spot_img
July 27, 2024, 1:46 pm
spot_img

புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் (2005)   தேசிய குழந்தைகள் உரிமைகள்  பாதுகாப்பு ஆணையத்தையும்  ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தையும் அமைக்க வழி செய்தது. சில மாநில அரசுகள் மாநில ஆணையங்களை அமைக்க கால தாமதம் செய்ததால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு காலக்கெடு நிர்ணயம்  செய்ததன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையங்கள் (State Commission for Protection of Child Rights) இளையோர் நீதி சட்டப்படி உருவாக்கப்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் குழந்தை பாதுகாப்பு அலகுகள்,  குழந்தை பாதுகாப்பு குழுக்கள், இளையோர் நீதி குழுமம், பதிவு செய்யப்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் தத்தெடுப்பு மையங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணியை பிரதானமாக செய்து வருகின்றன. 

டாக்டர் வீ. ராமராஜ்

கல்வி உரிமை பாதுகாப்பு சட்டம் (ஆர்.டி.ஐ), குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம்( போக்சோ), குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண ஒழிப்புச் சட்டம் ஆகியவை செயல்படுவதை கண்காணிக்கும் அமைப்பாகவும் மாநில குழந்தை ஆணையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கும் இத்தகைய குற்றங்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரியவந்தால் ஆணையமே தானாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக குழந்தை உரிமைகள் ஆணையங்கள் உள்ளன.

குழந்தைகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆய்வுகளை மீட்பது மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளையும் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள   மாநில குழந்தைகள் ஆணையம் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த   காவலனாக இருக்க வேண்டிய அமைப்பாகும். இந்நிலையில் தமிழகத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சத்தம் எங்கும் இல்லையே?  என்பது ஆச்சரியமாக உள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாக தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு   அஇஅதிமுக பிரமுகராக இருந்த திருமதி சரஸ்வதி ரங்கசாமி அவர்களை தலைவராக கொண்டு ஆறு உறுப்பினர்களுடன் நியமனம் செய்யப்பட்டது. இவர்கள் மூன்றாண்டு காலம் பணியை முடித்த பின்பு சுமார் ஓர் ஆண்டு தலைவர் மற்றும் செயலாளர் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்த இந்த ஆணையத்துக்கு மீண்டும் 2017 மே மாதம் ஓய்வற்ற ஆட்சிப் பணி அதிகாரியான திருமதி நிர்மலா அவர்களை தலைவராக கொண்டு ஆறு உறுப்பினர்களுடன் நியமனம் செய்யப்பட்டது.  இவர்களது பதவிக்காலம் முடிந்து ஓராண்டுகள் கழித்து மீண்டும் திருமதி சரஸ்வதி ரங்கசாமி அவர்களை தலைவராக   தமிழக அரசு குழந்தைகள் ஆணையத்துக்கு   கடந்த ஜனவரி 2021 -ல் நியமனம் செய்தது. இவருடன் டாக்டர் வீ. ராமராஜ் (வழக்கறிஞர்),  டாக்டர் மல்லிகை செல்வராஜ் (மருத்துவர்), டாக்டர் சரண்யா, திரு முரளி குமார் மற்றும் திரு துரைராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

டாக்டர் வீ. ராமராஜ்

இவர்களில் டாக்டர் வீ. ராமராஜ் 27 ஆண்டுகள் சட்ட துறையில் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாது நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் காவல் நிர்வாகத்தில் இளம் முனைவர் பட்டமும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம், மனித உரிமைகள் குழந்தைகள் உரிமைகள், குற்றவியல், இதழியல், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சர்வதேச உறவுகள்  உள்ளிட்டவற்றில் முதுநிலை  பட்டங்களை பெற்றவராவார்.  இவர் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளதோடு   நாளிதழ்களில் பல கட்டுரைகளும் ஆய்வுதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி உள்ளார். குறிப்பாக எந்த அரசியல் கட்சியும்  சாராதவர்.

டாக்டர் வீ. ராமராஜ் உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளார். திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயலாளர்களுக்கு பயிற்சி   வழங்கியது உட்பட்ட பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.  

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் திறம்பட செயல்பட வசதியாக தற்போதுள்ள ஆணையத்துக்கான விதிகளை மாற்றியமைக்க புதிய மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகள் வரைவை தயாரித்து ஆணையத்தில் இவர் சமர்ப்பித்தார்.  ஆணையத்துக்கான புதிய விதிகளின் வரைவு அறிக்கையை ஆணையக் கூட்டத்தில் அங்கீகரித்து அரசுக்கு குழந்தைகள் தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் பரிந்துரைக்கவில்லை இந்நிலையில் கடந்த 2022 ஆம் தொடக்கத்தில் தமது பதவியை இவர்   ராஜினாமா  செய்துவிட்டார்.

பின்னர் ஓரிரு வாரங்களில் தற்போதைய மாநில அரசு பொறுப்பில் இருந்த தலைவர் மற்றும்   நான்கு உறுப்பினர்களையும் பதவி நீக்கும் வகையில் ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கடந்த 21 மாதங்களாக தமிழ்நாடு  குழந்தைகள் ஆணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால் தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் செய்ய வேண்டிய பணிகள் முடங்கி உள்ளது.  இன்னும் ஓரிரு வாரங்களில் முந்தைய தலைமையிலான குழுவினருக்கு மூன்று ஆண்டு காலம் முடிந்து   விட உள்ளதால் வழக்கு நிலுவையில் இருந்தாலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழக அரசால் நியமிக்க இயலும் என்ற நிலை ஏற்பட உள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று பார்த்தால், முதலாவதாக, தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கான உயிரோட்டம் இல்லாத விதிகளை மாற்றி புதிய விதிகளை உருவாக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து இரண்டு வாரங்களில் புதிய விதிகளை உருவாக்கி அரசணையாக பிறப்பிப்பது அவசியமாகும். இதன் மூலம் குழந்தைகள் ஆணையம் சிறந்த கட்டமைப்பை பெற்று செயல் திறன் மிக்கதாக மாறும் என்று கூறலாம்.  மாற்று யோசனையாக ஏற்கனவே முன்னாள் உறுப்பினர்   தயாரித்த புதிய விதிகளுக்கான   வரைவை பெற்று அதனை பரிசீலித்து தமிழக அரசு ஏற்றுக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத   பொதுவான   குழந்தைகள் உரிமைகள் குறித்த நிபுணத்துவம் பெற்ற ஒருவரை தமிழக அரசு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தால் தமிழக அரசே பாராட்ட வார்த்தைகள் இல்லை. மூன்றாவதாக, உடனடியாக தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு புத்துயிர் அளிக்காவிட்டால் குழந்தைகளின்  உரிமைகளும் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை. விரைவில் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சி ஈஸ்வரன்
சி ஈஸ்வரன்
சி. ஈஸ்வரன், வணிக ஆலோசகர்/குழந்தைகள் நல ஆர்வலர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்