அமைவிடம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் உள்ள ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜவ்வாது மலை தொடரின் ஒரு நீட்சியாக அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 220 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும் வேலூரிலிருந்து 100 கி.மீ தூரத்திலும் ஏலகிரி மலை உள்ளது. ஏலகிரிக்கு செல்ல திருப்பத்தூருக்கும் வாணியம்பாடிக்கும் இடையே உள்ள பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலை பாதையில் 14 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
மக்கள்
ஏலகிரி முழுவதுமே ஒரு காலத்தில் ஏலகிரி ஜமீன்தார் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. இது 1950 -களின் முற்பகுதியில் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது ஏலகிரி மலையில் சுமார் 200 முதல் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது வெள்ளாளர் மற்றும் இருளர் இனத்தைச் சார்ந்த நான்காயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். ஏலகிரியில் தக்காளி, பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மாம்பழம், கொய்யா, பலா மற்றும் வாழை போன்ற பல்வேறு வகையான விளைச்சல் உள்ளது.
இயற்கை
நான்கு மலைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் ஏலகிரி ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பத்துடன் உள்ளது. ஏலகிரியின் மிக உயரமான இடமான சுவாமிமலை மலை 4,338 அடி உயரத்தில் உள்ளது. சுவாமிமலை மலையேற்றம் செய்பவர்களுக்கான முக்கியமான இடமாகவும் காட்சிப் புள்ளியாகவும் (view point) உள்ளது. உயரமான மலைத்தொடர், பசுமையான வனம், இயற்கை பூங்கா, சுவாமி மலை முருகன் கோயில், நிலாவூர் ஏரி உள்ளிட்ட அம்சங்களுடன் மக்களின் மனதை வசீகரிக்கும் இடமாக ஏலகிரி விளங்குகிறது.
சுற்றுலா
ஊட்டி, கொடைக்கானல் போன்ற பிரபலமான மலை வாழிடங்கள் போல புகழ் பெற்ற மலை வாழிடமாக ஏலகிரி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இங்கு தனியார் தங்குமிடங்கள் சிலவும் அரசின் பயணியர் விடுதிகளும் உள்ளன. சுற்றி பார்ப்பதற்கான இடங்கள் குறைவாக இருந்தாலும் இயற்கை பிரியர்களுக்கும் மலையேற்ற பயிற்சியாளர்களுக்கும் விருப்பமான இடமாக ஏலகிரி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கின்றனர்.
பூங்கானூர் ஏரி
புங்கனூர் ஏரி மனிதனால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான செயற்கை ஏரிகளில் ஒன்றாகும். ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் அதிகம் பார்வையிட்ட இந்த ஏரியின் பரப்பளவு 60 சதுர மீட்டர் ஆகும். இந்த ஏரியில் சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரியின் மத்தியில் செயற்கை ஊற்று ஒன்றும் ஏரியின் அருகே குழந்தைகளுக்கான பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் அருகே மங்கலம் கிராமத்தில் மூலிகை பண்ணை ஒன்றும் அரசு பழப் பண்ணை ஒன்றும் உள்ளது. இங்கு மூலிகைகளும் மலையில் விளையும் பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
நிலவூர் ஏரி
புங்கனூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிலவூர் ஏரி இயற்கையாக அமைந்துள்ளது. இதன் அருகே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு படகுத்துறை சுற்றுலா துறையினரால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னுமிடத்தில் மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே நீர்வீழ்ச்சியாக 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவிக்கு அருகே சிவலிங்கம் வடிவில் உள்ள கோவிலில் முருகனை மக்கள் வழிபடுகின்றனர். நிலவூர் கிராமத்தில் இருந்து மலைப்பாதையில் 5 கி.மீ நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இவ்வாறு நடந்து மலையேற்றம் செய்யும்போது கண்கொள்ளாக் காட்சிகளை பார்க்கலாம். திருப்பத்தூரில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம். மூலிகை வனத்தின் மத்தியில் இந்த அருவி அமைந்துள்ளதால் இங்கு குளிப்பது நோய்களை தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.
சுவாமி மலை
ஏலகிரியில் மங்கலம் கிராமத்தில் இருந்து சுற்றுலாத்துறையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் சுவாமி மலை என்ற அழகிய சிவன் கோவில் உள்ளது. புங்கனூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிலாவூரில் அம்மன் கோயிலும் அதன் அருகே பூங்காவும் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஏலகிரி தாயார் சமேத கல்யாண வேங்கடரமண சுவாமி திருக் கோவிலில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரில் இருந்து வருபவர்களும் தரிசனம் செய்கின்றனர்.
பாராகிளைடிங் பயிற்சி
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டபோது பாரா கிளைடிங் பறப்பதற்கான உகந்த காற்று ஏலகிரி மலையில் வீசுவதால் ‘பாரா கிளைடிங்’ சாகசம் அறிமுகம் செய்யப்பட்டது. பாரா கிளைடிங் மூலம் ஏலகிரியின் மொத்த இயற்கை அழகையும் ரசிக்க முடியும். இதில் பறந்து அழகை ரசிக்க பல சுற்றுலா பயணிகள் இங்கு வந்த நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கட்டணம் அதிகமாக இருப்பதாலும் . பாரா கிளைடிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே ஏலகிரி மலையில்தான் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் புங்கனூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அத்தனாவூரில் பாராகிளைடிங் பயிற்சி நடைபெறுகிறது.
தொலைநோக்கி இல்லம்,
ஏலகிரி மலை பாதையில் கடைசி கொண்டை ஊசி வளைவில் வனத்துறையின் சார்பில் தொலைநோக்கி இல்லம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளை கண்டு ரசிக்க முடியும். இரவு நேரங்களில் தொலைநோக்கி வழியாக பார்க்கும் போது ஏலகிரி மலையில் இருந்து கீழே வாகனங்கள் செல்வது கூட்டமாக மின் விளக்குகள் நகர்வது போல அழகிய தோற்றத்தை தருகின்றன.
கட்டிடக்கலை
தனியாருக்கு சொந்தமான தங்க கோட்டை என்று அழைக்கப்படும் மாளிகை ஏலகிரியில் முக்கிய காட்சி மையமாக திகழ்கிறது. இந்த மாளிகையில் ஐரோப்பிய கட்டிடங்களை போல வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் ஒரு பகுதியிலும் செட்டிநாடு பகுதியை நினைவூட்டும் கட்டிடங்கள் ஒரு பகுதியிலும் கல் கோட்டைகளை கொண்ட கட்டிடங்கள் ஒரு பகுதியிலும் அக்ரஹாரத்தை நினைவூட்டும் கட்டிடங்கள் ஒரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் செல்ல ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 300/- க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கோடையில் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரிக்கு போவோமா ?