இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (Supreme Court), மாநில ஆளுநர், மாநில முதலமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் (High Court) உள்ளிட்டோர் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள பதவிகளை அரசியலமைப்புச் சட்டம் பதவி (Constitutional Post) என்று அழைக்கப்படுகிறது.
நீதித்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், வட்டார அளவிலான உரிமையியல் நீதிபதிகள் (முன்சீப்), குற்றவியல் நீதிபதிகள் (மேஜிஸ்ட்ரேட்) உள்ளிட்டோர் உள்ளனர். அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் அரசியலமைப்பு நீதிபதிகள் (Constitutional Judges) ஆவார்கள்.
அரசியலமைப்பு நீதிபதிகளான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மீது குற்றம் புரிந்ததாக தகவல் தெரிந்தவுடன் எஃப்.ஐ. ஆர். (FIR- First Information Report) எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பதற்காகவும் (Freedom of Judiciary) உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த வித அச்சமும் இன்றி செயல்பட உறுதி செய்வதற்காகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி இன்றி குற்ற வழக்கு எதையும் உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் பதியக் கூடாது என நீதிபதி வீராசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை (misconduct) அல்லது இயலாமை (incompetence) என்ற காரணத்திற்காக மட்டுமே உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணி நீக்கம் செய்ய முடியும் என்கிறது அரசமைப்பு சட்டம் தெரிவிக்கிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பு நீதிபதிகளை பதவியை நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன (உச்ச நீதிமன்ற உள் நடவடிக்கை முறை – in house procedure). இந்த வழிமுறைகளை பின்பற்றி உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யலாம். இல்லையெனில், 1968 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நீதிபதிகள் (Judges) விசாரணை சட்டப்படி அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு வழிமுறைகளிலும் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மூன்று இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற வழிமுறைகள் மூலம் மட்டுமே ஊழல் ஒழிப்பு தேசிய அமைப்பான லோக்பால் (Lokpal) நீதிபதிகளையும் (தலைவர் மற்றும் உறுப்பினர்களை) பதவி நீக்கம் செய்ய முடியும். தமிழக ஊழல் ஒழிப்பு உயர் மாநில அமைப்பான லோக் ஆயுக்தா (Tamil Nadu Lokayuktha) நீதிபதிகளை (தலைவர் மற்றும் உறுப்பினர்களை) பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் கவனிக்கத்தக்கது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
1999 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பு நீதிபதிகளை பதவியை நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் மீது தவறான நடத்தை அல்லது இயலாமை என்ற விவரம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிக்கு கிடைக்குமானால், அவர் அதைப்பற்றி விசாரிக்க ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆகியோரை கொண்ட விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதி அமைக்க வேண்டும். குற்றம் சாட்டப்படும் நீதிபதியின் முன்னிலையில் விசாரணை குழு விசாரணையை நடத்தும், சாட்சிகளை விசாரிக்கும், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நீதிபதிக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்கு போதிய வாய்ப்பை விசாரணை குழு அளிக்கும்..
விசாரணை குழுவானது குற்றம் சாட்டப்படும் நீதிபதியின் முன்னிலையில் சாட்சிகளை விசாரித்து ஆவணங்களை தொகுத்து இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிப்பார்கள். நீதிபதியின் மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கருதினால், குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி அவராகவே முன்வந்து பதவி விலக வேண்டும் அல்லது பாராளுமன்றத்தின் முன் பதவி விலகல் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு எடுப்பார்.
தானாக பதவி விலக சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வராவிட்டால், குடியரசு தலைவருக்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தப்பட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோருவார். அதன் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பணிநீக்கம் பற்றிய தீர்மானம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நீதிபதி பணியிலிருந்து நீக்கப்படுவார்.
1968 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நீதிபதிகள் விசாரணை சட்டப்படி அரசியலமைப்பு நீதிபதிகளை பதவியை நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:
மக்களவை அல்லது மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பணி நீக்கம் தொடர்பாக தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும். மக்களவையாக இருந்தால் 100 உறுப்பினர்களுக்கு குறையாமல் அந்த தீர்மானத்தை ஆதரித்து கையொப்பமிட்டு இருக்க வேண்டும். தீர்மானத்துக்கு மக்களவைசபாநாயகர் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். மாநிலங்கள் அவையாக இருந்தால் 50 உறுப்பினர்களுக்கு குறையாமல் அந்த தீர்மானத்தை ஆதரித்து கையொப்பமிட்டு இருக்க வேண்டும். மாநிலங்கள் அவை தலைவர் (குடியரசுத் துணை தலைவர் – அந்த அவையின் தலைவர்) அத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
அனுமதி அளிக்கப்பட்ட பின் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். அந்த விசாரணை குழுவின் தலைவராக ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி இருப்பார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒருவரும், புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஒருவரும் அந்த விசாரணை குழுவில் மற்ற இரு உறுப்பினர்கள். இந்தக் குழு விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தால், பணி நீக்கம் தொடர்பான தீர்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியை பணியில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவு அளிப்பார்.
அரசியலமைப்பு நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய நடைபெற்ற நிகழ்வுகள்
நீதிபதி ராமசாமி: முதல்முறையாக, தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக சென்ற வி. ராமசாமி அவர்கள் அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது மிக அதிகமாக வரம்பை மீறி செலவு செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அதன் அடிப்படையில் மக்களவையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது .காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது. நீதிபதி ராமசாமி அவர்கள் 1994 இல் பணி ஓய்வு பெற்றார்.
நீதிபதி பி.டி. தினகரன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி. டி. தினகரன் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர் பல ஏக்கர் நிலங்களை அரக்கோணத்திற்கு அருகில் அபகரித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானார். இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்தார் (2011). அந்தக் குழு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் அவரே ராஜினாமா செய்தார். எனவே, பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
நீதிபதி செளமித்ரா சென்: கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென். அவர் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் நீதிமன்றத்தால் தரப்பட்ட ஒரு பொறுப்பில் சில லட்சங்கள் நிதி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார் (2011). அந்தக் குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் பதவி விலக மறுத்தார். எனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அந்த ஊழல் நீதிபதி பதவி நீக்கம் சம்பந்தமான தீர்மானத்தை பாராளுமன்றம் நிறைவேற்றக் கோரினார். மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் நீதிபதிக்கு எதிராக வாக்களித்தனர். அடுத்து மக்களவையின் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே அந்த நீதிபதி ராஜினாமா செய்தார்.
நீதிபதி பரிதி வாலா: அடுத்து 2015 ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பரிதி வாலா அவர்கள் அளித்த தீர்ப்பு ஒன்றில் இந்தியா பின்னோக்கி செல்வதற்கான முக்கிய காரணம் இட ஒதுக்கீடு என்று கூறியிருந்தார். இதனை எதிர்த்து மக்களவையைச் சேர்ந்த 58 உறுப்பினர்கள் அந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானத்தை தாக்கல் செய்யவும் அவர் உஷாராகி, அவரது தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கிவிட்டார். இதனால் தப்பித்தார். அவர் இப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா: 2018 ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களுக்கு மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் தொடர்பு உள்ளதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மத்திய அரசுக்கு ஆதரவாக நீதிபதிகள் அமர்வை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. 71 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தனர். அப்போதைய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அந்த தீர்மானத்தை அனுமதிக்காமல் நிராகரித்து விட்டார்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: தன்னாட்சியான நீதித்துறை நாட்டின் சுதந்திரத்திற்கு மிக அவசியமானது என்பதை போலவே நீதிபதிகளும் மிக நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமானதாகும்.