நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முத்துசாமி மகன் ராஜா (52) பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரூ 12 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜா தாக்கல் செய்த வழக்கில் கூறி இருப்பதாவது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதால் ராசிபுரத்தில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்தேன். அவர் சோதனை செய்து பார்த்துவிட்டு குடலிறக்க பிரச்சனை இருப்பதாகவும் உடனடியாக ஹெர்னியா ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 60 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு வேறு ஒரு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் மருத்துவர் தமக்கு அறுவை சிகிச்சையை தொடங்கினார். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்த போது தமக்கு அரை மயக்க நிலை இருந்தது. திடீரென அறுவை சிகிச்சை செய்வது பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சைக்கு தேவையான கார்பன் டை ஆக்சைடு கேஸ் தீர்ந்து விட்டதாக அங்கிருந்த நர்சுகள் பேசிக் கொண்டார்கள்.
வேறு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக கேஸ் பெற முயற்சித்தும் கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்த காலி சிலிண்டர்களில் மீதமிருந்த வாயுவை சேகரித்து அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினர். அறுவை சிகிச்சை செய்ய கால தாமதம் ஏற்பட்டதால் தமக்கு வழங்கப்பட்டிருந்த மயக்க மருந்து வலுவிழந்து தமக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்யும்போது மிகுந்த வலியால் துடித்து அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட போது நர்சுகள் தம்மை அழுத்தி பிடித்துக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை செய்த பின்னர் தலையை நிமிர்த்த முடியவில்லை. நிமிர்த்தினால் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனை கூறியும் மருத்துவர் தம்மை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். இதன் பிறகு நான்கு முறை மருத்துவரை சந்தித்தும் சரியான சிகிச்சையை தமக்கு வழங்கவில்லை. தலையை நிமிர்த்த முடியாமல் சாப்பிட முடியாமல் ஏழு கிலோ எடை தமக்கு குறைந்துவிட்டது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை மோசமானதால் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் (Royal Care Hospital) உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தேன். அங்கு அறுவை சிகிச்சை செய்த போது பொருத்தப்பட்ட வலையில் (mesh) தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சையின் போது காலதாமதம் செய்ததாலும் தரமான வலையை பொருத்தாததாலும் தரமற்ற வாயுவை அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தியதாலும் உடலில் தொற்று ஏற்பட்டு இருதயம் வரை பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வேறு வலையை பொருத்தினார்கள். முதலாவது தமக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அலட்சியமாக சிகிச்சை செய்து சேவை குறைபாடு புரிந்துள்ளதால் தக்க இழப்பீட்டை உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
மருத்துவமனை தரப்பில் வழக்கு தாக்கல் செய்தவருக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு தொற்று ஏற்படவில்லை. தங்களது தரப்பில் சேவை குறைபாடு எதுவும் ஏற்படவில்லை. தீய நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று (16-07-2024) வழங்கிய தீர்ப்பில் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து மேல் சிகிச்சை வழங்கிய மருத்துவமனை ஆவணங்களின்படி முதலாவது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அலட்சியமான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது அறுவை சிகிச்சைக்கு வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய ரூ 60,000/-, முதலாவதாக அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய செலவு செய்த தொகை ரூ 8,74,825/- , தவறான அறுவை சிகிச்சையின் காரணமாக வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு ரூபாய் 2 லட்சம் மற்றும் வழக்கின் செலவு தொகை ரூ 15,000/- ஆக மொத்தம் ரூ 11,99,825/- ஐ நான்கு வாரத்திற்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு முதலாவது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.