சிவகாமி (45) என்பவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சின்ன பள்ளம்பாறை என்ற கிராமத்தில் வசித்து வரும் விவசாய பெண்மணி. ஆவார் இவருக்கு மூன்று மாடுகளும் இவரது கணவர் அருளுக்கு நான்கு மாடுகளும் சொந்தமாக உள்ளன. இவற்றை வைத்து பால் உற்பத்தி செய்து பாலை பள்ளம்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வழங்கி வருகிறார். இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவரை மாடுகளுக்கு அரசு மானிய திட்டத்தில் இன்சுரன்ஸ் செய்து கொள்ளுமாறு சங்கச் செயலாளர் கேட்டுள்ளார். அதன்படி சிவகாமி அவரது மூன்று மாடுகளுக்கும் கணவரின் நான்கு மாடுகளுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு மாடு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டது. மாடு இறந்தது குறித்து சங்க செயலாளருக்கு தகவல் தெரிவித்து காப்பீட்டு நிறுவனத்தின் புலனாய்வாளர் முன்னிலையில் அரசு கால்நடை மருத்துவர் உடல் கூர் ஆய்வு செய்துள்ளார் பின்னர் இறந்து போன மாட்டிற்கு காப்பீட்டுத் தொகை ரூ 40,000/- வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சிவகாமி விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளார்.
அரசு மானிய திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதாகவும் ஒரு குடும்பத்தில் ஐந்து கால்நடைகளுக்கு மேல் இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய முடியாது எனவும் சிவகாமி மூன்று மாடுகளுக்கும் சிவகாமியின் கணவர் நான்கு மாடுகளுக்கும் காப்பீடு செய்துள்ளதால் விதி மீறல் நடைபெற்று உள்ளது என்று கூறி இன்சூரன்ஸ் தொகையை தர இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் தொகையும் இழப்பீடும் கேட்டு சிவகாமி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்
விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 30 ஜனவரி 2024 அன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது. காப்பீட்டு நிறுவனத்துக்கும் பள்ளம்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அரசு மானிய காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஐந்து கால்நடைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும் என உள்ளது. ஆனால் இந்த விதியை மீறி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாமி குடும்பத்தினரிடம் ஏழு மாடுகளுக்கு பிரீமியம் வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளது. வழக்கில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை வழக்கு தாக்கல் செய்தவர் சேர்க்கவில்லை. நடந்த தவறுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கமே முழு பொறுப்பாகும் இருப்பினும் ஒரே கணக்கு எண்ணில் ஏழு கால்நடைகளுக்கான காப்பீட்டுக்கு காப்பீட்டு நிறுவனம் ரசீது வழங்கியுள்ளது.
காப்பீட்டு நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இறந்து போன மாட்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் 40 ஆயிரத்தை 8 வாரங்களுக்குள் செலுத்திவிட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை வழக்கில் சேர்க்காததால் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடு எதுவும் வழங்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் இன்சூரன்ஸ் தொகையை வசூலித்த – இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவராக செயல்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தையும் எதிர் தரப்பினராக சேர்த்திருந்தால் காப்பீட்டுத் தொகையை சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் சிவகாமி பெற்றிருப்பார். அரசு மானிய திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஐந்து கால்நடைகளுக்கு மேல் இன்சூரன்ஸ் செய்ய முடியாது என்ற விதி இருந்தாலும் ஏழு மாடுகளுக்கு இன்சூரன்ஸ்கான ரசீது வழங்கியது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தவறு என கூறி விதியை மீறினாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க சட்ட விளக்கத்தின் மூலம் உத்தரவிட்டுள்ளது.