spot_img
December 3, 2024, 10:45 pm
spot_img

உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என விளக்கம் அளிக்க நாமக்கல் அசைவ உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், மோகனூர் சாலை, பாரதி நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பராயன் (82) கடந்த 2023 ஜனவரி மாதத்தில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பிரபலமான அசைவ உணவகத்தில் (ஹோட்டல் ஜூனியர் குப்பண்ணா)   ரூ 143/- செலுத்தி சிக்கன் சூப் வாங்கியுள்ளார். அதற்கு வழங்கப்பட்ட ரசீதில் பார்சல் கட்டணம் ரூ 6.50/- என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. பார்சலுக்கு தனி கட்டணம் வசூலித்தது உணவகத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று சுப்பராயன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு   தீர்ப்பு வழங்கியது. பார்சலுக்கு கட்டணம் பெற்றுக்கொண்டு உணவகத்தின் பெயரும் முகவரியும்  அடங்கிய விளம்பரத்துடன் வாடிக்கையாளருக்கு சிக்கன் சூப் பார்சல் வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் பார்சலுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் போது சொந்த விளம்பரத்தை செய்தது உணவகத்தின்   நியாயமற்ற வர்த்தக நடைமுறை  என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

வாடிக்கையாளர் பார்சலுக்காக செலுத்திய ரூ  6.50/-   மற்றும்   வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ  2000/-, செலவு தொகையாக ரூ 1,000/-  ஆகியவற்றை வழக்கு தாக்கல் செய்தவருக்கு உணவக நிர்வாகம் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உணவக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உணவக உரிமையாளர் ஒரு வார காலத்திற்குள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி பார்சல் கவரில் விளம்பரம் செய்தால் பார்சல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என உறுதி மொழியை வழங்க வேண்டும் என்றும் நிரூபிக்கப்பட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு காரணமாக ஏன்  உணவக உரிமத்தை ரத்து செய்யக்கூடாது? என்பதற்கு சரியான   முகாந்திரத்தை வழங்க வேண்டும் என்றும் இதனை செய்ய தவறினால் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு   உணவக உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்