spot_img
January 29, 2025, 5:20 am
spot_img

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநில தலைவருடன் ஒரு நேர்காணல்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள்  சங்கங்களின் கூட்டமைப்பு எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகிறது?

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞர்களின் சங்கங்களை ஒருங்கிணைத்து வழக்குரைஞர்கள் தொழில் ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காண தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு   பணியாற்றி வருகிறது. நீதித்துறைக்கும் வழக்குரைஞர்களுக்கும் – காவல்துறைக்கும் வழக்குரைஞர்களுக்கும்- அரசு துறை அலுவலர்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தவும் வழக்குரைஞர்களின் தொழிலை மேம்பாட்டுத்தவும்     முன்னுரிமை கொடுத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்

தமிழகத்தில் எத்தனை வழக்கறிஞர்கள் உள்ளார்கள்? அவர்களது வருமானம் ஒரே சீரானதாக அனைவருக்கும் உள்ளதா?

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் சுமார் ஒரு லட்சத்து இருப்பத்து ஐந்தாயிரம்   வழக்கறிஞர்கள் உள்ளார்கள். அவர்களது வருமானம் அவர்கள் தொழில் செய்யும் ஊர், அந்த ஊரைச் சார்ந்த பொருளாதார நிலை மற்றும் நீதிமன்றங்களை பொறுத்து வேறுபடுகிறது

தமிழக வழக்கறிஞர்கள் தற்போது சந்திக்கும் தலையாயப் பிரச்சனை என்ன? எத்தகைய தீர்வு வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

வழக்குரைஞர்கள் மீது சில சமூக விரோத சக்திகள் தாக்குதல் நடத்தப்படுவதும் சில நேரங்களில் ஒரு சில காவல் அதிகாரிகள் வழக்குரைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்வதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேற்கண்ட பிரச்சனைக்கு காவல்துறை நியாயமான முறையில் விசாரித்து வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் வழக்குரைஞர் மீது பொய் வழக்கு பதியும் ஒரு சில காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு எடுப்பதும் தீர்வாக அமையும்.

நீதிமன்றங்களில் இணையதளம் மூலமாகத்தான் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இ-பைலிங் முறை வழக்குரைஞர்கள்   தற்போது சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். இதனால் வழக்குரைஞர்களும்   வழக்காடிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள். இதனை தீர்க்க உயர்நீதிமன்றம் வழக்குரைஞர்களுக்கு போதிய வசதியை மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்படுத்தி தர வேண்டும்.

வழக்கறிஞர் தொழிலை தொடங்கி மூன்று ஆண்டு காலம் வரை உள்ள இளம் வழக்கறிஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன அவற்றை எவ்வாறு தீர்க்க இயலும்?

இத்தகைய இளம் வழக்கறிஞர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு போதிய வருமானம் இல்லாமல் சிரமப்படுவது  தலையாய  பிரச்சினையாகும்.  வழக்கறிஞராக பதிவு செய்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் அரசு உதவித்தொகை அளிப்பதே இதற்கு தீர்வாகும்.

குறைந்த வருமானம் கொண்ட 10 ஆண்டுகளை கடந்த வழக்கறிஞர்களுக்கு வாழ்க்கைக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு சமூக பாதுகாப்பு திட்டம் ஏதேனும் உண்டா? 

வழக்குரைஞர் பணியில் 10 ஆண்டுகள் கடந்தவர்களுக்கு குறைந்தபட்சம் மாத வருமானம் ரூ  25,000/- இருக்க வேண்டும். அதற்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் தற்போது எதுவும் அரசால் செயல்படுத்தப்படவில்லை அதை கொண்டுவர கூட்டமைப்பு தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

வழக்கறிஞர்    தொழிலில் இருந்து ஓய்வு பெறும் வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டம் ஏதேனும் உண்டா? 

 எவ்வளவு வயது வரையிலும் வழக்குரைஞர் தொழிலை மேற்கொள்ளலாம். இதில் ஓய்வு என்ற பேச்சுக்கு இடமில்லை. ஒரு  வழக்குரைஞர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் குழுமத்தின் சேம   நல நிதியில் உறுப்பினராக   இருக்கும் போது இறந்தால் வாரிசுதாரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதைப்போலவே சேம நல நிதியில் உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் ஒருவர் 25 ஆண்டு காலம் நிறைவு செய்துவிட்டு ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தால் முழு தொகையும் சேம நல  நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று எங்களது கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது

வழக்கறிஞர்களுக்கு அவர்களது சட்ட அறிவை மேம்படுத்த தொடர் சட்டக் கல்விக்கான திட்டங்கள் ஏதேனும் உண்டா?  

