உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) உணவு விநியோக (ஆப்ஸ்) (food delivery apps) செயலிகளுக்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளில் 21,042 புகார்கள் பதிவாகி உள்ளதாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் உணவு விநியோக செயலிகள் மீதான புகார்கள் இவ்வளவுதானா? என்று மகிழ்ச்சி அடையாதீர்கள்.
பாதிக்கப்படும் நுகர்வோர்களில் 5 சதவீதத்துக்கு குறைவான நுகர்வோர் மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை (Consumer Court) அணுகுகின்றனர். இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை லைஃப் இன்சூரன்ஸ் (life insurance), ஹெல்த் இன்சூரன்ஸ் (health insurance), வங்கிகள் (banks) மீதானவை அதிகமாக உள்ளன. நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பேக்கரிகள் (bakery), உணவகங்கள் (hotels) மற்றும் உணவக செயலிகள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை.
பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் உணவு விநியோக செயலிகள் நுகர்வோருக்கு மிகச் சிறப்பான சேவையை வழங்குகின்றனவா? என்று பார்த்தால் இல்லை என்பதுதான் உண்மையாகும். உணவகங்கள் மற்றும் உணவக செயலிகளில் ஏற்படும் பாதிக்கப்படும் மக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அதிகம் அணுகுவதில்லை என்பதே காரணமாகும்.
பேக்கரிகள், உணவகங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார தரத்தை விதிகளின்படி பின்பற்றாதது (uncleanliness), நுகர்வோருக்கு வழங்கப்படும் உணவுகளில் கலப்படம் (adulteration), பாதுகாப்பற்ற தன்மை (unsafe) தரம் குறைந்த உணவுகள் (sub-standard) அதிக விலை (excessive price), தவறாக வழிகாட்டும் விளம்பரம் (misleading advt), உற்பத்தியாளர், விற்பனையாளர், காலாவதி தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாத லேபிளிங் குறைபாடுகள் (labelling defects) மூலம் நுகர்வோரை ஈர்த்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் நுகர்வோருக்கு பேக்கரிகள், உணவகங்களிலும் உணவுகளை வரவழைப்பதற்காக பயன்படுத்தும் உணவு விநியோக செயலிகளிலும் ஏற்படுகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் பிரச்சனைகளை தவிர்க்க எண்ணி பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் செய்வதில்லை.
பேக்கரிகள், உணவகங்களிலும் உணவு செயலிகளிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்கும் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் மூலமும் அல்லது இந்திய அரசின்உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இணையதளத்திலும் புகார் செய்யலாம். இத்தகைய பிரச்சினைகள் குறித்து நிவாரணமும் இதர தீர்வுகளையும் பெற ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். எங்கு புகார் செய்யலாம்? என்ற விழிப்புணர்வு பெரும்பாலான நுகர்வோர்களிடம் இல்லை எனலாம்.
ஒவ்வொரு மனிதருக்கும் உணவு மிக முக்கியமானது. உணவகங்களிலும் உணவக செயலிகள் மூலமும் பெறப்படும் உணவு வகைகளானது கலப்படமற்றதாகவும் சுகாதாரமானதாகவும் நியாயமான விலையிலும் தவறான விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படாததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். பேக்கரிகள், உணவகங்களிலும் உணவு செயலிகளிலும் பிரச்சனை ஏற்படும் போது மாவட்டத்தில் செயல்படும் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்வது சரியான நடவடிக்கையாக இருக்கும். இதன் மூலம் தாங்கள் பாதிக்கப்பட்டதோடு பிறரும் பாதிக்கப்படாத நிலையை ஏற்படுத்த முடியும்.
நுகர்வோர் நீதிமன்றங்களில் பேக்கரிகள், உணவகங்களில் பாதிக்கப்படும் நுகர்வோர் நேரடியாக புகார் செய்வதற்கு உதவியாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செயல்படும் வகையில் விதியில் உருவாக்கப்பட வேண்டும். நுகர்வோரின் வழக்குகளுக்கு மாவட்ட பாதுகாப்பு உணவு பாதுகாப்பு அலுவலகத்தின் மூலமாக வழக்கறிஞர் வைத்து நுகர்வோர்களுக்காக வழக்கு நடத்துவது நுகர்வோருக்கு எளிமையாக அமையும். உணவகத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அப்படியே விட்டு விட்டு செல்லாமல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுங்கள்! சமூகத்தில் அனைவருக்கும் சிறந்த உணவு கிடைக்கும் சமூகப் பணியை செய்யுங்கள்!
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: பேக்கரிகளிலும் உணவகங்களிலும் உணவு விநியோக செயலைகள் மூலமாகவும் தரமான உணவு மக்களுக்கு கிடைப்பது அவசியமான ஒன்றாகும்!