spot_img
December 5, 2024, 12:47 am
spot_img

சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு டெலிவரி, ரூ 5 லட்சம் இழப்பீட்டை ரூ 50 லட்சமாக உயர்த்தி உத்தரவு, புற்றுநோயை மறைத்து பெறப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி

சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு டெலிவரி

ஜனவரி 14 2022 அன்று வாசு குப்தா என்பவர் உணவு டெலிவரி ஆப் மூலம் ஒரு உணவகத்தில் ஹைதராபாத் வெஜ்  பிரியாணி  ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அசைவ பிரியாணி வந்துள்ளது. இந்த நிகழ்வு நடந்ததும் குப்தா அந்த உணவகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகாரளித்துள்ளார். உணவகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு கூப்பன் மூலம் அந்த பணத்தை வழங்க முன் வந்துள்ளது. ஒரு பிழை   மத நம்பிக்கைகளை மீறி உள்ள நிலையில் வெறும் மன்னிப்பைக் கேட்டு செலுத்திய பணத்திற்கு   கூப்பன்களை வழங்குவதால் உணவகம் நிகழ்ந்த தவறை உணரவில்லை என்று குப்தா உணவகத்துக்கு  மின்னஞ்சல் செய்துள்ளார். ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனம் வாசு குப்தா உணவுக்காக செலுத்திய ரூ 164/- ஐ திருப்பி வழங்கியுள்ளது.

தமது மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகவும் அசைவ பிரியாணி பொட்டலத்தை திறந்து பார்த்த பின்னர் பல நாட்கள்   உணவை பார்க்கும் போதெல்லாம் தமக்கு வயிறு குமட்டல் ஏற்பட்டது என்றும் உணவகமும் உணவு டெலிவரி ஆப் நிறுவனமும்   புரிந்த சேவை குறைபாடுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என லூதியானா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு பின்னர், உணவகமும் உணவு டெலிவரி ஆப் நிறுவனமும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூபாய் 50 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என கடந்த 2024 ஜூலை 23 அன்று லூதியானா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ 5 லட்சம் இழப்பீட்டை ரூ 50 லட்சமாக உயர்த்தி உத்தரவு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேகம்பேட்டில் வசித்து வருபவர் எம்.ஆர். ஆர்தர் மோஸ் மனைவி மண்ட நிர்மலா குமாரி. நர்சாக பணிபுரிந்து வரும் இவர் எம்பிளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் நிர்மலா குமாரி மகளுக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplantation) வழங்கப்பட வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.

நிர்மலா குமாரின் மகள் சாந்தி ஐயாணியின் சிகிச்சைக்கு ரூபாய் 50 லட்சம் செலவு ஏற்படும் என்ற மதிப்பீட்டை டாடா மெமோரியல் மருத்துவமனை வழங்கியுள்ளது. கடந்த 2012 நவம்பர் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை செலுத்த ஒப்புக்கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனம் அதற்காக மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவாதம் அளித்து கடிதத்தை வழங்கியுள்ளது. ஆனால், பணத்தை முன்கூட்டியே செலுத்தினால்தான் அறுவை சிகிச்சையை தொடங்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. பிரதம அமைச்சருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணைய நிர்மலா குமாரி புகார் அளித்த பின்னர் பல மாதங்கள் கழித்து சிகிச்சைக்கான பணத்தை செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. ஆனால், 2013 நவம்பர் மாதத்தில் சாந்தி ஐயாணி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாததால் உடல்நலம் குன்றி இறந்து விட்டார்.

சிகிச்சைக்கு ஸ்டேட் எம்ப்ளாயீஸ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் உரிய காலத்தில் பணத்தை வழங்கியிருந்தால் தனது மகளை காப்பாற்றி இருக்க முடியும் என்றும்   இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயல் சேவை குறைபாடு என்றும்   நிர்மலா குமாரி   தெலுங்கானா மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு (CC 208/2015, Telangana State Consumer Disputes Redressal Commission) தாக்கல் செய்தார். ஸ்டேட் எம்ப்ளாயீஸ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சேவை குறைபாடு புரிந்துள்ளது என்றும் இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூபாய் ஐந்து லட்சம் இழப்பீடு வழங்குமாறும் இழப்பீட்டை ஸ்டேட் எம்ப்ளாயீஸ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2017 செப்டம்பர் 6 அன்று தீர்ப்பளித்தது.

மகளின் உயிருக்கு மதிப்பு இவ்வளவுதானா? என்று அதிர்ச்சி அடைந்த நிர்மலா குமாரி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (First Appeal No. 2515 of  2017)  செய்தார். கடந்த 2024 ஜூலை 11 அன்று, தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் இன்சூரன்ஸ் நிறுவனம் பணத்தை உரிய நேரத்தில் வழங்காமல் நடைமுறைகளை காரணம் காட்டி கால தாமதம் செய்தது சேவை குறைபாடு என்றும் நடந்த சேவை குறைபாட்டிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் குறைந்த இழப்பீட்டை மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கியது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளருக்கு ரூபாய் 50 லட்சத்து 75 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புற்றுநோயை மறைத்து பெறப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி

கடந்த 2019 பிப்ரவரி 13 அன்று வெங்கிரட்டி என்பவர் மேக்ஸ்வெல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ 69,480/- செலுத்தி ரூபாய் 45 லட்சத்துக்கு மருத்துவ  இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றுள்ளார்.  இவ்வாறு மருத்துவ பாலிசியை பெற்ற இரண்டு நாட்களில் அவர் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது வாரிசுகள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீட்டுத் தொகை ரூபாய் 45 லட்சத்தை தருமாறு விண்ணப்பம் செய்தனர். புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்று வந்த நிலையில் அதனை மறைத்து உடல்நலம் நன்றாக இருப்பதாக பாலிசியை பெற செய்த விண்ணப்பத்தில் தெரிவித்து பாலிசி பெறப்பட்டு இருப்பதால் கப் இன்சூரன்ஸ் தொகையை தர முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்து விட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனம் வெங்குரெட்டியின் இறப்பிற்கு இன்சூரன்ஸ் தொகையான ரூபாய் 45 லட்சத்தை வழங்க வேண்டும் என அவரது வாரிசுகள் ஆந்திர பிரதேச மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வழக்கு (CC 01/2020) தாக்கல் செய்தனர். கடந்த 2022 ஜூலை மாதத்தில் புகாரை தள்ளுபடி செய்து ஆந்திர பிரதேச மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை (First Appeal No. 664 of 2022) விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2024 ஜூலை 3 அன்று தீர்ப்பு வழங்கியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது தீய லாபம் அடைவதற்காக இன்சூரன்ஸ் பாலிசியை பிரிமியம் செலுத்தி நோய் உள்ளதை மறைத்து பாலிசி பெற்றது தவறு என்பதால் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கியது சரியானது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல் திரட்டு: ரம்யா, கீர்த்தனா, லக்ஷிதா,  பூங்கா இதழ் & நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் பயிற்சி கட்டுரையாளர்கள் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்