நாமக்கல்லில் உள்ள கணேசபுரத்தில் வசித்து வருபவர் நல்லசாமி மகன் சுப்பிரமணி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் நிதி நிறுவனத்தின் மீது வழக்கில் தெரிவித்துள்ளதாவது.
சென்னையில் உள்ள தனியார் (டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸ்) நிறுவனத்திடம் ரூ.71,393/- கடந்த 2022 நவம்பர் மாதத்தில் கடன் பெற்று இரு சக்கர வாகனத்தை (டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்) வாங்கினேன். கடன் வழங்கிய நிறுவனம் எந்த அறிவிப்பும் இன்றி கடந்த 2023 மே மாதத்தில் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விற்பனை செய்து விட்டார்கள். வாகனத்தை விற்ற பின்னரும் கடன் நிலுவைத் தொகையை செலுத்துமாறு நிதி நிறுவனம் நிர்ப்பந்தம் செய்து வருகிறது. கடன் வழங்கிய நிறுவனம் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டது சேவை குறைபாடாகும். இதனால் நிதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரமணி புகாரில் தெரிவித்துள்ளார்.
கடன் ஒப்பந்தப்படி 24 மாதங்களுக்கு மாதத் தவணையாக ரூ.3820/- செலுத்துவதாக ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர் முதல் இரண்டு தவணைத் தவணைகளுக்காக மாதாந்திர தவணைகளுக்காக காசோலைகளை வழங்கியிருந்தார். அந்த காசோலைகளும் பணம் இல்லை என திரும்ப வந்துவிட்டன. இதன் பின்னர் இரண்டு மாத தவணைகளை காசோலைகள் திரும்ப வந்ததற்கான கட்டணங்களுடன் வாடிக்கையாளர் செலுத்தினார். அதன் பின்பு நான்கு மாத தவணை தொகைகளை வாடிக்கையாளர் செலுத்தவில்லை. இதனால் கடன் ஒப்பந்தப்படி சட்ட வழிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளரிடமிருந்து வாகனத்தை கைப்பற்றி விற்பனை செய்தோம். தாங்கள் எவ்வித சேவை குறைபாடும் புரியவில்லை என்று நிதி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான ஆய்வு அமர்வு நேற்று (09-07-2024) வழங்கிய தீர்ப்பில் வழக்கு தாக்கல் செய்தவர் கடன் ஒப்பந்தப்படி மாத தவணை தொகைகளை செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதே சமயத்தில் நிதி நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் வாகனத்தை விற்பனை செய்ததற்கு ரூ.10,254/- இழப்பீடாகவும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.4,668/- இழப்பீடாகவும் ரூ.2,000/- வழக்கின் செலவு தொகையாகவும் (மொத்தம் ரூ 16,922/-) நான்கு வார காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்த வாகன உரிமையாளருக்கு நிதி நிறுவனம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையிலிருந்து நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து கொண்டு வழக்கு தாக்கல் செய்தவர் நிதி நிறுவனத்துக்கு எவ்வித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்று சான்றிதழை வழங்குமாறும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.