spot_img
December 3, 2024, 10:49 pm
spot_img

ஏளனமாக பேசிய மேனேஜர்,ரூ 6,737-க்கு ரூ 89,673- வட்டி வசூலித்த வங்கி, பணம் வழங்காத ஏடிஎம்

கடந்த சில மாதங்களில் வங்கியின் தவறான செயல்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய  ஆறு  தீர்ப்புகளில் உள்ள சங்கதிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அவற்றை அறிந்து கொள்வது வங்கி வாடிக்கையாளர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும்

 ஏளனமாக பேசிய வங்கி மேனேஜர்

கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கோயம்புத்தூர் வேலாண்டிபாளையத்தில் வசிக்கும் சண்முகசுந்தரம் மனைவி யசோதா (62) சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.  இவரது சேமிப்பு கணக்கில் பணம் இருக்கும் போது தானாகவே டெபாசிட் கணக்காக மாற்றிக் கொள்ளுமாறு வங்கிக்கு அவர் தெரிவித்திருந்தார்.  கடந்த 2017   மே மாதத்தில் அவரது சேமிப்பு கணக்கில் ரூ 831/-, சேமிப்பு கணக்கிலிருந்து டெபாசிட் ஆக மாற்றப்பட்ட கணக்கில் ரூபாய் 1,44,000/- இருந்துள்ளது.

கடந்த 2017 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி  ஒவ்வொரு மாதத்திற்கும் (2017 மே மாதத்தில் ரூ 57.50   ஜூலை மாதத்தில் ரூ 88.50/-, ஆகஸ்ட் மாதத்தில் ரூ 59/-, செப்டம்பர் மாதத்தில் ரூ 59/-, அக்டோபர் மாதத்தில் ரூ 35.40/-, நவம்பர் மாத ரூ 35.40/-, டிசம்பர் மாதத்தில் ரூ 35.40/-) அபராதம் விதித்து அந்தத் தொகையை யசோதாவின் சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது.  இவ்வாறு அபராதம் விதித்தது தவறு என வாடிக்கையாளர் கேட்டபோது 2018 ஜனவரி முதல் வாரத்தில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை வங்கி அவரது கணக்கில் வரவு வைத்துள்ளது.

2018 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக் கூறி ரூ 69/- அபராதம் விதித்து அதனை அவரது வங்கிக் கணக்கிலிருந்து வங்கி எடுத்துக் கொண்டது. இதில் ஒரு மாதத்திற்கான அபராதத்தை மீண்டும் வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் சேர்த்து விட்டது. ஆனால் 2018 பிப்ரவரி  மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வங்கி திரும்ப வழங்கவில்லை.

இதனால் வங்கி வாடிக்கையாளரான யசோதா தனது  கணவர் மூலமாக கடந்த 2018 ஆம் ஆண்டு  கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக 2022 ஜூலை மாதத்தில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வங்கியின் தவறை சுட்டிக்காட்டி வாடிக்கையாளரான யசோதாவின் 65 வயதான கணவர் சண்முகசுந்தரம் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கணவருக்கு வேறு வேலை இல்லாததால் தீய  வழியில் பணம் சம்பாதிக்க வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்று வங்கி    வாதிட்டது நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரானது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ரூ  34.50 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 34,500/- ஐ (ரூ 34.50 -ன் 100 மடங்கு) நான்கு வாரங்களுக்குள் வங்கி வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணங்களை திருப்பி அளிக்காத வங்கி

நீலகிரி, இத்தலார், நியூ ஹட்டியில் வசிக்கும் சிவராஜ் மகன் சுஜித்தின் தந்தை கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிளை கனரா வங்கியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூபாய் 5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.  சுஜித்தின் தந்தை கடந்த 2013 ஜனவரி மாதத்திலும் தாயார் செப்டம்பர் மாதத்திலும் இறந்து விட்டனர்.  இதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு தந்தை பெற்ற கடனுக்காக சுஜித் ரூபாய் 2 லட்சம் வங்கிக்கு செலுத்தி உள்ளார்.  2016 ஆம் ஆண்டு வங்கியில்   சமரச   ஒப்பந்தப்படி ரூபாய் 8 லட்சம் செலுத்தி கடனை முடித்துள்ளார். 

