இந்தியாவில் மக்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் இது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு சட்டங்களின் மூலமாக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பட்டியலின மக்களுக்கான தேசிய ஆணையம், பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆணையம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் என்று பல்வேறு அரசியல் அமைப்பு சார்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டு இன்று சட்டபூர்வமாக செயல்பட்டு கொண்டு வருகின்றது. இதைத் தவிர பொது வாழ்க்கையில் நேர்மை, கண்ணியம் மற்றும் ஊழல்களை ஒழிப்பதற்காக தேசிய அளவில் லோக்பால் என்கின்ற அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்தா என்கின்ற அமைப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மத்திய புலனாய்வு அமைப்பு, தணிக்கை கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற அமைப்புகளும் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகள் முதல் முதலில் ஐரோப்பாவில் 1809 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை ஆம்புட்ஸ்மன் அமைப்பு என்று அழைக்கப்பட்டது. ‘லோக்’ என்றால் மக்கள் என்றும் ‘பலா’ என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் பொருள். நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு அதிகாரி நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய ஊழல் மற்றும் கண்ணியக் குறைபாடான செயல்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமனம் செய்யப்பட்டார். இவர் நிர்வாகம் சரிவர செயல்படவில்லை என்றாலும் நிர்வாகத்தில் ஊழல் ஏற்பட்டாலோஇ ஒரு நிர்வாகத்தினுடைய கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் செயல்படும்போது விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை செய்வார். இந்தியாவில் முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக்களை நியமிப்பதற்கான ஆயத்த பணிகள் 1960 – 1966 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட லோக்பால் அமைப்பானது அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில நிர்வாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மீது சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.2013 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டது. லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வமைப்பில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பெயரில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றார்கள். தற்பொழுது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அதிகாரப்பரவலாக்கம் என்கின்ற ஒரு நல்ல குறிக்கோளை பின்பற்றி செயல்பட்டு வருகின்ற காலகட்டத்தில், லோக்பால் மற்றும் லோக்ஆயுக்த அமைப்பை மக்களாட்சி அதிகார பரவலாக்க அடிப்படையில் மேலும் செம்மையாக சிறப்பாக செயல்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற வாதம் வலுப்பெற்று வருகின்றது. லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தகுதி மற்றும் திறமைகளின் அடிப்படையிலஇ; இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் பல்வேறு மாநிலத்தில் இருந்து உறுப்பினர்கள் இவ்வமைப்புகளுக்கு தேர்வு செய்து நியமன செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையானது வலுப்பெற்று வருகின்றது.
இப்படிப்பட்ட காலத்தில் ஒரு அமைப்பினுடைய சிறப்பான செயல்பாடுகள் அவ்வமைப்பின் தலைமை மற்றும் உறுப்பினர்களை சார்ந்தே உள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நபர்களுக்கு மற்றும் அவர்களுடைய தகுதித் திறமையின் அடிப்படையில் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமனம் செய்யும் பொழுது இவ்வமைப்புகளின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே லோக்பால் லோக் ஆயுக்தா போண்ற அமைப்புகள் இன்று மக்களாட்சி அதிகார பரவலாக்க கருத்தாக்கத்தின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களும் பிரதிநிதித்துவம் பெறுகின்ற வகையில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். எனவே தென்னிந்தியா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்ற பொழுது நிச்சயமாக இவ் அமைப்புகள் சிறப்பாக தன்னுடைய பணிகளை செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்