நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன்படி நுகர்வோர் என்பவர் யாரெனில் ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்குபவர் ஆவார். ஆனால், பொருளை அல்லது சேவையை மறு விற்பனை (resale) அல்லது வணிக பயன்பாட்டிற்காக (commercial purpose) வாங்கினால் நுகர்வோர் அல்ல. நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல வழக்குகளில் பொருளை அல்லது சேவையை விற்பனை செய்தவர் தங்களது பொருளை அல்லது சேவையை வாங்கியவர் வணிக நோக்கத்துக்காக வாங்கியுள்ளார் என்று கூறி நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என வாதிடுகின்றன.
ஓம்கார் ரியல் எஸ்டேட் மற்றும் டெவலப்பர் என்ற தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் ஒன்றை அறிவித்து அதில் வீடுகளை விற்பனை செய்ய முன் பதிவு செய்துள்ளது. கடந்த 2015 செப்டம்பர் மாதத்தில் குஷல்ராஜ் லேண்ட் டெவலப்பர் என்ற தனியார் நிறுவனம் அதன் இயக்குனர் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிப்பதற்காக ஓம்கார் ரியல் எஸ்டேட் அறிவித்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஒரு வீட்டை வாங்குவதற்காக ரூபாய் 50 லட்சத்தை செலுத்தி முன்பதிவு செய்துள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கு 2018 டிசம்பர் மாதத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட வீட்டின் சுவாதீனம் ஒப்படைக்கப்படும் என்று ஓம்கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக எந்தெந்த தேதிகளில், எவ்வளவு பணத்தை முன் பதிவு செய்தவர்கள் தவணைத் தொகைகளாக செலுத்த வேண்டும்? என்பதையும் அறிவித்துள்ளது. ஓம்கார் நிறுவனத்துடன் செய்து கொண்ட முன்பதிவு ஒப்பந்தப்படி வீட்டை முன்பதிவு செய்த குஷல்ராஜ் நிறுவனத்தினர் ரூபாய் 6 கோடியே 80 லட்சத்தை தவணை தொகையாக ஓம்கார் நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் 2018 டிசம்பர் மாதத்தில் வீட்டின் சுவாதீனத்தை வழங்குவதாக அறிவித்திருந்த ஓம்கார் நிறுவனம் 2017 மார்ச் மாதத்தில் குடியிருப்பு வளாகம் கட்டி முடிக்கப்பட்டதாக அறிவித்து மீத தொகையை செலுத்தி வீட்டின் சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளுமாறு குஷல்ராஜ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு 20 மாதங்களுக்கு முன்னதாகவே திடீரென செலுத்த வேண்டிய முழு தொகையையும் கேட்டதால் வீட்டுக்கு முன் பதிவு செய்த குஷல்ராஜ் நிறுவனத்தால் உடனடியாக பணத்தை செலுத்த இயலவில்லை இதனால் ஓம்கார் நிறுவனம் குஷல்ராஜ் நிறுவனம் செய்திருந்த முன்பதிவு ரத்து செய்து அந்த வீட்டை வேற நபருக்கு வழங்கியதோடு குஷல்ராஜ் நிறுவனம் செலுத்திய ரூபாய் 7 கோடியே 30 லட்சத்தை திருப்பி வழங்கவும் மறுத்துவிட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட குஷல்ராஜ் நிறுவனம் ஓம்கார் நிறுவனத்தின் மீது தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஓம்கார் நிறுவனத்தின் செயல்பாடு சேவை குறைபாடு உடையது என தீர்ப்பளித்து உத்தரவிட்டது. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓம்கார் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து (Civil Appeal No.858 of 2023) தங்களிடம் வீட்டை முன்பதிவு செய்த நிறுவனம் வணிக நிறுவனம் என்றும் தங்களிடம் வீட்டை வாங்கி மறு விற்பனை செய்வதற்காக அல்லது வணிக நோக்கத்துக்காகவே தங்களிடம் வீடு முன் பதிவு செய்யப்பட்டது என்றும் இவ்வாறு வணிக நோக்கத்துக்காக அல்லது மறு விற்பனை செய்வதற்காக பணம் செலுத்தப்படும் எந்த ஒரு பரிவர்த்தனையும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி விசாரிக்கத்தக்கது அல்ல என்றும் குஷல்ராஜ் நிறுவனத்துக்கும் தங்களுக்கும் உள்ள உறவு விற்பனையாளர் – நுகர்வோர் என்ற அடிப்படையிலானது அல்ல என்றும் வாதிட்டது.
இந்த வழக்கில் கடந்த 2024 ஆகஸ்ட் 23 அன்று வழங்கிய தீர்ப்பில், வீட்டை முன்பதிவு செய்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் வணிக நிறுவனம் என்பதால் முன்பதிவு செய்யப்பட்ட வீடு வணிக பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டது என்று ஓம்கார் நிறுவனம் கூறுவது சரியானது அல்ல என்றும் வீடு முன்பதிவு செய்யப்படும்போதே குஷல்ராஜ் நிறுவனத்தின் இயக்குனரின் குடும்பத்திற்கு என்று முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டியதாக உள்ளது என்றும் வணிக நோக்கத்திற்கானது என்று நிரூபிக்க ஓம்கார் நிறுவனத்தில் எவ்வித ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் வெறும் வார்த்தைகளால் வணிக நோக்கத்திற்காக வாங்கப்பட்டது என்று கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் தாக்கல் செய்யும் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் சரியானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
வீட்டை முன்பதிவு செய்யும்போது விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி 2018 டிசம்பரில் வீடு கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்படும் என்ற நிலையில் இருபது மாதங்களுக்கு முன்னதாகவே வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக கூறி முழு பணத்தையும் வீடு கட்டும் ஓம்கார் நிறுவனம் கேட்டு அதனை செலுத்தாததால் முன்பதிவு ரத்து செய்து பணத்தை திரும்ப வழங்காதது ஓம்கார் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பு சரியானது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.