பொதுவாக பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்துகளை ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் பெற்ற பேருந்துகள், சுற்றுலா அனுமதி பெற்ற பேருந்துகள் (tour permit), ஒப்பந்த அனுமதி பெற்ற பேருந்துகள் (contract permit) என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் பெற்ற பேருந்துகள் என்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வழிதடத்தில் வழக்கமாக பேருந்துகளை இயக்கி அந்த வழித்தடத்தில் எங்கு வேண்டுமென்றாலும் பயணிகளை ஏற்றியும் இறக்கியும் விடும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட பயண கட்டணத்தை பெற்று சேவை புரியும் பேருந்துகளாகும். உதாரணமாக, மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் பேருந்துகள் போன்ற தொலைதூரப் பேருந்து வகைகளையும் ஒரு நகரத்திலிருந்து ஒரு கிராமத்துக்கு தினமும் இயக்கப்படும் உள்ளூர் பேருந்து வகையிலும் கூறலாம். இந்த வகை பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த பேருந்துகளில் அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா அனுமதி பெற்ற பேருந்துகள் என்பது என்னவென்றால் ஒரு குழுவினர் ஒரு பேருந்தை முன்பதிவு செய்து ஒரு இடத்திலிருந்து கிளம்பி பல இடங்களுக்கு சென்று விட்டு மீண்டும் அதே இடத்துக்கு திரும்ப அவர்களை அழைத்து வந்து விடுவது என்பதாகும். (டூர் சர்க்யூட்) இந்த வகை பேருந்துகளில் முன்பதிவு செய்யும் குழுவினரை தவிர மற்றவரை பயணத்தின் இடையில் ஏற்றவோ இறக்கவோ கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த அனுமதி பெற்ற பேருந்துகள் என்பது என்னவென்றால் ஒரு குழுவினரை ஒரு இடத்தில் இருந்து வேறு ஏதாவது ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டு திரும்பி வருவது அல்லது பள்ளி, தொழிற்சாலைகளுக்கு தினமும் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் மாணவர்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் மட்டும் பேருந்து இயக்குவது என்பதாகும்.
ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு சாதாரணமாக பயணிகளை அழைத்து செல்வதற்கும் வழித்தடத்தில் எந்த ஒரு பயணியையும் ஏற்றிக் கொள்ளவும் இறக்கி விடவும் இயக்கப்படும் பேருந்து ஸ்டேட் கேரியர் அனுமதி இல்லாமல் இயங்கக்கூடாது என்பது அமலில் உள்ள சட்டமாகும். இந்த பேருந்துகளில் மட்டுமே அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பல ஆம்னி பேருந்துகள் ஸ்டேஜ் கேரியர் அனுமதியை அரசிடம் பெறாமல் வெளிமாநிலங்களில் சுற்றுலா அனுமதியைப் பெற்றுக் கொண்டு தினமும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த வாகனங்களில் பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்வதே கட்டணம் ஆகும்.
ஆம்னி பேருந்துகளில் விழா காலங்களில் விமான கட்டணத்தை போல பேருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுவதோடு சாதாரண நாட்களில் குறைந்த பயணிகள் வருவார்கள் என்றால் வேறு பேருந்துகளுக்கு மாற்றி விடுவதும் பேருந்து இயக்குவதை ரத்து செய்து விடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
அருணாச்சலப் பிரதேச அரசின் போக்குவரத்து துறையில் சுற்றுலா பேருந்துக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெங்களூரில் இருந்து சென்னைக்கு தினமும் இயங்கி வந்த ஆம்னி பேருந்து ஒன்று ஆம்பூர் அருகே விபத்து ஏற்பட்டதால் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு பணத்தை வழங்காததால் பேருந்து உரிமையாளரால் தொடரப்பட்ட வழக்கை கடந்த மே மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தீர்ப்பில் கூறியுள்ள கருத்து பின்வருமாறு. “ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் இல்லாத பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது பயண சீட்டு வழங்கி பயணிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்றிக்கொண்டு, இறக்கிவிட்டு செல்வது தங்களுக்கு ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் உள்ளது என பயணிகளுக்கு தெரிவிப்பதற்கு ஒப்பான செயலை செய்வதாகும். இத்தகைய செயல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,2019, பிரிவு 2(47)d -ன்படி நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,2019, பிரிவு 39(1)g -ன்படி இதனை தடை செய்ய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் இல்லாமல் ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் உள்ள வாகனங்களை போல செயல்படும் பேருந்துகளை கண்டறிந்து நியாயமற்ற வர்த்தக நடைமுறையை நிறுத்த வேண்டியது போக்குவரத்து துறையின் கடமையாகும்”.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஆம்னி பேருந்துகள் குறித்து தீர்ப்பில் வழங்கிய கருத்து முக்கியத்துவம் பெறும் நிலையில் வெளி மாநிலங்களில் போக்குவரத்து துறையில் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14ஆம் தேதிக்கு பின்னர் இயக்குவதற்கான அனுமதி கிடையாது என தமிழக அரசின் போக்குவரத்து துறை நேற்று முன் தினம் அறிவித்து இருப்பது கவனிக்கத்தக்கது.
பொதுமக்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணிக்க இயக்கப்படும் பேருந்துகள் ஸ்டேஜ் கேரியர் அனுமதி பெற்றவைகளாக மட்டும் சட்டப்படி இருக்க வேண்டும் என்ற நிலையில் இத்தகைய சேவையை வழங்கும் ஆம்னி பேருந்துகளுக்கும் கட்டாயம் ஸ்டேஜ் கேரியர் அனுமதி இருக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டு அரசால் நிர்ணயம் செய்யப்படும் கட்டணம் மட்டுமே ஆம்னி பேருந்துகளில் தினமும் வசூலிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.