இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “ஏதேனும் முக்கிய செய்திகள் உண்டா சாமி? என கேட்டதற்கு “நுகர்வோர் செய்திகள் இல்லாமல் எந்த நாளையும் கடந்து விட முடியாது” எனக் கூறிவிட்டு உரைவீச்சை ஆரம்பித்தார் நுகர்வோர் சாமி.
“கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் சின்னாம்பாளையத்தில் உள்ள ஓலா இருசக்கர மின்சார வாகன விற்பனை நிறுவனத்தை ஓரிரு தினங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்கள் பலர் முற்றுகையிட்டுள்ளனர். புதிதாக இருசக்கர வாகனங்களை வாங்கி 100 கிலோ மீட்டர் ஓட்டுவதற்குள் பேட்டரி பழுதாகி விடுகிறது. சர்வீஸ் செய்தாலும் மீண்டும், மீண்டும் வாகனம் பழுதாகி விடுகிறது. வாடிக்கையாளர்களின் புகார்களை ஓலா விற்பனை மையம் பிரச்சனைகளை சரி செய்யாமல் நடந்து கொள்கிறது என்பதற்காக இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது” என்றேன் நான்.
“ஓலா மின்சார இருசக்கர வாகன வாடிக்கையாளர்கள் சுமார் 10,000 மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் மட்டும் கன்ஸ்யூமர் ஹெல்ப் லைன் (NCH) மூலமாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையை மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புக்கான உயர் அமைப்பாக செயல்படும் சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்சன் அத்தாரிட்டி (CCPA) கடந்த மாதத்தில் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தி பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (The Bureau of Indian Standards – BIS) அமைப்பும் ஓலா நிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் தரமாற்ற பேட்டரி கொண்ட வாகன விற்பனை குறித்த பிரச்சினையை விசாரிக்க தொடங்கியுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“பொருளை விற்பனை செய்பவர்கள் வழங்கும் ரசீதில் நுகர்வோரின் பெயர் இடம்பெற வேண்டும் என்றும் இனிப்பு, கார வகை உணவுப் பொருட்களை உதிரியாக விற்பனை செய்யப்பட்டால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டில் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என்றும் கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு நுகர்வோர் இடையேயும் வணிகர்களுடைய பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது சாமி! இவ்வாறு எங்குமே பார்க்க முடிவதில்லை. அது எப்படி சாத்தியம்? எந்த சட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது?” என்றேன் நான்.
“நுகர்வோர் பாதுகாப்பு சட்ட (பொது) விதிகள், 2020-ல் பணத்தைச் செலுத்தி பொருளை வாங்கும் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீது எவ்வாறு இருக்க வேண்டும்? என்று கூறப்பட்டுள்ளது. அதில் பணம் செலுத்தி வாங்கும் நுகர்வோரின் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூர் கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை வழங்கும் ரசீதுகளில் பெரும்பாலும் நுகர்வோரின் பெயர் இடம்பெறுவதில்லை. இதை, போலவே பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் காரம் மற்றும் இனிப்பு வகைகளை வைத்திருக்கும் கண்ணாடி பெட்டிக்குள் (show case) உள்ள தட்டின் (tray) முன்பாக காலாவதி தேதி எழுதி வைக்க வேண்டும் என்று அரசு ஆணைகள் உள்ளன. இவற்றை மேற்கோள் காட்டியே நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“உத்திரபிரதேசத்தில் ஒரு வணிக வளாகத்தை கட்டமைத்து கடைகளை விற்பனை செய்வதாக ஒரு கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த ஒருவர் கட்டுமான நிறுவனத்திடம் ரூபாய் 40 லட்சத்துக்கு பேசி ரூபாய் 27 லட்சத்தை முன்பணமாக செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் அவருக்கு அலாட்மென்ட் ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2017 ஆம் ஆண்டு செய்து கொடுத்துள்ளது. மூன்றாண்டு காலத்தில் கட்டுமானத்தை முடித்து கடையை ஒப்படைப்பதாக கட்டுமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாண்டு காலம் முடிந்த பின்னரும் கட்டுமான நிறுவனம் வணிக வளாகத்தை கட்டுவதற்கான எந்த பணிகளையும் தொடக்கவில்லை தொடங்கவில்லை. இதனால், பணம் செலுத்தியவர் உத்தரப்பிரதேச நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் வழக்கின் அறிவிப்பை பெற்றுக் கொண்டும் கட்டுமான நிறுவனம் ஆஜராகவில்லை. இருந்தபோதிலும், வணிகப் பயன்பாட்டுக்காக கடை வைக்க பணம் செலுத்தியுள்ளதால் பணம் செலுத்தியவர் நுகர்வோர் அல்ல என்றும் இதனால் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் உத்தரப்பிரதேச நுகர்வோர் ஆணையம் தெரிவித்துவிட்டது” என்றார் நுகர்வோர் சாமி.
“ஐயோ! சாமி! பணம் கொடுத்தவர் நிலைமை அவ்வளவுதானா? என கேட்டதற்கு “இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் தீர்ப்பை (F.A.No 933/2020, dated 30 July 2024) தேசிய நுகர்வோர் ஆணையம் சமீபத்தில் வழங்கியுள்ளது. வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கான ஒப்பந்தங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரிக்க தக்கவை அல்ல என்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தெரிவித்தாலும் சுய தொழிலுக்காக ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கி அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது. பணம் செலுத்தியவருக்கும் கட்டுமான நிறுவனத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் வணிக பயன்பாட்டுக்கானது என்றாலும் பணம் செலுத்தியவரின் எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்கும்போது சுய தொழிலுக்காகவே கடையை வாங்க அவர் பணம் செலுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு கட்டுமான நிறுவனம் செலுத்திய பணத்தை வட்டியுடனும் இழப்பீட்டினும் திரும்பத் தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று கூறிவிட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.