சிரமத்தில் இருப்பவர் கோயிலுக்குச் சென்று தமது சிரமங்களை என போக்கலாம் என நினைத்தால் கோயிலில் இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் என்று உள்ளூரில் கூறுவது உண்டு. அதேபோலவே, உடல்நலம் பாதிக்கும் போது மருந்து மாத்திரைகளால் உடல் நலத்தை சரி செய்யலாம் என்று நம்பி மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கினால் அந்த மருந்துகள் உயிரை எடுப்பனையாக இருக்கின்ற அவலம் வேதனை தரக் கூடியதாக உள்ளது.
இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), பாராசிட்டமால் மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிற மருந்துகள் உட்பட 53 மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை ஆய்வு செய்த போது உரிய தரத்தில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றில் 48 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை உடையவை அல்ல என்றும் ஐந்து வகையான மருந்துகள் போலியானவை என்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பாராசிட்டமால் மாத்திரைகள் (500 மி.கி.), சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு எதிர்ப்பு மருந்து (diabetics) க்ளிமிபிரைடு, உயர் இரத்த அழுத்த சிகிச்சைகளுக்குப் (BP) பயன்படுத்தப்படும் டெல்மா எச் (டெல்மிசார்டன் 40 மி.கி.), கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் ஷெல்கால் சி மற்றும் டி3 மற்றும் தோல் நோய்த்தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெட்ரானிடசோல் மாத்திரைகள் ஆகியன தரப் பரிசோதனையில் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வாமை நோயை நீக்க பயன்படுத்தப்படும் ஃபெக்ஸோஃபெனாடின் ஹைட்ரோ குளோரைடு மருந்தும் வாய்வழி தோற்றுக்கு பரிந்துரைக்கப்படும் கிளாவம் 625 மருந்தும் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்துக்கு பரிந்துரைக்கப்படும் பேன் டி மருந்தும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் லிமிடெட், அல்கேம் லேபரட்டரீஸ், லைஃப் மேக்ஸ் கேன்சர் லேபரட்டரீஸ் மற்றும் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் போன்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பல அதிக விற்பனையான மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள் பட்டியலில் உள்ளன.
போலியான மருந்துகள் என கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சன் பார்மாவின் புல்மோசில் அமில வீக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பான்டோசிட் மற்றும் உர்சோகோல் 300, அத்துடன் க்ளென்மார்க்கின் உயர் இரத்த அழுத்த மருந்து டெல்மா எச் மற்றும் மூட்டு மற்றும் தசை பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் மேக்லியோட்ஸ் பார்மாஸ்வின் டிஃப்கார்ட் 6 உட்பட ஐந்து ஆகியன உள்ளன.
சுகாதாரம் தொடர்பான பணிகளை புரியும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகளை கையாளுபர்கள் ஆகியோர்களை நெறிப்படுத்துவதற்காக தேசிய மருத்துவ ஆணையம், பல் மருத்துவ கவுன்சில், இந்திய செவிலியர் கவுன்சில், பார்மசி கவுன்சில் ஆகிய செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இல்லாத சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான தொழில்களை புரிபவர்களை வரைமுறைபடுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய தொழில் புரிபவர்களுக்கான தேசிய ஆணைய சட்டம் (National Commission for Allied and Healthcare Professions (NCAHP) Act, 2021 இயற்றப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
மக்களுக்கு மருத்துவம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், சுகாதாரம் தொடர்பான எந்த ஒரு நெறிமுறை அமைப்புகளுக்குள்ளும் வராத சுகாதாரம் தொடர்பான தொழில்களை புரிபவர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் அம்சங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தாதது வியப்பாக உள்ளது.
மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் வாழ்க்கை அறிவியல் தொடர்பான மையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் நிபுணர்கள், ட்ராமா, பர்ன் கேர் மற்றும் சர்ஜிகல்/அனெஸ்தீசியா தொடர்பான தொழில்நுட்ப நிபுணர்கள், பிசியோதெரபி நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், அக்குபேஷனல் தெரபி நிபுணர்கள், சமூக பராமரிப்பு, நடத்தை சுகாதார அறிவியல் மற்றும் பிற வல்லுநர்கள், மருத்துவ கதிரியக்கவியல், இமேஜிங் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் மருத்துவ அசோசியேட்ஸ் மற்றும் சுகாதார தகவல் மேலாண்மை மற்றும் சுகாதார தகவல் வல்லுநர் ஆகியோரின் பணிகளை நெறிப்படுத்துவது சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய தொழில் புரிபவர்களுக்கான தேசிய ஆணையத்தை வலுப்படுத்துவதும் மாநிலங்களில் அதற்கான கவுன்சில்களை உடனடியாக அமைப்பதும் அவசியமான ஒன்றாகும்.
மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனைகள் மருத்துவம் தொடர்பான துறை சேவைகள் உள்ளிட்டவற்றை நெறிப்படுத்தி கலப்பட மருந்துகளை தடுத்து மக்களின் நலனை காக்கும் பணியை திறம்பட செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.