமான   செம்மேட்டில் பேருந்து நிலையம் உள்ளது.  ‘வல்வில் ஓரி’  சிலை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், பொதுக் கூட்ட கலையரங்கு, தொலைபேசி நிலையம், ஓரிரு தேநீர் கடைகள், உணவகங்கள் முதலியன செம்மேட்டில் உள்ளது.  சுமார் 30 தங்குமிடங்கள் உள்ளன.   கொல்லிமலை  லேம்ப் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் தங்குமிடம் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது.  இங்குள்ள சோளக்காடு சந்தையில் உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன இந்த சந்தையை ஒரு முறை பார்த்தால் கிராமிய வாசம் நம்மை ஈர்க்கும்.

அறப்பளீஸ்வரர் கோவில்

அய்யாறு ஆற்றின் கரையில் சதுரகிரி எனும் மலை உச்சியில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோயில் மலைவாழ் மக்களின் குலதெய்வமாக வணங்கப்படுகிறது.  இந்தக் கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் கிழக்கு திசையில் சோரம் அடையான் கோயில் உள்ளது. இது மலைவாசிகளால் வணங்கப்பட்ட முந்தைய தெய்வம் என கருதப்படுகிறது. இந்த கோயிலில் இருந்து மேற்கு  திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கொல்லிப்பாவை என்னும் சிலை உள்ளது. கொல்லிப் பாவையை  மலை வாழ் மக்கள் “எட்டுக்கை அம்மன்” என அழைக்கின்றனர். இங்கிருந்து கிழக்கு திசையில் ஒரு குன்றின் மீது தரை மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் பழைய காலத்து குயவன் மண் ஓடுகளால் கோயிலும், மண்ணினால் செய்யப்பட்ட குதிரை சிலை வாகனத்தில் அமர்ந்து கையில் திரிசூலம் ஏந்தி வேட்டைக்குச் செல்லும் பாணியில் பெரியண்ண சுவாமி சிலையை கொண்ட பெரியண்ண சுவாமி கோயில் இருக்கிறது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவியில் குளிக்க 1200 படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும்.  அய்யாறு ஆற்றில் இருந்து 300  அடி உயரத்தில் இருந்து அருவி விழுகிறது.   உடல் நல குறைவாக உள்ளவர்கள் படிக்கட்டில் கீழே இறங்கி மேலே ஏறுவது சிரமமாக இருக்கும்.  இந்த  அருவியில் குளிப்பது ஆனந்தத்தை தரும். கொல்லிமலையில் மாசிலா   அருவியும் நம்ம அருவியும் வேறு சில சிற்றருவிகளும் உள்ளன. ஆகாய கங்கை அருவியை ஒட்டி சறுக்கினால் போல சென்றால் ஒரு சித்தர் குகை உள்ளது.

படகுத் துறை

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை செயற்கையாக படகு சவாரிக்காக உருவாக்கப்பட்டதாகும்.  சீக்குப்பாறை காட்சி முனை மையத்திலிருந்து கொல்லிமலை அழகை கண்டு ரசிக்கலாம். தோட்டக்கலைத் துறையினரின் தாவரவியல் பூங்கா இருந்த போதிலும் எதிர்பார்க்கும் ரசனைக்கேற்ப அமைந்திருப்பதாக தெரியவில்லை.  மிகவும் பழமையான வயர்லெஸ் ஸ்டேஷன் ஒன்று கொல்லிமலையில் திருச்சி மாவட்ட காவல் துறையால் பல காலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  இதனுள் செல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் இதன் அருகில் இருந்து பார்த்தால் கரூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் காவிரியின் அழகை ரசிக்கலாம்.   

ஆராயப்படாத நிலப்பரப்பு

ஆராயப்படாத நிலப்பரப்பு மற்றும் அடர்த்தியான தாவரங்கள் காரணமாக கொல்லிமலை விசித்திரமாகவும் வினோதமாகவும் இருக்கிறது.  அரியூர் சோலை, குண்டூர் நாடு மற்றும் புளியஞ்சோலை ஆகிய மூன்று காப்புக் காடுகள் தமிழ்நாடு அரசின் வனத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.    இங்கு இந்தியாவில் மிகப் பெரியதாக கருதப்படும் மூலிகை பண்ணை ஒன்றை அரசு பராமரித்து வருவதோடு தோட்டக்கலை  துறையினரின் பண்ணையும் உள்ளது. 

காலத்தின் தேவை

கொல்லிமலை வாழ் மக்களின்   வளர்ச்சிக்கான செயல்பாட்டாளரான ஏ. டி. கண்ணன் நுகர்வோர் பூங்காவிடம்   கூறியதாவது:  “இங்கு உள்ள ஒரே ஒரு அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை.  நவீன வசதிகளுடன் போதுமான மருத்துவர்களுடன் இந்த மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.  அரசு கல்லூரி  ஒன்று தொடங்கப்பட வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்”.  

“மிளகு விவசாயிகளுக்கு கேரளாவில் உள்ளது போல கூட்டுறவு மிளகு உற்பத்தியாளர் விற்பனை சங்கம் உள்ளூர் மக்களை இணைத்து விரைவில் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.

ஒரு முறை செல்வோம்! கொல்லிமலை அழகை ரசிப்போம்!

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்