spot_img
November 21, 2024, 8:00 pm
spot_img

இருண்ட வணிக நடைமுறை – பகுதி 2: உங்கள் முழு சம்மதம் இல்லாமல் பணத்தை அபகரிக்கும் இருண்ட நடைமுறைகள் எவை?

பல நேரங்களில் இணையதளம் (ஆன்லைன் பர்சேஸ்) மூலமாக  நீங்கள் ஒரு பொருளை அல்லது  சேவையை (சர்வீஸ்) விலை கொடுத்து வாங்கும் போது உங்களுக்கு தெரியாமலேயே மற்றொரு பொருளுக்கு அல்லது சேவைக்கு அல்லது நன்கொடையாக உங்களிடம் இருந்து இணையதளத்தில் உங்களுக்கு பொருளை விற்பவர் அல்லது சேவையை வழங்குபவர் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை   எடுத்துக்கொள்ளும் இருண்ட வடிவ நடைமுறையை “கூடை பதுக்கி” (Basket sneaking) என்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் இருண்ட வடிவ வணிக (Dark Pattern) வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இதனை பதுங்கி  பணத்தைப் பறித்தல் என்றும் கூறலாம். சில நேரங்களில் இந்த நடைமுறை நேரில் பணம் கொடுத்து  பொருளை அல்லது சேவையை வாங்கும் போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு பொருளை அல்லது சேவையை நீங்கள் இணையதளத்தில் வாங்கும் போது அங்கு அந்த பொருளின் அல்லது சேவையின் துணை பொருள் அல்லது சேவையை (ancillary product or service)  சேர்த்து வாங்குமாறு அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதனை நீங்கள்தான் பார்த்து துணைப்பொருள் அல்லது சேவை வேண்டாம் என்று நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால்   நீங்கள்  பொருளை அல்லது சேவையை வாங்க பணம் செலுத்தும் போது அந்த துணைப் பொருளுக்கும் சேவைக்கும் தங்களிடம் நேரடியாக சம்மதம் கேட்காமலேயே இணையதளம் மூலம் நீங்கள் பணம் செலுத்தும் போது அதற்கும் பணம் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

உதாரணமாக, ஒரு லேப்டாப் ஒன்றை தாங்கள் இணையதளத்தில் வாங்கும் போது அங்கே வருடாந்திர பராமரிப்புக்கான கட்டணம் (annual maintainance) என்று ஒன்று குறிப்பிடப்பட்டு   அதற்கான கட்டத்தில் டிக் மார்க் (tick mark) செய்யப்பட்டு இருக்கும். அதனை நீங்கள் பார்த்து எடுத்து விடாவிட்டால் பணம் செலுத்தும் போது லேப்டாப்புக்கும் வருடாந்திர சேவை  கட்டணத்துக்கும் சேர்த்து உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். முதலில் பார்க்கும்போது இணையதளத்தில் லேப்டாப்க்கு  உரிய விலை மட்டுமே காட்டப்படும்.

மற்றொரு உதாரணமாக, விமானத்தில் அல்லது ரயிலில் அல்லது   பேருந்தில் பயணிக்க இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும்போது முதலில்  பயண கட்டணம் மட்டும் இணையதளத்தில் தெரியும். முதலில் காட்டப்படும் பயண கட்டணத்துக்கு கீழாக இன்சூரன்ஸ் வேண்டும்   என்ற கட்டத்தில் தானாகவே டிக் மார்க் செய்யப்பட்டிருக்கும்.  அதனை நாம் தான் மாற்றி வேண்டாம் என்ற கட்டத்தில் டிக் மார்க் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முன்பதிவை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி வெளியில் வரும்போது பார்த்தால் அந்தப் பயண  கட்டணத்துடன் இன்சுரன்ஸ் கட்டணம் என்று ஒரு தொகை தங்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு மொத்தத் தொகை ரசீதில் காட்டப்படும். 

இதற்கு உதாரணமாக ஐஆர்டிசி எனப்படும் ரயில்வே முன்பதிவு இணையதளத்தில் பயணிச்சீட்டை முன்பதிவு செய்யும்போது இன்சூரன்ஸ்க்கும் சேர்த்து என்ற பகுதியில் டிக் மார்க் செய்யப்பட்டுள்ளது. அதனை தாங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் இன்சூரன்ஸ்க்கும் சேர்ந்து பணம் வசூலிக்கப்படும். தங்களுக்கு இன்சூரன்ஸ் வேண்டாம் என்றால் அந்த கட்டத்துக்கு சென்று அந்த டிக் மார்க்கை நீக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் டிராவல்  இன்சூரன்ஸ் என்ற கட்டத்தில் தானாகவே   டிக் மார்க் உள்ளது கவனிக்கவும்.

ஆன்லைன் பர்சஸில் சில நேரங்களில் தொண்டு நிறுவனங்களுக்கு (charity) அல்லது வேறு  எதற்காவது நன்கொடை (donation)  என்ற பெயரில் குறிப்பிட்ட பணம் பிடித்தம் செய்வதற்காக தன்னிச்சையாக டிக் மார்க் செய்யப்பட்டு இருக்கும்.  நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு முன்பாக இது போன்ற டிக் மார்க் ஏதேனும் இருந்தால் அதனை கவனித்து தாங்கள் நீக்க வேண்டும்.   தொண்டு நிதியாக (charity) ரூ  200/- என்று கட்டத்தில் டிக் செய்யப்பட்டு தொண்டு நிதி வழங்குவதில் எப்போதும் எனக்கு ஆனந்தம் என குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் தாங்கள் அந்த டிக்கை நீக்காமல் இருக்கக்கூடிய மனநிலையை உருவாக்க அந்த வாசகம் முயற்சிக்கிறது. நீங்கள் இன்சுரன்ஸ் வேண்டாம் என்று முடிவு செய்து இன்சுரன்ஸ் என்ற கட்டத்தில் உள்ள டிக்கை நீக்கினால் பாதுகாப்பற்ற பயணம் என்பது போன்ற வாசகங்களை திரையில் காட்டி மறைமுகமாக தாங்கள் அச்சத்துக்கு   உள்ளாகுமாறு தூண்டப்பட்டு அதற்கும் பணம்  செலுத்தக்கூடிய மனநிலையை உருவாக்குவதும் ஒருவகையான இருண்ட வணிக நடைமுறையாகும் (confirmed shaming). 

ஆன்லைன் பர்சஸில் பணம் பிடிக்கும் நடைமுறைகளில் ஓரிரு உதாரணங்கள் மட்டுமே இங்கு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான இணையதள   விற்பனைகளில் இவ்வாறான இருண்ட வடிவ   வணிக நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. பணம் செலுத்தும் நுகர்வோராகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் பர்சஸில் தன்னிச்சையாக கூடுதல் பொருளை அல்லது சேவையை வாங்குவதற்கு மற்றும் நன்கொடை செலுத்துவதற்கு இணையதளத்தில் தன்னிச்சையான டிக் மார்க் செய்யப்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

அரசு வெளியிட்டுள்ள இருண்ட வடிவ வணிக நடைமுறை  குறித்த வழிகாட்டுதல்களின் இதர அம்சங்கள் ஓரிரு நாட்களில் மூன்றாம் பகுதியாக வெளியிடப்படும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்