கடன் முழுவதையும் செலுத்திய பின்னர் வங்கியில் அடமானம் வைத்த அசல் ஆவணங்களை பலமுறை சுஜித் வங்கியில் கேட்டுள்ளார். ஆனால், அதனை வங்கி திருப்பி தராததால் கடந்த 2018 ஆம் ஆண்டு  அசல் ஆவணங்களை கேட்டு கோயம்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சுஜித்தின் தந்தை ஒப்பந்தப்படி கடனை செலுத்தாததால்   வங்கி சார்பில்   வழக்கு தாக்கல் செய்த போது நீதிமன்றத்தில் அசல் ஆவணங்களை   ஒப்படைத்துள்ளதால் உடனடியாக அவற்றை சுஜித்துக்கு வழங்க இயலவில்லை.  அவற்றை நீதிமன்றத்தில் இருந்து பெற்று தர தயாராக உள்ளோம் என்றும் பணம் பறிப்பதற்காக தீய எண்ணத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என  வங்கி தெரிவித்ததை நுகர்வோர் நீதிமன்றம் ஏற்கவில்லை. வங்கி வீட்டுக் கடனை வசூலிக்க வழக்கு தாக்கல் செய்திருந்தாலும் கடன் முற்றிலும் திருப்பி செலுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் இருந்து   அசல் ஆவணங்களை பெற்று அதனை வாடிக்கையாளருக்கு தர வேண்டியது வங்கியில் கடமையாகும்.  2016 ஆம் ஆண்டில் கடனை செலுத்தி விட்டு 16 மாதங்கள் காத்திருந்து அசல் ஆவணங்களை வங்கி வழங்காததால்தான் சுஜித்   நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடன் செலுத்தப்பட்டு தற்போது வரை 82 மாதங்கள் கடந்தும் வங்கி நிர்வாகம்   அசல் ஆவணங்களை   வாடிக்கையாளருக்கு வழங்காதது சேவை குறைபாடு என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நான்கு வார காலத்திற்கு சுஜித்தின் தந்தையால் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட  அசல் ஆவணங்களை வங்கி திருப்பி வழங்க வேண்டும். அந்த ஆவணங்கள் காணாமல் போயிருந்தால் ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை சார் பதிவகத்தில் பெற்று தங்களிடம் காணாமல் போய்விட்டது என்ற கடிதத்துடன் வழங்க வேண்டும். வங்கியின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சத்தை வழக்கு தாக்கல் செய்தவருக்கு   வழங்க வேண்டும் என்று  நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்சூரன்ஸ்காக பணத்தை பிடித்து   செலுத்தாத வங்கி 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர்   எஸ். குமார்   ஹரிணி இம்பக்ஸ் என்ற பெயரில் ஜவுளி தொழில் செய்து வந்த எஸ். குமார் ஈரோட்டில் உள்ள டி சி பி வங்கியில் தொழில் அபிவிருத்திக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கியில் ரூபாய் 10 லட்சம் கடன் பெற்றுள்ளார்.  தொழில் பாதுகாப்புக்கு  இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறிய வங்கி நிர்வாகம் குமாரின் கணக்கிலிருந்து ரூ 35,535/-  ஐ  கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் பிரிமிய  தொகையாக பிடித்தம்   செய்துள்ளனர்.  ஆனால், பல மாதங்கள் கடந்தும் பாலிசி வராததால் வங்கியை தொடர்பு கொண்ட போது பணத்தைப் பிடித்து ஐசிஐசிஐ லம்போர்ட் நிறுவனத்தில் செலுத்தி விட்டோம் என்றும் இனிமேல் அங்கு தான் பாலிசி வராதது குறித்து கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவசியமாக பதில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முழு கடனையும் வங்கிக்கு செலுத்திய குமார்   கணக்கில் பணம் எடுத்துக் கொண்ட பிறகும் இன்சூரன்ஸ் பாலிசி   வழங்காதது குறித்து 2021 ஜூன் மாதத்தில் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உடனடியாக வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ 35,535/-  ஐ  டிமாண்ட்   டிராப்டாக அனுப்பி வைத்துள்ளது.  வங்கி ஏமாற்றியதாக கூறி குமார்  2021 ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில் வங்கி செயல்பட்டுள்ள விதம் சேவை குறைபாடு என தெரிவித்துள்ளனர்.

