மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய அமைப்பு முறை, அதிகார வரம்பு, கட்டணம் உள்ளிட்டவற்றை முதலாம் பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் நுகர்வோர் என்பவர் யார்? யாரெல்லாம் புகாரை தாக்கல் செய்யலாம்? என்று பார்க்க உள்ளோம்.
நுகர்வோர் என்பவர் யார்?
பணத்தை முழுமையாக செலுத்தி அல்லது செலுத்துவதாக வாக்குறுதி அளித்து அல்லது பகுதி செலுத்தி அல்லது பகுதி செலுத்துவதாக வாக்குறுதி அளித்து அல்லது தவணை திட்டத்தின் கீழ் பொருளை வாங்குபவர் (purchasing goods) நுகர்வோர் ஆவார். இவ்வாறு பொருளை வாங்கியவரின் அனுமதியோடு அதனை பயன்படுத்துபவரும் நுகர்வோர் ஆவார். ஆனால், பொருளை மறு விற்பனை (resale) செய்வதற்கும் வணிக பயன்பாட்டிற்கும் (commercial purpose) வாங்குபவர் நுகர்வோர் அல்ல.
பணத்தை முழுமையாக செலுத்தி அல்லது செலுத்துவதாக வாக்குறுதி அளித்து அல்லது பகுதி செலுத்தி அல்லது பகுதி செலுத்துவதாக வாக்குறுதி அளித்து அல்லது தவணை திட்டத்தின் கீழ் சேவையை வாங்குபவர் (purchasing service) நுகர்வோர் ஆவார். இவ்வாறு சேவையை வாங்கியவரின் அனுமதியோடு அதனை பயன்படுத்துபவரும் நுகர்வோர் ஆவார். ஆனால், சேவையை வணிக பயன்பாட்டிற்கு வாங்குபவர் நுகர்வோர் அல்ல.
ஒருவர் வாழ்வாதாரத்திற்காக சுய தொழில் செய்ய ஒரு பொருளை அல்லது சேவையை பெற்று வணிக பயன்பாட்டுக்காக உபயோகிக்கும் போது அவரும் நுகர்வோர் ஆவார் , ஒருவர் பொருளை அல்லது சேவையை நேரடியாக வாங்கினாலும் இணையதளம் மூலம் வாங்கினாலும் டெலி ஷாப்பிங் மூலம் வாங்கினாலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையில் வாங்கினாலும் பொருளை அல்லது சேவையை வாங்கியவர் நுகர்வோர் ஆவார்.
முறையீட்டாளர் என்பவர் யார்?
எந்த ஒரு நுகர்வோரும் தாமாகவே தமது புகாரை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம். தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் சங்கமும் ஒரு நுகர்வோருக்காக புகாரை ஆணையத்தில் தாக்கல் செய்யலாம். தன்னார்வ நுகர்வோர் சங்கத்துக்கு புகார் தாக்கல் செய்ய அதிகாரம் வழங்கியுள்ள நுகர்வோர் அந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயத்தில் அறக்கட்டளைகள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் அல்ல என்றும் அவை நுகர்வோருக்காக புகார் தாக்கல் செய்ய இயலாது என்றும் ஒரு வழக்கில் (CIVIL APPEAL NO. 3560 OF 2008) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பிரச்சனைகளுக்காக மத்திய, மாநில அரசுகளும் மத்திய நுகர்வோர் அதிகார அமைப்பும் நுகர்வோர் ஆணையத்தில் புகார் செய்யலாம். ஒரே மாதிரியான ஆர்வமுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல நுகர்வோர்கள் நுகர்வோர் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று நுகர்வோர் தகராறுகளுக்காக புகார் தாக்கல் செய்யலாம்.
ஒரு நுகர்வோர் இறந்து விட்டால் அவரது வாரிசுகள் அல்லது சட்டபூர்வமான பிரதிநிதிகள் ஆகியோரும் ஒரு நுகர்வோர் இளவர் (minor) என்றால் அவரது பெற்றோர் அல்லது சட்டபூர்வமான காப்பாளர் ஆகியோரும் நுகர்வோர் பிரச்சனைகளுக்காக ஆணையத்தில் புகார் செய்யலாம்.
விசாரணைக்கு எடுத்தல்
ஒரு நுகர்வோர் தகராறு குறித்து முறையீட்டாளரால் புகார் தாக்கல் செய்யப்பட்டால் அதனை அனுமதித்து (admission) எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்ப அல்லது புகார் விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று நிராகரித்து (rejection) நுகர்வோர் ஆணையம் உத்தரவிட வேண்டும். முறையீட்டாளருக்கு தகுந்த வாய்ப்பு வழங்கி அவரது வாதங்களை கேட்டறியாமல் எந்த ஒரு புகாரையும் ஆணையம் நிராகரிக்க கூடாது.
நுகர்வோர் ஆணையத்தில் எந்த ஒரு புகார் தாக்கல் செய்யப்பட்டாலும் சாதாரணமாக 21 நாட்களுக்குள் அதனை அனுமதித்து எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்புவதா? அல்லது நிராகரிப்பதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு 21 நாட்களுக்குள் முடிவு செய்யப்படாவிட்டால் அந்தப் புகார் அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்படும். தாக்கல் செய்யப்பட்ட புகாரை அனுமதிப்பது என்பது அதனை விசாரணைக்கு உகந்தது என்று ஏற்றுக்கொண்டு கோப்பிற்கு (taken on file) எடுத்துக் கொண்டு நுகர்வோர் எண் (numbering) வழங்கி எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு (issuing notice) அனுப்புவதாகும்.
நுகர்வோர் ஆணையங்களை அணுகும் போது புகார் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை ஓரிரு நாளில் அடுத்த பகுதியாக காணலாம்.