பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டத்திலும் (Pradhan Mantri Suraksha Bima Yojana) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் பணம் செலுத்தி காப்பீடு செய்திருந்தவர் இறந்து விட்டதால் காப்பீட்டு தொகைகளை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இறந்தவரின் வாரிசுகளுக்கு காப்பீட்டு தொகையும் காலதாமதத்திற்கான வட்டியும் சேவை குறைபாட்டுக்காக இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள பள்ளி பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் அப்புசாமி (50). இவர் சொந்தமாக லாரி வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாமக்கல்லில் இருந்து பஞ்சாப்புக்கு சென்று அங்கு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார். இறந்த அப்புசாமி பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் நாமக்கல் அருகே உள்ள வேலகவுண்டன்பட்டி கிளை இந்தியன் வங்கியில் பிரீமியம் செலுத்தி சேர்ந்திருந்தார். இதே போலவே யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் லாரிக்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததோடு அதனுடன் இணைந்த தனிநபர் காப்பீட்டு பாலிசியையும் எடுத்திருந்தார்
அப்புசாமி விபத்தில் இறந்த பின்னர் அவரது மனைவி கௌரி காப்பீட்டு தொகைகளை தமக்கும் அப்புசாமியின் மகன் ரஞ்சித், மகள் மோகனப்பிரியா மற்றும் தாயார் தாயம்மாள் ஆகியோருக்கும் வழங்குமாறு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், காப்பீட்டுத் தொகையை வழங்க வங்கியும் இன்சூரன்ஸ் நிறுவனமும் காலதாமதம் செய்து வந்ததால் பணத்தை வழங்க கேட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இறந்து போன அப்புசாமிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்து வந்துள்ளது என்றும் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு நின்றிருந்த காரின் மீது மோதியதில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் நெஞ்சுவலியின் காரணமாக அப்புசாமி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதால் அவரது இறப்பு இயற்கையானது என்றும் விபத்தில் காயம் காரணமாக இறந்தால்தான் விபத்து காப்பீட்டு தொகை வழங்க முடியும் என்றும் வங்கியும் இன்சூரன்ஸ் நிறுவனமும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிவுற்றிருந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் இறந்தவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தது என்று கூறுவதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. நின்றிருந்த வாகனத்தின் மீது அப்புசாமி ஓட்டிச் சென்ற லாரி மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தாலும் லாரியை ஓட்டிக் கொண்டிருக்கும் போது விபத்து நடந்துள்ளதால் அப்புசாமி விபத்தின் காரணமாகவே இறந்ததாக எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றத்தில் விபத்து காப்பீடு வழங்க ஏன் தேவையில்லை என கூறும் வங்கியும் இன்சூரன்ஸ் நிறுவனமும் 2016 ஆம் ஆண்டு அப்புசாமி இறந்த நாளிலிருந்து தற்போது வரை அவரது குடும்பத்தினர் இன்சூரன்ஸ் பணத்தைக் கேட்டு விண்ணப்பித்தும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக அல்லது தள்ளுபடி செய்வதாக எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்தது சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டம் ஒவ்வொரு குடிமகனும் விபத்து காப்பீட்டு பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. வங்கியில் கணக்கு வைத்துள்ள நுகர்வோர்களிடம் சிறிய தொகை பெற்றுக் கொண்டு இத்திட்டத்தின் மூலம் காப்பீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இறந்து போன அப்புசாமி ரூபாய் 12 செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்துள்ளார். அவர் இறந்துவிட்ட நிலையில் காப்பீட்டுத் தொகை ரூபாய் 2 லட்சத்தை அற்ப காரணங்களை கூறி பணம் வழங்க மறுப்பது தவறானது. இன்சூரன்ஸ் நிறுவனமும் ஆண்டு பிரிமியமாக லாரி காப்பீட்டுக்கும் ரூபாய் 2 லட்சத்துக்கான தனிநபர் காப்பீட்டுக்கும் ரூபாய் 26 ஆயிரம் பிரிமியம் பெற்றுக் கொண்டு நுகர்வோர் இறந்த பின்னர் அவரது வாரிசுகளுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருப்பது பெருத்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு வார காலத்துக்குள் இறந்து போன அப்புசாமியின் மனைவி, மகன், மகள் மற்றும் தாயாருக்கு வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை காப்பீட்டு தொகை தலா ரூபாய் இரண்டு லட்சத்தை (மொத்தம் ரூ 4.00,000/-) அப்புசாமி இறந்த நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆறு சதவீத வட்டி சேர்த்து வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வங்கியும் இன்சூரன்ஸ் நிறுவனமும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக தலா ரூ 25,000/_ (மொத்தம் ரூ 50,000/-) வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.