வழக்கு தாக்கல் செய்தவரிடம் அவர் கடன் பெற்றபோது ரூ 35,535/-  ஐ   இன்சூரன்ஸ் பாலிசிக்கு   எடுத்துக்கொண்டு அதனை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியதற்கு எந்த ஆதாரத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முகவராக செயல்பட்டுள்ள டிசிபி வங்கி தாக்கல் செய்யவில்லை.  2018-ல்   பிடித்தம் செய்த பணத்தை 2021 -ல் வக்கீல் நோட்டீஸ் மூலம் கேட்டவுடனே வங்கி திருப்பி கொடுத்துள்ளது.  இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்று வழங்கியதற்கு   எவ்வித ஆதாரத்தையும் வங்கி சமர்ப்பிக்கவில்லை.  இதன் மூலம்   வாடிக்கையாளரிடம் பணத்தைப் பிடித்துக் கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முறையாக பணத்தை வங்கி   செலுத்த தவறியது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  

இதனால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு நான்கு வார காலத்துக்குள் இழப்பீடாக ரூபாய் 2 லட்சமும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் 20 ஆயிரமும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.   நான்கு வார காலத்துக்குள் செலுத்த தவறினால் ஏற்படும் காலதாமத காலத்துக்கு ஆண்டொன்று ஒன்பது சதவீத வட்டி சேர்த்து வழங்குமாறு  உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ரூ 6,737/-  க்கு ரூ 89,673/- வட்டி வசூலித்த வங்கி    

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் உயிர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கந்தசாமி மகன் சாந்தகுமார்  தொழிலுக்காக கார்ப்பரேஷன் வங்கியில் நடப்பு கணக்கு வைத்துள்ளார் வங்கி இவருக்கு கிரெடிட் கார்டு வழங்கியுள்ளது.   கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் இவரது கணக்கில் ரூ 1,71,898/- வங்கியில் இருந்துள்ளது.  இவர் தொழில் தொடர்பாக ஒரு நிறுவனத்துக்கு ரூ  1,50,000/-  க்கு காசோலையை வழங்கியுள்ளார்.  ஆனால் இந்த காசோலைக்கு பணம் வழங்க சாந்தகுமாரின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வங்கி கூறியுள்ளது.

அதிர்ச்சி அடைந்த சாந்தகுமார்   வங்கி   கணக்கு அறிக்கையை பெற்று பார்த்தபோது 2012 ஆம் ஆண்டில் தமது கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய தொகை ரூ 6,737/-  க்கு   வட்டியுடன் அவரது கணக்கில் 2017 டிசம்பர் முதல் வாரத்தில்   ரூ 96,410/- ஐ  வங்கி பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.   செலுத்த வேண்டிய தொகை ரூ 6,737/-  க்கு  2012 ஜூலை முதல் 2017 நவம்பர் வரை ஐந்து ஆண்டுகள்   ஐந்து மாதங்களுக்கு  வட்டியாக ரூ 89,673/- ஐ  வங்கி அவரது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டது குறித்து வங்கியில் கேட்டபோது அவருக்கு சரியான பதில் இல்லை.

