spot_img
September 15, 2025, 8:02 pm
spot_img

பணவீக்கத்தால் பாதிக்கப்படுவர் நீங்களும்தான் – எப்படி?

ஒரு நாட்டில் உள்ள பணத்தின் மதிப்பு குறைவதையே பணவீக்கம் எனலாம்.  எளிமையான மொழியில் கூற வேண்டும் என்றால் சில காலத்திற்கு முன்பு ரூபாய் 100 கொடுத்து வாங்கப்பட்ட ஒரு பொருளை தற்போது ரூபாய் 200 கொடுத்து வாங்க வேண்டியதாக உள்ளது.  பண வீக்கம் அதிகரிக்கும் போது நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைகிறது.

சமீபத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சேமிப்பு குறைந்துள்ளது என்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளது.  இந்த தகவல்தான் இந்த கட்டுரை எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணியாக எடுத்துக் கொள்ளலாம்.  இன்று பரவலாக சேமிப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக அதிகரித்து வரும் பண வீக்கமும் அதனால் அன்றாட தேவைகளான உணவு, உடை, மருத்துவம், போக்குவரத்து மற்ற அவசிய செலவினங்களுக்கு அதிக பணத்தை செலவிடக் கூடிய ஒரு நிலைதான் இன்று சேமிப்பு குறைவதற்கு  ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

பிரபலமான ஆங்கில நாளிதழ் ஒன்று சமீபத்தில் அதன் தலையங்கத்தில் தெரிவித்து இருப்பது என்னவெனில்   பண வீக்கம் என்பது உணவுப் பொருட்கள், தானியங்கள் மற்றும் நாம் பருகக் கூடிய பானங்களில் அதிகமாக உள்ளது.  இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழக்கூடிய இந்திய குடும்பங்கள் பணவீக்கத்தினுடைய தாக்கத்தினால் அத்தியாவசிய தேவைகளான ஊட்டச்சத்து மிக்க பொருட்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுக்கு தேவையான அளவு பணத்தை செலவிட முடியாமல், பல்வேறு சமூக பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். 

 பணவீக்கம் என்பது நேரடியாக வறுமை மற்றும் சமத்துவம் இன்மையை தாண்டி பல்வேறு சமூக பொருளாதார பிரச்சனைகளக்கு நேரடியான ஒரு காரணியாக உருவெடுத்துள்ளது.  உதாரணமாக வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில், பெண் பிள்ளைகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல், கல்வித்தொகைக்கு செலவிடக் கூடிய பணத்தை தங்களுடைய அன்றாட பிழைப்பிற்கு செலவிடக் கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளது.  இதனால் தொடர்ந்து கல்வி கற்பதில் தேக்கநிலை என்று சொல்லக்கூடிய ஒரு மோசமான சமூக மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இவ்வாறு தீர்க்கப்பட முடியாத சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பணவீக்கம், சமுதாயத்தில் வன்முறைகள் ஏற்படுவதற்கும் காரணங்களாக உருவாகியுள்ளது.

       அதிகரித்து வரும் பணவீக்கம், விளிம்பு நிலை மக்களை சந்தை மற்றும் பொருளாதார பங்கேற்பிலிருந்து சற்று விலக்கி வைத்துள்ளது என்று கூறலாம்.  அதாவது காலங்காலமாக பயன்படுத்தி வந்த பொருட்களை வாங்க முடியாமல், அதைத் தவிர்த்து மற்ற தரம் குறைவான அல்லது முன்னணி நிறுவனங்கள் அல்லாத நிறுவனங்களில் தயாரிப்பு பொருட்களை வாங்கக்கூடிய நிலைக்கு விலக்கி வைத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் பொழுது பொது மக்களுடைய வாங்கும் சக்தி குறைவதோடு, அவர்களுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலன் பாதிப்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக ஆகிவிடும். சேமிப்புகளை அதிகரிப்பதன் மூலமாகவும், தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலமாகவும் இவ்வாறு நடந்து வருகின்ற பண வீக்கத்தை ஓரளவு சமாளிக்கலாம்‌.

        இன்று இந்தியர்களின் சேமிப்பு குறைவதற்கு இணையதள வர்த்தக முறையும் ஒரு காரணி என்று கூறலாம். கவர்ச்சிகரமான விளம்பரங்கள்,  பொருட்கள் நேரடியாக தங்களுடைய வீடுகளுக்கு வந்து சேரக்கூடிய ஒரு நிலை,  பிரபல முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் உள்ளூரில் கிடைக்காத பொழுது இணையதள மூலமாக வாங்கக்கூடிய வசதி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களுடைய வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்யக்கூடிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இது நேரடியாக நுகர்வோர்களின் சேமிப்பை பாதிப்பதோடு தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி குவிக்க கூடிய ஒரு மோசமான நுகர்வோர் கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  உதாரணமாக, பயன்பாட்டிற்கு அதிகமாக உள்ள மொபைல் போன்களை வாங்குவது, வருமானத்திற்கு அதிகமாக உடை, காலணிகள் மற்றும் அழகு பொருட்களுக்கு செலவு செய்வது, பொருட்கள் இருக்கும் பொழுதே மீண்டும் மீண்டும் அதே பொருட்களை வாங்கி குவிப்பது, தேவையில்லை என்றாலும் இணையதளத்தில் பொருட்களை தேடுவது, வாங்குவது போன்ற மோசமான நுகர்வோர் கலாச்சாரத்தை இணையதள வர்த்தக முறை இந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. 

        அதிகரித்து வரும் பண வீக்கத்தை நம்முடைய பாரம்பரிய பொருளாதார முறையான, தேவைக்கு மற்றும் அளவான பொருட்களை வாங்குவது அவ்வாறு வாங்கிய பொருட்களை முழுவதும் பயன்படுத்துவது, வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிப்புக்கு எடுத்து வைப்பது, கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து பொருட்களை வாங்காமல் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கக்கூடிய பழக்கங்களை பின்பற்றுவது மற்றும் ஊக்குவிப்பதன் மூலமாக பண வீக்கத்தை சமாளிக்கலாம். 

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்