spot_img
November 23, 2024, 3:39 pm
spot_img

நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த தவறினால் மூன்றாண்டு வரை சிறை தண்டனை

பொதுவாக,  சிவில் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தவருக்கு எதிர் தரப்பினர்   ஏதேனும் பணம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டால்   அதன்படி எதிர்   தரப்பினர் தொகையை செலுத்த தவறும் போது தீர்ப்பை பெற்றவர் அதனை நிறைவேற்ற நீதிமன்றத்தில் விண்ணப்பம் (Execution Petition) செய்ய வேண்டும்.  இவ்வாறான நிறைவேற்றுகை  விண்ணப்பத்திற்கான நடைமுறைகள் உரிமையியல்   நடைமுறை சட்டத்தில் ( Order 21, CPC) கொடுக்கப்பட்டுள்ளன. 

உரிமையியல் விசாரணை நடைமுறை சட்டத்தின் கீழ் தீர்ப்புப்படி பணத்தை வசூலிக்க (1) எதிர் தரப்பினரை கைது செய்ய உத்தரவுடும்படி தீர்ப்பு பெற்றவர் நீதிமன்றத்தை கேட்கலாம் அல்லது (2) எதிர் தரப்பினர் சம்பளம் பெறும் ஊழியராக இருப்பின் அவரது சம்பளத்திலிருந்து பணத்தை பிடித்தம் செய்து தருமாறு சம்பளம் வழங்கும் அதிகாரிக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்கலாம் அல்லது (3) எதிர் தரப்பினரின் சொத்தை   ஏலத்துக்கு விட்டு  தமக்கு பணத்தைப் பெற்றுத் தருமாறு நீதிமன்றத்தை கேட்கலாம்.

இதே போலவே   ஒரு நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு எதிர் தரப்பினர்   இழப்பீடாக, வழக்கின் செலவு தொகையாக, அல்லது வேறு வகையிலான பணம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி அதனை எதிர்  தரப்பினர் மதிக்கவில்லை எனில்   நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (2019) கீழ் (பிரிவு 71) விண்ணப்பம் (Execution Application) செய்ய வேண்டும்.  இவ்வாறு விண்ணப்பிக்கும் போது உரிமையியல் விசாரணை நடைமுறை சட்டத்தில்         (Order 21, C.P.C) கொடுக்கப்பட்டுள்ள அதே மூன்று வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.  இவ்வாறு பண வசூல் நடவடிக்கைகளில் சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்களை நுகர்வோர் நீதிமன்றங்கள் பெற்றுள்ளன.

பண வசூல் நடவடிக்கைகளில் சிவில் நீதிமன்றங்கள் குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்ற இயலாது.  ஆனால், ஒரு நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு எதிர் தரப்பினர்   ஏதேனும் பணம் செலுத்த வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பை எதிர் தரப்பினர் செயல்படுத்த விட்டால் தீர்ப்பு பெற்றவர் மேலே விளக்கப்பட்ட சிவில் நடைமுறைகளை பின்பற்றாமல் குற்றவியல் விசாரணை   நடைமுறைகளை (Cr.P.C) பின்பற்றி   எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (2019) கீழ் (பிரிவு 72) விண்ணப்பிக்கலாம்.    இந்த வகையில் விண்ணப்பம் செய்யும்போது விசாரணை செய்து தீர்ப்பை நிறைவேற்ற எதிர் தரப்பினர் தவறிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகள் வரை வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்க நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு   சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வகையான அதிகாரங்களும் கொண்ட அமைப்பாக நுகர்வோர் நீதிமன்றங்கள் அதிகாரம் பெற்றுள்ளன.  பொதுவாக, சிவில் நீதிமன்றங்களுக்கு உரிமையியல் விசாரணை நடைமுறை அதிகாரங்களும் கிரிமினல் நீதிமன்றங்களுக்கு குற்றவியல் விசாரணை நடைமுறை அதிகாரங்களும் மட்டுமே   உள்ளன.  இந்த வகையில் நுகர்வோர் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஆணைகளை நிறைவேற்ற   சிவில் மற்றும் கிரிமினல்   ஆகிய இரண்டு நீதிமன்றங்களின் அதிகாரங்களையும்   நுகர்வோர் நீதிமன்றங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பிரிவு 72, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 -ன் சிறப்பு அம்சம் என்னவென்றால், நுகர்வோர் நீதிமன்றம் வழங்கும் இறுதி தீர்ப்புகளை மட்டுமல்ல, நுகர்வோர் நீதிமன்றம் வழங்கும் எந்த ஒரு உத்தரவுகளையும் செயல்படுத்தாதவர்கள் மீது விசாரணை நடத்தி மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் அதிகாரத்தை நுகர்வோர் நீதிமன்றங்கள் பெற்றுள்ளன என்பதாகும்.  உதாரணமாக, கடந்த 2023   செப்டம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஐந்து நிறைவேற்றுகை வழக்குகளில்   எதிர் தரப்பினரை கைது செய்யுமாறு நாமக்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தது.  அதனை அவர் செயல்படுத்த தவறியதால் இன்ஸ்பெக்டர் மீது நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தகைய அதிகாரங்கள் நுகர்வோர்களை பாதுகாக்கும் அரணாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்