இதனால் பாதிப்புக்கு உள்ளான வங்கி வாடிக்கையாளர் கடந்த 2018 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். விரைவான விசாரணைக்கு கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்   வழங்கிய தீர்ப்பில் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகைக்கு சுமார் 14 மடங்கு வட்டியை 6  ஆண்டுகளில்   விதித்து அதனை அவரது வங்கிக் கணக்கில் இருந்து வங்கி  எடுத்துக் கொண்டது நேர்மையற்ற வணிக நடைமுறை என்று தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான வாடிக்கையாளருக்கு அவரது கணக்கில் இருந்து வங்கி பிடித்தம் செய்த ரூ 96,410/- ல்   இருந்து கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ  6,737/-  மற்றும் இந்த பணத்திற்கு ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி மட்டும் எடுத்துக் கொண்டு மீத தொகை சுமார் ரூபாய் 85 ஆயிரம் மற்றும் இந்த தொகைக்கு 2017 டிசம்பர் முதல் நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு ஆறு சதவீத வட்டி சேர்த்து    நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தவிர வங்கியின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வாடிக்கையாளருக்கு ரூ  50,000/- இழப்பீடு வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகை ஏலம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வசித்து வரும் துரைராஜ் மகன் இசை அமுதன் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு கிளை ஐசிஐசி வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ 3,25,542/-   கடன் பெற்று இருந்தார்.   ஆனால் எவ்வித  அறிவிப்பும் இல்லாமல் நகைகளை வங்கி ஏலம் விட்டுவிட்டது என  கடந்த 2013 ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பில். புகார்தாரர் கடன் பெறும்போது வங்கியில் சமர்ப்பித்த கடன் விண்ணப்பத்தில்   குறைபாடு உடைய முகவரியை  சமர்ப்பித்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தவணை தேதிக்குள் கடனை செலுத்தாததால்   புகார்தாரர்  கொடுத்திருந்த முகவரிக்கு கடனை   செலுத்த தவறினால் நகை ஏலம் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அனுப்பிய கடிதம் போதுமான முகவரி இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. பின்னர் செய்தித்தாள்களில் நகை ஏலம் விடுவது குறித்து வங்கியால் விளம்பரம் செய்யப்பட்டு சட்டத்தை பின்பற்றி ஏலம் நடைபெற்றுள்ளது. வங்கி நகைகளை   ஏலம் விட்ட   நடைமுறையை சேவை குறைபாடு என்று கூற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013 அக்டோபரில் நகைகளை ரூ 4.07,890/- க்கு ஏலம் விட்டு வங்கிக்கு வரவேண்டிய தொகை ரூ 2,43,807/- ஐ புகார்தாரர் கடன் கணக்கில் வங்கி வரவு வைத்துக் கொண்டது. நகைகள் ஏலம் விடப்பட்ட சில நாட்களில் புகார்தாரர் முழு முகவரியை தெரிவித்து வழக்கறிஞர் அறிவிப்பு வங்கிக்கு கொடுத்துள்ளார். இருப்பினும் புகார்தாரருக்கு நகை விற்பனை செய்ததில் மீதமுள்ள தொகை ரூ 1,64,083/-  வங்கி திருப்பித் தராததும் தற்போது வரை அந்த பணத்தை வைத்துக் கொண்டிருப்பதும் சேவை குறைபாடு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்கி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்த இசை அமுதனுக்கு ரூ 1,64,083/- மற்றும் இந்த தொகைக்கு அதற்கு 2013 ஆம் ஆண்டு முதல்   வட்டியும் வங்கியின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ  50,000/- மும் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு

நாமக்கல் மாவட்டத்தில் சிங்களாந்தபுரத்தில் உள்ள வசித்து வரும் முத்துசாமி மகன் பச்சமுத்து  கார்ப்பரேஷன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவர் அதே ஊரில் உள்ள ஏடிஎம்மில் கடந்த 2016  ஆகஸ்ட் மாதத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஏடிஎம் அட்டையை பொருத்தி ரகசிய குறியீட்டை பதிவு  செய்த போது பணம் ரூபாய் பத்தாயிரம் வராமல் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக இயந்திரத்தில் சீட்டும் மொபைல் போனுக்கு செய்தியும் வந்துள்ளது. 

இதுகுறித்து வங்கியின்  இணையதளத்திலும் வங்கிக்கு சென்று  நேரடியாகவும் புகார் கொடுத்தும்   ஏடிஎம் இயந்திரம் பணம் வழங்கி விட்டது என்று வங்கி நிர்வாகம் புகாரை தள்ளுபடி செய்துவிட்டது.  அவர் பணம் எடுத்த நாளில் ஏடிஎம்மில் சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்டும் வங்கி வழங்கவில்லை

கடந்த மே மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பில் வாடிக்கையாளர் புகார் செய்த பின்னர் அவர் ஏடிஎம்க்கு சென்ற நாளில் உள்ள கேமரா பதிவுகளை உடனடியாக வங்கி நிர்வாகம் பெற்று பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.  அதனை வழங்கி ஏடிஎம் எந்திரம் பணம் வழங்கியது என்று நிரூபிக்க வேண்டும்.  இதனை செய்யாததால் ஏடிஎம் இயந்திரம் வாடிக்கையாளருக்கு பணம் வழங்கவில்லை என முடிவு செய்யப்பட்டு பச்சமுத்துக்கு வங்கி நிர்வாகம் அவரது கணக்கில் கழிக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரம் மற்றும் இந்த தொகைக்கு 2016 ஆண்டு முதல் வட்டியும்  அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 25,000/-  நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  நான்கு வாரத்துக்குள் வழங்க தவறினால் இழப்பீட்டுத் தொகையுடன் ஒவ்வொரு நாளும் ரூபாய் 100 இழப்பீடு கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்