வழக்குரைஞர்கள் சட்ட அறிவை மேம்படுத்த இளம் வழக்குரைஞர்களுக்கு தமிழ்நாடு நீதித்துறையாலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் குழுமத்தாலும்   வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்களது கூட்டமைப்பு விரைவில் தனியார் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வழக்குரைஞர்களுக்கு தொடர் சட்டக் கல்வியை வழங்க தேவையான நடவடிக்கைகளை   மேற்கொண்டு வருகிறது

எந்தெந்த மாநிலங்களில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு  சட்டம் இயற்றப்பட்டுள்ளது? தமிழகத்திற்கு இத்தகைய சட்டம் தேவையா?

எனக்கு தெரிந்தவரை ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கு   இந்த சட்டம்  அவசியமானது. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அளவில் போராட்டம் நடத்த ஆலோசிக்க உள்ளோம்.

வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும்   உறவு சிறப்பாக அமைய எத்தகைய நடவடிக்கைகள் தேவை?

குறைந்தது மாதம் ஒரு முறையாவது ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதி மற்றும்   வழக்குரைஞர்கள் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் கூட்டம் அவசியமானது என்றும் நீதிபதிகள் வழக்குரைஞர்களின் பணி சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழக்குரைஞர்கள் தங்களது வழக்காடிகள் சார்பாக தெரிவிக்கும் கருத்துக்களை கனிவாக பரிசீலித்து உடனடி தீர்வு அளிப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

உயர் நீதிமன்றத்திலும் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதில் தங்கள் கருத்து என்ன?

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று எங்கள் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தி வருகிறோம்

உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் நிறுவப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? அதனால் என்ன நன்மைகள்?

உச்ச நீதிமன்ற கிளையை   தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், அமைக்க மத்திய உள்துறை அமைச்சரையும் சட்ட அமைச்சரையும் சந்தித்து எங்கள் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தியுள்ளோம். உச்சநீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டால்  பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் பொருளாதார ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.  மாவட்ட நீதிமன்றங்களில் தொழில் செய்யும்  வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் தொழில் செய்வது போல உச்சநீதிமன்ற கிளையிலும் தொழில் செய்யும் வாய்ப்பை பெறுவார்கள்

தமிழகத்தில் எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன? சட்டக் கல்வியின் தரம் எவ்வகையில் மேம்படுத்தப்பட வேண்டும்?

தமிழ்நாட்டில் 19 அரசு சட்டக் கல்லூரிகளும் 19 தனியார் சட்டக் கல்லூரிகளும் உள்ளன. சட்ட கல்லூரியில் சட்டக் கல்வியை மேம்படுத்த அரசு போதிய அளவில் நிதி ஒதுக்குவதோடு பள்ளி மற்றும் கலை கல்லூரி பாடத்திட்டங்களில் சட்டக் கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். மருத்துவ மற்றும் தொழில் கல்வி பயில   குறைந்தபட்ச மற்றும் அதிகப்பட்ச வயதை அரசு நிர்ணயம் செய்துள்ளதைப் போல சட்டக் கல்லூரியில் சட்டம் பயிலவும் வயது நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.

நீதிமன்ற வளாகங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் வசதிகள் எவை?  அவை நடைமுறையில் உள்ளதா?

பெண் வழக்குரைஞர்கள் சீருடை அணிவதற்கான அறையும் அவர்களுக்கு  தனி கழிப்பறைகளும் நீதிமன்ற வளாகங்களில் இருக்க வேண்டும். அவை சில நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே உள்ளது. அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் இந்த   வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.  

வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைக்க, வாகனங்கள் வாங்க, வீடு கட்ட, குழந்தைகளை படிக்க வைக்க உள்ளிட்ட பொருளாதார உதவிகளுக்கு வழக்கறிஞர்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் ஏதேனும் உண்டா? 

எனக்கு தெரிந்தவரை சில ஊர்களில் அது போன்ற கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இத்தகைய கூட்டுறவு சங்கங்களை அமைக்க அரசு பங்கு தொகை அளித்து வழக்குரைஞர்களை ஊக்குவித்தால் வழக்குரைஞர் சங்கங்கள் கூட்டுறவு   சங்கங்களை அமைக்க எங்களது அமைப்பு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தங்கள் வழக்கறிஞர்களுக்கும் வழக்கறிஞர் சங்கங்களுக்கும் சொல்ல விரும்புவது என்ன? 

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டம்   ஆகியவற்றின்படி செயல்பட்டு வழக்குரைஞர்கள் ஜனநாயகத்தை போற்றி பாதுகாக்க முதன்மை பணியாளர்களாக செயல்பட வேண்டும். வழக்குரைஞர்கள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலித்து  உடனடியாக   சுமூகமாக  தீர்வு காண வேண்டும்.  வழக்குரைஞர்களும் வழக்குரைஞர்கள் சங்கங்களும்   ஒற்றுமையை பேண வேண்டிய தருணம் இதுவாகும்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்