spot_img
January 28, 2025, 9:44 am
spot_img

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

நாமக்கல் சா. பே. புதூரில் வசிக்கும் தவக்குமார் மனைவி சுஜாதா (42) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கின் விவரம் வருமாறு. தமக்கு கலையரசி என்ற மகளும் பூபதி என்ற மகனும் இருந்த நிலையில் தமது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2023 செப்டம்பர் மாதத்தில் நாமக்கல் நகரில் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகம் (IWINS HOTEL) ஒன்றில் சவர்மா சிக்கன் பார்சல் வாங்கி வந்து தமது குழந்தைகள் சாப்பிட்டனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில்    கலையரசியின் உடல் நலம் மோசம் அடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டார்.

கலையரசி, பூபதி ஆகியோருக்கு உணவகத்தில் பார்சல் வாங்கி வந்த நாளில் உணவு சாப்பிட்ட 43 பேருக்கு உடல் நலப் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக காவல்துறையின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் தரம் குறைந்த உணவை தயாரித்து வழங்கியது கலையரசின் இறப்புக்கும் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கும் காரணமாகும். நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் உணவு பாதுகாப்பு அலுவலரும் உணவு பாதுகாப்பு  சட்டப்படி தரமான உணவு உணவகங்களில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கவனிக்க தவறிவிட்டனர். 

கலையரசியின் இறப்பிற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் உணவக உரிமையாளர் வழங்கவும் உணவகத்தில் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 43 வாடிக்கையாளர்கள் அடையாளம் தெரியாத நிலையில் தமது மகளை போல சிக்கன் சவர்மா சாப்பிட்டதால் அவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஒரே மாதிரியான பாதிப்பு என்பதால் தமக்கு இழப்பீடு வழங்குவதைப் போல மற்ற வாடிக்கையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க கலையரசியின் தாயார் வழக்கில் கேட்டுக் கொண்டுள்ளார். 

கலையரசியின் தயார் தாக்கல் செய்துள்ள வழக்கில் அவருக்கு இழப்பீடு கேட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இழப்பீடு கேட்ட நிலையில் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோர் பொதுநல வழக்காக கலையரசியின் தாயார் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு   நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 19ஆம் தேதி அன்று உணவக உரிமையாளரும் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட உணவு  பாதுகாப்பு அலுவலரும் பதிலளிக்க மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்