அமைவிடம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைகள் என அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (7200 அடிகள்) உயரத்தில் 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் அமைந்துள்ளது. திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடையே உள்ள கொடைரோடு என்ற ரயில் நிலையத்தில் இருந்து 80 கிலோமீட்டர் பயணித்தால் கொடைக்கானலை அடையலாம். திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வழியாக 100 கிலோமீட்டர் பயணித்தும் கொடைக்கானல் செல்லலாம். பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல பயணிக்க வேண்டிய தூரம் 65 கிலோ மீட்டர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் வழியாகவும் கொடைக்கானலுக்கு மலைப்பாதை இருந்த போதிலும் இப்பாதை போக்குவரத்துக்கு போதுமான வசதி உடையதாக இல்லை.
சரித்திர பின்னணி
கடந்த 1821 -ல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்ற ஆங்கில அதிகாரி கொடைக்கானல் பகுதியில் நில ஆய்வு செய்துள்ளார். இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என இவர் தெரிவித்ததால் 1845 – களில் ஆங்கிலேயர்கள் இங்கு குடியிருப்பு கட்டிடங்களை அமைத்துள்ளனர். போதுமான சாலை வசதிகள் இல்லாததால் ஆங்கிலேயர்கள் குதிரை சவாரி செய்து இங்கு வந்து தங்கி உள்ளனர். கடந்த 1914 ஆம் ஆண்டில்தான் சாலை வசதிகள் கொடைக்கானலுக்கு உருவாக்கப்பட்டது. கடந்த 1899 ஆம் ஆண்டில் சூரிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தை சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். இந்த ஆய்வுக்கூடம் தென்னிந்தியாவின் இந்திய வான்இயற்பியல் பயிலகமாக உள்ளது.
மக்கள்
கடந்த 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி கொடைக்கானல் நகரின் மக்கள் தொகை 36,501. சுமார் 25 சதவீத பட்டியலின மக்களும் 39 சதவீத கிறிஸ்துவ மக்களும் 12 சதவீத இஸ்லாமிய மக்களும் உள்ளனர். ஆனால், இந்நகரில் வசிக்கும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 102 மட்டுமே. பழனி மலைப் பகுதியில் கொடைக்கானலை சுற்றி சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பழனி மலை தொடரில் மிக குறைந்த அளவிலான மலைவாழ் மக்களே தற்போது வசித்து வருகிறார்கள்.
பழனி மலைத் தொடரில் காபி தோட்டங்கள் நிறைந்துள்ளன. இங்கு பலா, மலைவாழை, பிலம்ஸ் போன்ற பழங்களும் பேரிக்காய், அவகோடா, கேரட், முள்ளங்கி, பூண்டு, உருளைக்கிழங்கு போன்றவையும் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் எலுமிச்சை சாகுபடியும் உள்ளது.
சுற்றுலா இடங்கள்
ஒரு காலத்தில் வசதி படைத்த ஆங்கிலேயர் மட்டுமே வந்து தங்கிய கொடைக்கானல் தற்போது அனைவருக்கும் ஏற்ற சுற்றுலா இடமாக விளங்குகிறது. குளிர்ந்த வெப்பநிலையுடன் அடர்ந்த வனப் பகுதிகளும் கொடைக்கானலில் நிறைந்திருப்பது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க காரணமாகும். இங்கு ஏராளமான தங்கும் விடுதிகளும் அரசு துறைகளில் விருந்தினர் மற்றும் பயணிகள் விடுதிகளும் உள்ளன.
கொடைக்கானலுக்குள் செல்வதற்கு முன்பாகவே நுழைவாயிலாக வெள்ளி நீர்வீழ்ச்சி அனைவரையும் வரவேற்கிறது. இங்கு பலரும் அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். கொடைக்கானலில் மற்றொரு பகுதியில் பியர் சோலா நீர்வீழ்ச்சி என்ற நீர்வீழ்ச்சியும் உண்டு.
நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்த நட்சத்திர வடிவ செயற்கை ஏரி கடந்த 1863 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதாகும். கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பார்க் என அழைக்கப்படும் தாவரவியல் பூங்கா நூற்றுக்கணக்கான அழகான தாவரங்களையும் மலர்களையும் கொண்டு அமைந்துள்ளது,
கொடைக்கானலில் உள்ள மோயர் முனை பகுதியில் (moyar view point) இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் 24 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பேரீச்சம் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும். இந்த ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட காட்சி முனைகளும் (view points) உள்ளன. இப்பகுதியில் அதிகமான மூலிகை செடிகளும் மான், மலைப்பன்றி, காட்டுமாடு, செந்நாய், சிறுத்தை, காட்டு கோழி போன்ற உயிரினங்களும் உள்ளன.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் 1936 ஆம் ஆண்டு இந்து சமயத்துக்கு மதம் மாறிய ஐரோப்பிய அம்மையாரால் கட்டப்பட்ட குறிஞ்சி ஆண்டவர் கோவில் என அழைக்கப்படும் முருகன் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் உலகப் புகழ்பெற்ற காட்சி முனையாக மாறி உள்ளது. 1991 ஆம் ஆண்டில் “குணா” தி தமிழ் திரைப்படத்தின் மூலம் இந்த குகை பிரபலம் அடைந்ததால் குணா குகை என அழைக்கப்பட்ட போதிலும் இந்த குகைக்கு சாத்தானின் சமையலறை (டெவில்ஸ் கிச்சன்) என்று 1821 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் பெயரிட்டு இருந்தனர். இதை போலவே தற்கொலை முனை (suicide point) என்று அழைக்கப்படும் காட்சி முனையிலிருந்து குதித்து பலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால் இந்த காட்சி முனை முள்வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. டால்பின் மூக்கு போன்று காட்சி அளிக்கும் 6600 அடி ஆழமுடைய பள்ளம் உள்ள பாறை டால்பின் நோஸ் மற்றொரு காட்சி முனையாகும்.
கொடைக்கானல் ஏரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மேகங்களின் மீது நடப்பது போல உணர்வு காணப்படும் கோக்கர்ஸ் வாக் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை 1872 ஆம் ஆண்டு கண்டுபிடித்த லெப்டினன்ட் கோக்கரின் நினைவால் இப்பகுதி கோக்கர்ஸ் வாக் என அழைக்கப்படுகிறது. தூண் பாறைகள், தொப்பித் தூக்கிப் பாறைகள், அப்பர் லெக், செண்பகனூர் அருங்காட்சியம், தொலைநோக்கிக் காப்பகம் போன்ற சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களும் கொடைக்கானலில் உண்டு.
பேரீச்சம் ஏரிக்கு செல்லும் வழியில் 15 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படும் மர்மங்கள் நிறைந்த மதிகெட்டான் சோலை உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் மூலிகைகள் நிறைந்ததாக இருப்பதோடு சூரியனின் ஒளி புகாத அளவிற்கு அடர் காடாக உள்ளது. இந்த காட்டிற்குள் சென்றவர்கள் திரும்பி வந்ததாக தெரியவில்லை. இந்தப் பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
காப்பாற்ற வேண்டும்
பழனி மலைத்தொடரையும் கொடைக்கானல் பிரதேசத்தையும் வழங்கியுள்ள இயற்கை கொடைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயற்கையான பணிகளால் இயற்கை அழகு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. பழனி மலை தொடர் மற்றும் கொடைக்கானலில் இயற்கையை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்றாகும். இது தொடர்பாக பிரத்யோகமான கட்டுரை விரைவில் வெளியாகும்.