spot_img
November 21, 2024, 2:06 pm
spot_img

சுற்றுலா அனுமதி பெற்று பயணிகள் பேருந்தாக இயக்குவது நியாயமற்ற வர்த்தக நடைமுறை-நீதிமன்றம் தீர்ப்பு

அருணாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்தின் உரிமையாளர் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த வழக்கை இன்று (21-05-2021) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் விவரம் வருமாறு.

கோயம்புத்தூர் நியூ சித்தாபுதூரில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் ரகுநாதன் (52).  தாம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியிருப்பவர் என்றும்  தற்காலிகமாக கோயம்புத்தூரில் வசிப்பதாகவும் கூறி ரகுநாதன் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கடந்த 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்தார். 

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் போக்குவரத்து துறையில் பேருந்தை பதிவு செய்து சுற்றுலா அனுமதி (tour permit) பெற்று பெங்களூரில் இருந்து 2017 செப்டம்பர் இரண்டாம் தேதி அன்று சென்னைக்கு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது ஆம்பூர் அருகே விபத்து ஏற்பட்டு விட்டது. விபத்தால் சேதம் அடைந்த பேருந்து பழுது நீக்க ரூ 42,80,000/- தேவைப்படுகிறது.  இதனை வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது காப்பீட்டுத் தொகையை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் பேருந்தை சரி செய்யவும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்காகவும் ரூபாய் 60 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கில் ரகுநாதன் கோரியிருந்தார்.

இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக கோயம்புத்தூரில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் அருணாச்சலப் பிரதேச அரசிடம் சுற்றுலா பேருந்துக்கான அனுமதியைப் பெற்று விட்டு பயணிகளை பயண கட்டணம் பெற்று ஏற்றிச்செல்லும் ஸ்டேஜ் கேரியர் பேருந்தை போல பெங்களூரில் இருந்து சென்னைக்கு பேருந்தை இயக்கியுள்ளது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 

அருணாச்சல பிரதேச அரசு வழங்கிய சுற்றுலா பேருந்து   அனுமதியில் பேருந்தை ஸ்டேஜ்  கேரியர் (stage carrier permit) பேருந்தாக இயக்கக் கூடாது  என்ற நிபந்தனையை வழக்கு தாக்கல் செய்தவர் மீறி உள்ளதால் விபத்தில் பேருந்துக்கு ஏற்பட்ட  சேதத்துக்கான பணத்தை தர இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட இயலாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு அல்லது ஒரு கிராமத்துக்கு  மக்கள் பயணிப்பதற்காக இயக்கப்படும் பேருந்துகள் அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்பட இயலும். இந்த வழித்தடத்தில்  இடையில்   உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் பயணிகளை இறக்கி விடவும் ஏற்றுக்கொள்ளவும் அனுமதி பெற்ற பேருந்துகளுக்கு மோட்டார் வாகன சட்டம் ஸ்டேஜ் கேரியர் பெர்மிட்   வழங்க வழி வகுத்துள்ளது. சுற்றுலாவிற்கும் (tour permit) ஒப்பந்த அடிப்படையிலும் (contract permit) பயணிகளை   ஏற்றிச்செல்ல வழங்கப்படும் அனுமதிகள் ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் வகையை சேர்ந்தவை அல்ல.

ஸ்டேஜ் கேரியர் பெர்மிட் இல்லாமல் கான்ட்ராக்ட் அல்லது சுற்றுலா பெர்மிட் பெற்று விட்டு பயணிகளை பயணச்சீட்டு வழங்கி பயணிகளை அழைத்துச் செல்வது   அரசு வழங்காத அனுமதியை வழங்கியது போல பயணிகளுக்கு தெரிவிப்பதாகும். இத்தகைய நடைமுறை நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிவிடி
ஜிவிடி
நிர்வாக அலுவலர், அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்