மும்பையில் அரசு பேருந்துகளில் மொபைல் போன் உபயோகத்துக்கு சமீபத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேருந்தில் பயணிக்கும் போது மொபைலில் சத்தமாக பேசுவதற்கும் மொபைல் மூலம் சத்தமாக பாட்டு, இசை கேட்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இயர் போன் பயன்படுத்தி மொபைலில் பேசுவதற்கும் எதையாவது கேட்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ரயில் பயணத்தின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைலை பயன்படுத்தி சத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்று ரயில்வே பயணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது மொபைல் போன் உபயோகப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் ரயில் பயணங்களின் போதும் பொது இடங்களிலும் மொபைல் போனில் சத்தமாக பேசுவதாலும் மற்றும் பாடல்கள் போன்றவற்றை கேட்பதாலும் மற்றவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால் பல சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு குற்ற நிகழ்வில் முடிந்துள்ளன இன்னும் சொல்லப்போனால் பலர் இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு பயணிப்பதால் அவருக்கு விபத்து ஏற்படுவதோடு பிறருக்கும் விபத்துக்கள் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை உருவாக்குகிறது.
பெருநகரங்களில் பொது இடங்களில் மொபைல் போனில் பேசிக் கொண்டு செல்லும்போது அதனை பறித்துச் செல்லும் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. மொபைல் போனில் பல ஏமாற்று செயலிகள் மக்களிடம் பணம் பறிக்கும் வேலையையும் செய்வது அதிகரித்துள்ளது. மொபைல் போன் உபயோகத்தால் பலர் நேரத்தை வீணடித்து தொடுதிரை அடிமைகளாக மாறிப் போகின்றனர். சிறுவர் சிறுமிகளை மயக்கும் மந்திரத்தை கொண்டுள்ள மொபைல் போன் அவர்களில் பலரது படிக்கும் எண்ணத்தை மழுங்கடிக்க செய்கின்றன இதோடு அவர்களை தவறான பாதைகளுக்கும் சில நேரங்களில் வழிநடத்துகின்றன.
மொபைல் போன் உபயோகத்தை ஒழுங்குபடுத்தாவிட்டால் பலருக்கு தொந்தரவும் பலருக்கு குற்ற நிகழ்வுகளின் பாதிப்பாகவும் பலருக்கு சுய முன்னேற்றத்தின் தடைக்கல்லாகவும் அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது. பாரதி இருந்திருந்தால் என்று முடியும் இந்த மொபைல் போன் மோகம் என்று பாடியிருப்பான். அறிவியலின் வளர்ச்சியால் பிறந்த மொபைல் போன் மிகுந்த நன்மைகளை வழங்குகிறது என்றாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க விட்டால் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் பணியின் போது சொந்த உபயோகங்களுக்காக மொபைல் போன் பேசுவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் பொது இடங்களில் மொபைல் போன் உபயோகத்திற்கும் மொபைல் போன் தீமைகளில் இருந்து மக்களை காப்பதற்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை கொண்ட பொதுச்சட்டம் தேவைப்படுகிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மொபைல் போனால் பாதிக்கும் மக்களை யார் காப்பாற்றுவார்கள்?