நுகர்வோர் தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் இத்தகைய செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் “ஆண்டொன்றுக்கு 30 சதவீதத்துக்கு மேல் கிரெடிட் கார்டுகள் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டி வசூலிப்பது நேர்மையற்ற வணிக நடைமுறை” என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2008 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சிட்டி பேங்க், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (HSBC) ஆகிய வெளிநாட்டு வங்கிகள் தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 20 டிசம்பர் 2024 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அனைத்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தியாக வெளியாகி உள்ளது.
Civil Appeal No. 5273 Of 2008, Civil Appeal No. 5294 Of 2008 Civil Appeal No. 5627 Of 2008 Civil Appeal No. 5278 Of 2008 Civil Appeal No. 6679 Of 2008 – Hongkong and Shanghai Banking Corp. Ltd. v. Awaz & Others- முழுமையான தீர்ப்பை உச்சநீதிமன்ற இணையதளத்தில் இருந்து பெறலாம்.
வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் கொள்கை முடிவை (policy decision) ரிசர்வ் பேங்க் மேற்கொள்கிறது. தற்போதைய ரிசர்வ் பேங்க் கொள்கையின்படி, வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கியின் இயக்குனர் குழுவில் முடிவு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் கொள்கை முடிவில் தலையிட தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு அதிகார வரம்பு கிடையாது. எனவே, ஆண்டொன்றுக்கு 30 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிக்க கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளன. அதே வேளையில் வங்கிகளின் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் இந்த தீர்ப்பு வங்கிகள் வழங்கும் அனைத்து கடன்களிலும் வாடிக்கையாளர்களை கடுமையாக பாதிக்க கூடுமோ? என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வங்கிகளில் கிரெடிட் கார்ட் கடன், குறுகிய கால கடன், நீண்ட கால கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், வாகன கடன் என்று பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வகையான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன.
இந்த நிலையை மாற்றி ஒரே நாடு – ஒரே கடனுக்கான வட்டி விகிதம் (one nation – one interest rate) என்பதை ரிசர்வ் வங்கி மூலம் மத்திய அரசு அமல்படுத்தலாமே? என்று பலர் கருதுகின்றனர்.
கடன் வகைகளை பட்டியலிட்டு ஒவ்வொரு கடனுக்கும் அதிகபட்ச வட்டி எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும்? என்பதையும் கடனை செலுத்த தவறினால் எவ்வளவு அபராத வட்டி விதிக்கப்படலாம்? என்பதையும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்யலாம். இதன் மூலம் வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க இயலும் என்பதே நுகர்வோர் ஆர்வலர்களின் கருத்தாகும்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஒரே நாடு ஒரே வட்டி விகிதம் என்ற கொள்கையை அமல்படுத்துவதும் மத்திய அரசின் கைகளில் உள்ளது.