போதைப்பொருள்
சென்னையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 2022-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் 168 பள்ளிகள் 3021 மாணவ, மாணவியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்பது சதவீதத்தினர் (அதாவது 256 மாணவ, மாணவியர்) பல வகையான போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் 10 சதவீத மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தப்படுவதாகவும். 22 சதவீத மாணவர்கள் புகையிலை பயன்படுத்தப்படுவதாகவும் 26 சதவீதமானவர்கள் மது பயன்படுத்தப்படுவதாகவும். 13 சதவீதமானவர்கள் ஒயிட் அண்ட் ரப்பர் சொல்யூஷன் பயன்படுத்தப்படுவதாகவும். மற்றும் 29 சதவீதமானவர்கள் மற்ற போதைப் பொருள்களை பயன்படுத்தப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது
இந்தியா முழுவதும் கல்வி வளாகங்களில் போதைப் பொருள்கள் அதிக பயன்பாட்டில் உள்ளதாக அறியப்படுகின்றன. சமீப காலத்தில், உலக அளவில் புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் மக்கள் இறந்து போவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதில் 40 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்தியாவில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறார்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
தென்காசி அருகே பாவூர்சத்திரத்தில் ஒரு சிறுவனுக்கு கூலிப் என்ற பாக்கு போல நாக்கில் அடியில் வைத்துக் கொள்ளக்கூடிய போதை பொருளை 16 வயதிற்குட்பட்ட மூன்று சிறுவர்கள் கொடுத்து அதை வீடியோ எடுத்து வெளியிட்ட செய்தியை பலரும் அறிந்திருப்பார்கள். பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து சாக்லேட் வடிவில் போதைப் பொருள் விற்பனை செய்வது தற்போது அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளும் மாணவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகளும் உரிய கையாளுதலும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே இவற்றை எளிதில் தடுக்க முடியும்.
விளைவுகள்
வலுச் சண்டை, விபத்துக்களால் காயம்- மரணம் அடைதல், தற்கொலை, உணர்வு வன்முறை, எரிச்சல், மன அழுத்தம், கவலை மயக்க காட்சிகள், புத்தி கூர்மை குறைவு, நினைவாற்றல் குறைவு, குடிநோய் பார்வை குறைபாடு, வாய், தொண்டை, வயிறு புற்று நோய்கள், இருதயம் வீங்குதல், ரத்த நாளங்கள் பாதிப்பு, ஈரல் இருக்கி நோய், ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை, பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இரைப்பை அலர்ஜி–வீக்கம், குடற்புண், உணவு செரிமானமின்மை, கணையாளர்ச்சி, கை மற்றும் கால்கள் நடுக்கம், ஆண்மை குறைவு பாலுறைவில் ஈடுபாடு குறைவு, ரத்த சோகை, பலம் இழத்தல்.
நடவடிக்கைகள்
கல்வி வளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி, தெருமுனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாக மாணவ மாணவர்களிடையே போதைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை அவற்றிற்கு அடிமையாவதை தடுப்பதற்காக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அவர்களை தயார் படுத்த வேண்டும். பள்ளிகளில் தினதோறும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி கல்லூரிகள் பொது இடங்களில் முன்பும் வாசகங்கள் விழிப்புணர்வு பதாகைகள் போன்றவைகளை வைக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
படைப்பு: எஸ். ஏ. சூர்யா, அரசு சட்டக் கல்லூரி மாணவர், நாமக்கல்