spot_img
October 18, 2024, 10:35 am
spot_img

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள்

கடந்த 1986 ஆம் ஆண்டில் நுகர்வோர்   பாதுகாப்புக்கென பிரத்யோக சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.  நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 1986 ஆம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு தற்போது அமலில் இருந்து வருகிறது.

இந்த சட்டம் நுகர்வோருக்கு   எழும் பிரச்சனைகளின் வகைகளையும் அதற்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் நீதிமன்ற அமைப்பு முறையையும்  நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் எத்தகைய தீர்வுகளை நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் பெறலாம் என்பதையும் விரிவாக எடுத்துரைகிறது. இத்தகைய அடிப்படையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை தவிர   நுகர்வோர் பாதுகாப்புக்கு அமலில் உள்ள இதர சட்டங்களைப் பற்றியும்அறிந்து கொள்வதும் அவசியமானதாகும். 

உணவு பாதுகாப்பு

உணவும் உணவு சார்ந்த பொருட்களும் மக்களின் முக்கியமான நுகர்வு தேவையாக இருந்து வருகிறது. உணவு மற்றும் உணவு சார்ந்த  பொருட்கள் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு என்பது மிக அத்தியாவசியமானதாகும். உணவு உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல், மனித நுகர்வுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல் தொடர்பாக இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 உணவு பாதுகாப்பில் முக்கியமானதாகும். இந்தச் சட்டம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (The Food Safety and Standards Authority of India -FSSAI) உருவாக்கியுள்ளது. 

மருத்துவம்

மருத்துவ அலட்சியம் நுகர்வோரின் முக்கியமான பிரச்சினையாக உள்ள நிலையில் தேசிய மருத்துவ ஆணையங்கள் சட்டம், 2019 நுகர்வோருக்கு பல உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கி உள்ளது. மக்களின் உடல்நலத்துக்காக சந்தையில் மருந்துகளும் மருந்து தொடர்பான பொருட்களும் மிக அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு இன்றியமையாததாகும். மருந்துகள் கட்டுப்பாடு சட்டம், 1950, மருந்துகள் விற்பனை தொடர்பான நெறிப்படுத்தல்களை (regulations) உருவாக்கி உள்ளது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940, மூலம் மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organization- CDSCO) உருவாக்கப்பட்டுள்ளது. ஆபத்தான மருந்துகள் சட்டம், 2006 மருந்துகள் தொடர்பான மற்றொரு முக்கியமான சட்டமாகும்.

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955, நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்கு ‘அத்தியாவசியம்’ என்று அறிவிக்கப்பட்ட மொத்தப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், அரசாங்கம் அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கும் எந்தவொரு பேக்கேஜ் செய்யப்பட்ட பொருளின் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் (MSP) நிர்ணயித்தல் மற்றும் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் கட்டுப்பாட்டை வழங்குதல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டமாகும்.  இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தர நிர்ணயம்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தர நிர்ணயம் மற்றும் கட்டுப்பாட்டிற்காக இந்திய தர நிர்ணய அமைப்புச் சட்டம், 2016 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards- BIS) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கவும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அளவுகள்

எடைகள், அளவுகள் மற்றும் பொருட்களின் பேக்கேஜிங் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் சீரான தன்மையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான சட்டமாக சட்ட அளவியல் சட்டம், 2009 உள்ளது. இந்த சட்டம், அதன்  விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் வணிக நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இதர சட்டங்கள்

வேளாண் உற்பத்தி (தரப்படுத்துதல் மற்றும் குறியிடுதல்) சட்டம், 1937 (The Agricultural Produce (Grading and Marking) Act, 1937,) வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் தரநிலைகளை வகுக்க மற்றும் தரப்படுத்துதல் மற்றும் குறியிடுதல் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வர்த்தக முத்திரைகளை பதிவு செய்வதற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கும் மற்றும் மோசடியாக குறியீடுகளை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999  (The Trade Mark Act, 1999) அமலில் உள்ளது.

இந்திய ஒப்பந்தச் சட்டம், பொருட்கள் விற்பனைச் சட்டம், காப்பீடு தொடர்பான சட்டங்கள், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட சட்டங்களிலும் நுகர்வோர் பாதுகாப்புக்கான அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் அமலில் உள்ள சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள நுகர்வோருக்கான உரிமைகளும் பாதுகாப்பும் மீறப்படும் போது தீர்வுகளைப் பெற நுகர்வோர் நீதிமன்றத்தில் பாதிக்கப்படுபவர் வழக்கு தாக்கல் செய்யலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்