spot_img
July 27, 2024, 12:26 pm
spot_img

குலசேகரன்பட்டினம்:  சர்வதேச அளவில் கவனம் பெறப்போகும் தமிழக கிராமம்

குலசேகரன்பட்டினம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டம், உடன்குடி ஊராட்சியில் வங்காள விரிகுடா கடற்கரையில் குலசேகரன்பட்டினம் அமைந்துள்ளது. திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையில் உடன்குடிக்கு கிழக்கில் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் திருச்செந்தூருக்கு தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த கிராமம் கன்னியாகுமரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் பெரும்பாலான மக்களின் தொழில் மீன்   பிடித்தலாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை  கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1,919 குடும்பங்கள் 7,891 மக்களுடன் வசித்து வருகிறார்கள்.

சரித்திர குறிப்புகள்

குலசேகரன்பட்டினத்தில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் துறைமுகம் இருந்துள்ளது.  இலங்கைக்கும் மன்னார் வளைகுடாவில் முத்து குளித்தல் தொழிலுக்கும் இந்த துறைமுகம் இணைப்பாக  விளங்கியுள்ளது.   கி.பி. 1250 ஆம் ஆண்டு மார்கோபோலோவின் பயண நாட்குறிப்பில் குலசேகரப்பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாரம்மன்   கோவில் இந்த ஊரில் உள்ளது. பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர்   அந்த மாமன்னனின்   குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு   சிறப்பாக குலசேகரன்பட்டினத்தில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டு வந்தபோது இங்கு சுங்க அலுவலகத்தையும் ரயில் நிலையத்தையும் அமைத்துள்ளனர்.

ராக்கெட் ஏவுதளம்

கடந்த 1960 களின் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழகத்தில் கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில்   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நிறைவேறவில்லை. இந்தியாவின் முதலாவது   சோதனை ராக்கெட் திருவனந்தபுரம் அருகே   தும்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்ட  ஏவுதளத்திலிருந்து கடந்த 1963    நவம்பர் 21 அன்று அனுப்பப்பட்டது. கடந்த 1971 அக்டோபர் 9 ஆம் தேதி     சென்னையிலிருந்து 80 கிலோ மீட்டர்  தொலைவில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள   ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்திலிருந்து   இந்தியாவின் சோதனை ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மையம் பெங்களூரிலும், ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மையம் திருவனந்தபுரத்திலும்,  ராக்கெட்டுக்கான எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் நாகர்கோயில் அருகே உள்ள மகேந்திரகிரியிலும் உள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான இரண்டு ஓடுதளங்கள்  செயல்பட்டு வருகின்றன.

உகந்த இடம்

பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும். இதனால் ராக்கெட் ஏவும் போது புவி உந்து விசை அதிகம் இருக்கும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலம் தென்துருவத்தை நோக்கி கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். ராக்கெட்டை கிழக்கு நோக்கி ஏவுவதன் மூலம் பூமியின் சுழற்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏவப்பட்ட ராக்கெட் செயல்படாமல் போகும் போதும் ராக்கெட் செயற்கைக்கோளை விண்வெளிக்குள் அனுப்பி விட்டு ராக்கெட்டின் பிரிந்து வரும் பாகங்கள் கீழே விழுகும் போதும் அவை கடலுக்குள் விழும்படியாக இருக்க வேண்டும்.    இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஸ்ரீஹரிகோட்டா 50 கி.மீ கடற்கரையுடன் சுமார் 43,360 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கிழக்கு கடற்கரையில் உள்ள தீவாகும்.  

குலசேகரன்பட்டினம் தேர்வு

ராக்கெட் ஏவுதளத்திற்கு ஏற்ற இடம் என்பது பூமத்திய ரேகை பகுதிதான். ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகையிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. இதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டு சுற்றுப்பாதையின் தொலைவு குறையும்.  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கையின் மீது விழுந்து விடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர் கிழக்கு நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் போது திசை திருப்பி விட வேண்டிய அவசியமில்லை. இங்கிருந்து தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் ராக்கெட்டுகளை செலுத்த முடியும்.  ராக்கெட்டை  திருவனந்தபுரத்திலிருந்தும் எரிபொருளை  நாகர்கோயில் மகேந்திரகிரியிலிருந்தும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் திருவனந்தபுரத்தில் இருந்தும் மகேந்திரகிரியிலிருந்தும் (40 கிலோமீட்டர்)   குறைந்த தொலைவில் உள்ளது. 

ஏவுதளம் – விண்வெளி பூங்கா

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்   சிறிய வகை ராக்கெட்களுக்கான ஏவுதளத்தை அமைக்க குலசேகரன் பட்டினத்தை தேர்வு செய்தது. தமிழக அரசு   2233 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ராக்கெட் ஏவுதளத்துக்காக  இந்திய விண்வெளி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி குலசேகரப்பட்டினத்துக்கு பாரதப் பிரதமர் நேரில் வந்து ஏவுதளத்தின் கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் கலந்து கொள்ள உள்ளார்.  இதே பகுதியில் தமிழக அரசு விண்வெளி தொடர்பான தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் விண்வெளி பூங்கா ஒன்றை அமைப்பதற்கு 2000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஒதுக்கியுள்ளது.  விரைவில் குலசேகரன்பட்டினம் என்ற கிராமம் சர்வதேச அரங்கின் கவனத்தை ஈர்க்கப் போகிறது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் முழுமையாக செயல்படும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதைப் போலவே, தமிழக அரசின் விண்வெளி பூங்காவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்