ஆடிட்டர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் தொழிலுக்கு படித்து பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். பலர் சொந்தமாக தொழில் செய்கிறார்கள். இதே போலவே கம்பெனி செயலாளர் தொழிலுக்கு படித்து வேலைக்கு போகலாம். தனியாகவும் தொழில் செய்யலாம். இதற்கு எப்படி படிப்பது என்பது குறித்த அடிப்படை விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது அமலில் உள்ள சட்டப்படி பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட பொது அல்லது தனியார் நிறுவனங்கள் முழுநேர நிறுவனச் செயலாளரைக் கொண்டிருக்க வேண்டும். நிறுவனங்கள் சட்டப்படி செயலாளரை நியமிக்க தவறினால் லட்சக் கணக்கில் அபராதம் செலுத்தவும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்கவும் நேரிடும். அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் முழு நேர முக்கிய நிர்வாகப் பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
நிறுவனங்கள் சட்டம், 2013 நிறுவன செயலாளருக்கு முக்கிய நிர்வாகப் பணியாளர் என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. செயலக தணிக்கை (secretarial audit) முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நடைமுறையில் நிறுவனச் செயலர்களுக்கான வாய்ப்புகளை (private practice) சட்டம் அதிகரித்துள்ளது. தற்போதுள்ள வணிக சூழலில் நிறுவன செயலாளர்களுக்கான படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) என்பது பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இந்திய அரசின் பெருநிறுவன விவகார (corporate affairs) அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் நிறுவன செயலாளர்களுக்கான படிப்பில் தேர்ச்சி பெற்ற 70 ஆயிரம் தொழில் வல்லுநர்கள் பல நிறுவனங்களில் அலுவலர்களாகவும் தனியாக தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
நிறுவன செயலாளர்களுக்கான இந்த படிப்பை முதுநிலை பட்டப்படிப்புக்கு இணையானது என்று பல்கலைக்கழக மானிய குழு அங்கீகரித்துள்ளது. இந்த அமைப்பில் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் தற்போது நிறுவன செயலாளர் படிப்பிற்காக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
10+2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிறுவனச் செயலாளர் படிப்பைத் நிறைவு செய்ய மூன்று நிலைகளில் தேர்ச்சி பெற வேண்டும். வணிகச் சூழல் மற்றும் சட்டம், வணிக மேலாண்மை, நெறிமுறைகள் மற்றும் தொழில் முனைவு, வணிகப் பொருளாதாரம், கணக்கியல் மற்றும் தணிக்கையின் அடிப்படைகள் ஆகிய நான்கு பாடங்கள் முதல் நிலையில் (Foundation) உள்ளன. இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் நேரடியாகவும் இரண்டாம் நிலை படிப்பை மேற்கொள்ளலாம்.
பொதுச் சட்டங்கள், நிறுவனச் சட்டம், வணிக நிறுவனங்களை அமைத்தல் மற்றும் மூடுதல், வரிச் சட்டங்கள், கார்ப்பரேட் மற்றும் மேனேஜ்மென்ட் கணக்கியல், மூலதனச் சந்தைகள், பொருளாதாரம் மற்றும் வணிகச் சட்டங்கள், நிதி மேலாண்மை ஆகிய எட்டு பாடங்கள் இரண்டாம் நிலையில் (Executive) உள்ளன. இவற்றில் தேர்ச்சி பெற்றால் மூன்றாம் நிலை (Professional) படிப்பை மேற்கொள்ளலாம். இந்நிலையில் ஒன்பது பாடப்பிரிவுகள் உள்ளன. இதனைத் தவிர கட்டாய பயிற்சிகளையும் படிப்பை முடிக்க நிறைவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிலை படிப்பிற்கும் தனித்தனியான கட்டணங்களும் தேர்வு கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் இரு நூற்றுக்கும்மேற்பட்ட நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர்க்கை பெறுவது எப்படி?, உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.icsi.edu/home/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.