spot_img
November 21, 2024, 6:17 pm
spot_img

இருண்ட வணிக நடைமுறை-பகுதி 5: சாஸ் பில்லிங், நச்சரித்தல், தந்திரமான கேள்வி, முரட்டு மால்வேர் இருண்ட வணிகமுறைகளை அறிவோம்!

சாஸ் பில்லிங்

“சாஸ் பில்லிங்” (SaaS – software as a service billing) என்பது ஒரு சாப்ட்வேர் அல்லது மொபைல் அப்ளிகேஷன்களுக்கு சந்தா என்ற பெயரில் நுகர்வோரிடமிருந்து பணம் பறிக்கும் குறுக்கு வழிகளை பயன்படுத்தி முடிந்தவரை மறைமுகமாக திரும்பத் திரும்ப பணம்   வசூலிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது.

உதாரணமாக, ஒரு அப்ளிகேஷனை கட்டணமில்லா சோதனை உபயோகத்துக்கு வழங்குவதாக (free trial)   இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்ட காரணத்தால் பதிவிறக்கம் (download) செய்து உபயோகித்து வருகிறீர்கள் என்றால் ஃப்ரீ ட்ரையல் காலம் முடிந்தவுடன் தன்னிச்சையாகவே உங்களது  வங்கிக் கணக்கில் இருந்து சந்தா தொகையை தங்களுக்கு எவ்வித அறிவிப்பும் வழங்காமல் எடுத்துக் கொள்வது.   எவ்வாறு எனில் ஃப்ரீ ட்ரையல் பெறுவதற்கு முன்னதாக தங்களிடம் தங்களது வங்கிக் கணக்கு அல்லது ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு உள்ளிட்ட சுய விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கப்படும் போது தாங்கள் அதனை    பதிவு செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்துதல் மூலம்.

ஒரு மொபைல் அப்ளிகேஷனுக்கு அல்லது ஏதேனும் ஒரு சேவைக்கு சந்தா (subscription) ஒரு நுகர்வோர் செலுத்தி இருக்கும்போது சந்தா காலம் முடிந்தவுடன் முன்கூட்டியே தெரிவிக்காமல் வங்கிக் கணக்கில் இருந்து சந்தாவை நீட்டிக்க பணத்தை எடுத்துக் கொள்வது அல்லது   தானாக புதுப்பிக்க (auto renewal) கட்டணம்  என   தெரிவித்து விட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வது போன்றவை இந்த வகை இருண்ட வணிக நடைமுறையின் உதாரணங்களாகும்.

ஒரு குறிப்பிட்ட வகை சேவைக்கு சந்தா செலுத்தி இருக்கும் போது நுகர்வோர் உபயோகிக்காத சேவைக்கும் சேர்த்து   கட்டணத்தை விதிப்பது மற்றும் நிழலான கிரெடிட் கார்டு (shady credit card) அங்கீகார நடைமுறைகளைப் பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றுதல் போன்றவை இந்த வகை இருண்ட வடிவ வணிக நடைமுறைகளாகும். நிழலான கிரெடிட் கார்டு முறை என்பது இணையதளங்களில் உங்களது கிரெடிட் கார்டு எண்  உட்பட உங்களது விவரங்களை பெற்றுக் கொண்டு அதனை மோசடியாக பயன்படுத்தி உங்கள் பணத்தை அபகரிக்கும் முறையாகும்.

நச்சரித்தல்

வணிக லாப நோக்கத்தில் வேண்டுகோள்களை அல்லது தகவல்களை நுகர்வோரின் அனுமதியின்றி அவருக்கு தொந்தரவு செய்யும் வகையில் மீண்டும் மீண்டும் அனுப்பி நச்சரிப்பது (Nagging) இருண்ட வணிக நடைமுறைகளில் ஒன்றாகும்.  

உதாரணமாக, ஒரு இணையதள பக்கத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது தங்களது இணையதள அப்ளிகேஷனை பதிவிறக்கம்   செய்யுமாறு திரும்பத் திரும்ப   கணினி அல்லது மொபைல் போன் திரையில் காட்டுவது. பாதுகாப்பு காரணங்களுக்காக என்பன போன்ற கருத்துக்களை தெரிவித்து இணையதள பக்கத்தை பார்த்துக் கொண்டிருப்பவரின் அலைபேசி எண் உள்ளிட்ட சுய விவரங்களை கேட்பது போன்றவை உதாரணங்களாகும்.  ஒரு இணையதள பக்கத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் போது நோட்டிபிகேஷன் அனுமதியை (turn on notification) தருமாறு தொடர்ந்து அந்தப் பக்கத்தில் அறிவிப்பை கொடுப்பதும் மற்றும் குக்கீசை அனுமதிக்குமாறு அதனை வேண்டாம் என கூறுவதற்கு எவ்வித   தேர்வும் (choosing option for “No”) இல்லாத வகையில் தொடர்ந்து அந்த  பக்கத்தில் அறிவிப்பை கொடுப்பதும் இருண்ட வடிவ வணிகங்களின் உதாரணங்களாகும்

தந்திரமான கேள்வி

குழப்பமான அல்லது தெளிவற்ற மொழி, குழப்பமான வார்த்தைகள், இரட்டை எதிர்மறைகள் அல்லது பிற ஒத்த தந்திரங்களை வேண்டுமென்றே பயன்படுத்தி ஒரு நுகர்வோரை தவறாக வழிநடத்தி   தீய வணிக லாபம்   அடைவதற்கான இருண்ட வடிவ வணிக நடைமுறைகளில் ஒன்றுதான் “தந்திரமான கேள்வி” (Trick Question) முறையாகும்.

முரட்டு மால்வேர்

உங்கள் கணினியில் வைரஸ் இருப்பதாக தெரிவித்து உங்களை நம்ப வைத்து அதனை நீக்குவதற்கான  போலியான அப்ளிகேஷனை (Rogue Malwares) தங்களுக்கு விற்பனை செய்வது மற்றும் அதன் மூலம்  உங்கள்   கணினியில்   தகவல்களை   திருட வழிவகை செய்வது இருண்ட வணிக வடிவ நடைமுறையாகும். 

கட்டணம் இல்லாமல் ஆடியோ, வீடியோ போன்ற தரவுகளை வழங்குவதாக கூறி  போலியான அப்ளிகேஷனை    பதிவிறக்கம்   செய்ய வைப்பது, இணையதளத்தை பயன்படுத்தும் போது ஒரு விளம்பரத்தை காட்டி அந்த விளம்பரத்துக்குள் நுகர்வோர் செல்லும் போது மீண்டும் திரும்பி வர   நிர்பந்தம் செய்து பணத்தை பறிப்பது போன்றவை இந்த வகையிலான இருண்ட வடிவ வணிக   நடைமுறைகளாகும்.

அரசு வெளியிட்டுள்ள இருண்ட வடிவ வணிக நடைமுறை  குறித்த வழிகாட்டுதல்    தொடர் இத்துடன் நிறைவு பெற்றது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்