ஒரு பொருளை விற்பனையாளரிடம் இருந்து அல்லது ஒரு சேவையை (சர்வீஸ்) சேவை வழங்குபவரிடம் இருந்து வாங்கும் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் என்று பொதுவாக கூறலாம். ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நுகர்வோர் உரிமைகளை வழங்குகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 இந்திய குடிமக்களுக்கு ஆறு வகையான நுகர்வோர் உரிமைகளை வழங்கியுள்ளது.
1. பாதுகாப்பு உரிமை
நுகர்வோரின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களை அல்லது சேவையை சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிரான பாதுகாப்பு உரிமை ஒவ்வொரு நுகர்வோருக்கும் உள்ளது. இதன் மூலம் உற்பத்தி குறைபாடு இல்லாத, தரமான, பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான உரிமைகள் நுகர்வோர்க்கு உண்டு.
உதாரணமாக, மின் சாதனங்கள், எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களை வாங்குவது, பேருந்தில் பயணிக்க கட்டணம் செலுத்தி சேவையை பெறுவது, கட்டணம் செலுத்தி விளையாட்டு பூங்காக்களை பயன்படுத்துவது போன்ற சேவைகளை வாங்குவது உள்ளிட்டவற்றை உள்ளிட்ட பலவகையான நுகர்வுகளில் இந்த உரிமைகள் நமக்கு மிகவும் தேவைப்படுகிறது.
2. தகவலறியும் உரிமை
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாக்க, தயாரிப்புகள், பொருட்கள் அல்லது சேவைகளின் அளவு, தரம், தூய்மை, ஆற்றல் மற்றும் விலை குறித்து வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தியாளர்கள் அல்லது சேவையை வழங்குபவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதுதான் நுகர்வோரின் தகவல் அறியும் உரிமையாகும். பொருள் விற்பனை வகையில் ஒரு உதாரணமாக, ஒரு பேக்கரி கடையில் பிரட் பொட்டலம் வாங்கும் போது அதில் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, அதனை உண்ண தகுந்த இறுதி நாள், உற்பத்தியாளரின் பெயர், பொட்டலத்தின் நிகர எடை, பிரட் பொட்டலம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொட்டலத்தின் கவரில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். சேவை வகைகளில் ஒரு உதாரணமாக, நோயாளியின் பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு முன், ஆலோசனைக் கட்டணம் நோயாளிக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அல்லது பிற சிகிச்சைகளை செய்வதற்கு எவ்வளவு தோராயமாக செலவு ஏற்படும் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
3. தேர்வு செய்யும் உரிமை
போட்டி விலையில் பல்வேறு பொருட்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான உரிமையே நுகர்வோர்களின் தேர்வு செய்வதற்கான உரிமையாகும்.
பொருள் விற்பனை வகையில் ஒரு உதாரணமாக, ஒரு துணி கடைக்கு சென்று சட்டை ஒன்றை வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட சட்டையை வாங்குமாறு விற்பனையாளர் வாடிக்கையாளரை கட்டாயப்படுத்த கூடாது. சேவை வகைகளில் ஒரு உதாரணமாக இன்சூரன்ஸ் செய்வதற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்டை அணுகும் போது ஒரு குறிப்பிட்ட வகையான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குமாறு அவர்கள் வாடிக்கையாளரை கட்டாயப்படுத்தக் கூடாது.
4. கேட்க உரிமை
நுகர்வோரின் நலன் குறித்த கருத்துக்கள் அரசு அமைப்புகளில் நுகர்வோரிடமிருந்து முறையாக கேட்கப்பட வேண்டும் என்ற உரிமை நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விற்பனை வகைகளில் உதாரணமாக, உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள் விற்பனை செய்யப்படும் போது நுகர்வோர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தால் அதனை சரியான முறையில் நுகர்வோரிடம் கேட்டு தக்க நடவடிக்கையை அவர் மேற்கொள்ள வேண்டும். சேவை வகையில் உதாரணமாக, வங்கி சேவையில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது வாடிக்கையாளர் அதனை வங்கி ஆம்பூட்ஸ்மேன் அமைப்பில் தெரிவிக்கும் போது அந்த அமைப்பானது வாடிக்கையாளரிடம் முழுமையாக கருத்துக்களை கேட்க வேண்டும்.
5. தீர்வுக்கான உரிமை
தீர்வுக்கான உரிமை என்பது நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அல்லது நுகர்வோரின் நேர்மையற்ற சுரண்டலுக்கு எதிராக பரிகாரம் தேட நுகர்வோருக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு பிரச்சனையில் எழும்போது மாவட்ட அளவில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போன்றவற்றில் புகார் செய்து பரிகாரம் தேடும் உரிமை இதற்கு ஒரு உதாரணமாகும்.
6. நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை
நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை மூலமாக நுகர்வோர் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்க இயலும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உரிமை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் கடமையாகும்.