மைதா மாவால் தயாரிக்கப்படும் பரோட்டா, பீட்சா , பர்கர்கள், நூடுல்ஸ், ரொட்டி துண்டுகள், பிஸ்கட், பஃப்ஸ், பெரும்பாலான இனிப்பு மற்றும் கார வகை உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பலரும் விரும்பி சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மைதா மாவில் என்ன சத்துக்கள் இருக்கின்றன? எப்படி தயாரிக்கப்படுகிறது? உடல் நலனுக்கு ஆபத்தானதா? என்பது பற்றி அறிந்து கொள்வது அவசியமாக உள்ளது.
கோதுமையில் இருந்து ரவை, கோதுமை மாவு ஆகியன தயாரிக்கப்பட்ட பின்னர் எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட மிச்சத்தில் இறுதியாக அரைக்கப்பட்டு மைதா மாவு உருவாக்கப்படுகிறது. சற்று பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். இந்த மைதா மாவை வெண்மையாக்க தலை முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனமான பென்சோயில் பெராக்சைடும் மாவை மிருதுவாக்க சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோயை வரவழைக்க கொடுக்கப்படும் ரசாயனமான அலோக்சனும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தவிர வண்ணத்துக்காகவும் சுவைக்காகவும் கெட்டுப் போகாமல் இருக்கவும் சில ரசாயன கலவைகளும் மைதா மாவில் கலக்கப்படுகின்றன.
மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களில் நார்ச்சத்துக்கள் கிடையாது. நார்ச்சத்து இல்லாத மைதா உணவுகள் செரிமான குடல் உறுப்புகளில் ஒட்டிக் கொள்வதால் அதனை செரிக்க வைக்க இரைப்பை அதிக வேலை செய்கிறது. மைதாவில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக இருப்பதால் உடலில் சர்க்கரை அதிகரித்து இன்சுலின் சுரக்க கணையத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறது. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளும் உருவாக காரணமாக மைதா உணவுகள் அமைகின்றன. மைதா உணவு தயாரிக்க எண்ணெய் அதிகமாக பயன்படுத்துவதால் இதனை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. இரைப்பை, நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட நோய்களை நோக்கி மைதா உணவுகள் அழைத்துச் செல்கின்றன.
அமெரிக்கா, சைனா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மைதாவில் உணவுப் பொருட்கள் தயாரிப்பது தடை செய்யப்பட்டு விட்டது. இந்த நாடுகளில் வேறு தானிய வகை மாவுகளை பயன்படுத்தி மைதாவால் தயாரிக்கப்பட்டு வந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். மைதாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் ரசாயன கலவை கொண்ட மைதாவை தடைவிதிக்க சட்டப்படியான நடவடிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அந்த உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தெரியவில்லை.
மைதா உணவுகளை அறிமுகப்படுத்திய மேற்கத்திய நாடுகள் பல அவற்றிற்கு தடை விதித்து விட்டன. பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திய நாம் மைதா உணவு கலாச்சாரத்துக்கு மாறி இருக்கிறோம். இத்தகைய நிலை தனி மனித உடல் நலத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதல்ல. இந்நிலையில் அரசு மைதா உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்குமா? நாமும் மைதா உணவு பொருட்கள் இருந்து விலகி இருப்போமா? இவையெல்லாம் நம் முன் எழுந்துள்ள கேள்விகளாகும்.