spot_img
October 18, 2024, 10:14 am
spot_img

பிரமிப்பூட்டும் தேன்  தயாரிப்பும் கலப்படமும் – I

ஒரு தேன்கூட்டிற்கு ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். ராணித் தேனீ மற்ற தேனீக்களை காட்டிலும் பெரியதாக இருக்கும்.  இதன் கொடுக்கு மற்றவற்றின் கொடுக்கில் இருந்து வேறுபட்டு இருக்கும். ராணித் தேனீ இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டு காலம் வரை வாழ்கிறது. இந்தத் தேனீ ஒரு நாளுக்கு 2000 முட்டைகள் வரை இடுகிறது.  தேனீக்கள் பூக்களில் இருந்து எதையோ எடுத்துச் சென்று கூட்டில் சேமிக்கின்றன என்பதை அறிந்த ஆதிகால மனிதன் தேனை கண்டுபிடித்து உணவாக பயன்படுத்த தொடங்கியுள்ளான்.

தேனீக்கள் எவ்வாறு தேனை உருவாக்குகின்றன?

பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான  திரவத்தில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன. தேனீக்கள் பூக்களில் காணப்படும் மதுரத்திலிருந்து தேனை உருவாக்குகின்றன. தேனீக்கள் மதுரச் சுரப்பிகளிலிருந்து கசியும் தேனைத் தங்களின் நாக்கினால் நக்கி, உறிஞ்சி அத்துடன் உமிழ் நீரையும் கலந்து தங்களின் தேன் இரைப்பையில் சேர்த்து வைக்கின்றன. உமிழ்நீரில் உள்ள ‘இன்வர்டேஸ்’ என்ற நொதிப் பொருள் மதுரத்தில் உள்ள கரும்புச் சர்க்கரையைத் திராட்சை சர்க்கரையாகவும் பழச் சர்க்கரையாகவும் மாற்றத் தொடங்கின்றது. 

தேனீக்கள் கூட்டிற்கு வந்ததும் உமிழ்நீர் கலந்த மதுரத்தை இரைப்பையிலிருந்து வாய்வழியே கக்குகின்றன. இதனைக் கூட்டில் உள்ள வீட்டுத் தேனீக்கள் பெற்றுக் கொண்டு பலமுறை தங்களுக்குள் வாய் வழியே பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இப்பரிமாற்றம் தேனீல் உள்ள நீர் அளவைக் குறைக்க உதவுகின்றது.  இத்தருணத்தில் கூடுதலாக ‘இன்வர்டேஸ்’ நொதி தேனுடன் சேர்க்கப்படுகின்றது. தேன் அறைகளில் இறுதியாகத் தேன் சேமிக்கப்படுகின்றது. இத்தேன் முதிராத தேன் எனப்படுகிறது.  இறக்கைகள் கொண்டு விசிறுதல் மூலமும் தேனில் உள்ள நீர் அளவு மேலும் குறைக்கப்படுகின்றது. இவ்வாறு தேன் இயற்கையாகப் பக்குவப்படுத்தப்பட்டு கெட்டிப்படுத்தப்பட்ட பின்னர் தேன் அறைகள் மெழுகு மூடிகளால் மூடப்படுகின்றன. இத்தகைய மூடப்பட்ட அறைகளில் இருக்கும் தேன் முதிர்ந்த தேன் எனப்படுகிறது. 

தேனில் இத்தனை வகைகளா?

தேன் பிரித்து எடுக்கும் கருவி கொண்டு தேன் அடைகளுக்குச் சேதம் ஏற்படாமல் எடுக்கப்படும் தேன் பிரித்தெடுக்கப்படும் தேன் என்றும் மலைத் தேன்களின் அடைகளைப் பழிந்து கிடைக்கும் தேன் பிழிந்து எடுக்கப்படும் தேன் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே இன மலர்களிலிருந்து எடுக்கப்படும் தேன் ஒரு மலர்த்தேன் என்றும் பல இன மலர்களிலிருந்து எடுக்கப்படும் தேன் பல மலர்த்தேன் என்றும் அழைக்கப்படுகிறது. பலவகை பூக்கள் நிறைந்த இடங்களில் இருந்து கிடைக்கும் தேனும் ஒருவகை பூக்களில் இருந்து கிடைக்கும் தேனும் மருத்துவ குணத்தில்  வேறுபாடும்.

துளசித் தேன், இஞ்சித் தேன், நெல்லித் தேன், முருங்கைத் தேன், நாவல் தேன் எனசுமார் 300 தேன் வகைகள் உள்ளன. ஸ்பெயின் நாட்டு வெள்ளை நிறத் தேன், பிரான்ஸின் தங்க நிறத்தேன், இந்தியாவின் மலைத் தேன், சுவிட்சர்லாந்தின் பட்டுத் தேன், தென்னாப்பிரிக்காவின் கெட்டித் தேன் என பலவகை தேன்கள் உள்ளன.

அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் வகை நச்சானதாகும். 

தேனின் தன்மை

பூகோள ரீதியாக தேன்கள் கிடைக்கும் இடத்தை பொறுத்தும் தேனீக்கள் எந்த மரங்களில், செடிகளில் உள்ள பூக்கள் மூலமாக தேனை சேகரிக்கிறது என்பதை பொறுத்தும் தேனீக்களின் வயதை பொறுத்தும் தேனின் வண்ணமும் சுவையும் மாறுபடுகிறது. பொதுவாக, தேன் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. மலை உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட தேனும் தரத்தில் உயர்ந்ததாக கருதப்படுகின்றது.

தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ  கலந்திருக்காது. திரவ நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து  பாக்டீரியாக்களைவளர விடுவது இல்லை. இயற்கையான தேனில் 14%-18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள தேனில் பாக்டீரியாக்கள் வளர இயலாது. குளுக்கோஸ் ஆக்சிடேஸ் மற்றும் ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு (இன்ஹபைன்) என்ற இரு நொதிகள் இருப்பதாலும் நுண்ணுயிர்கள் தேனில் வளர்வதில்லை. தேனை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மருத்துவக் குணங்கள், 

தேனின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் நடைபெறும் கலப்படங்களையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்