கல்வி நிலையங்களில் சேருவதற்கும் வேலை வாய்ப்புக்கும் நடத்தப்படும் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் கோச்சிங் இன்ஸ்டிடியூட் (Coaching Institute) என்ற பெயரில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை (misleading advertisement) நம்பி அங்கு பணத்தை செலுத்தி ஏமாறுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தவறாக வழி நடத்தும் விளம்பரங்களை பயிற்சி மையங்கள் வெளியிடுவதை தடுக்கும் விதிகள் (Guidelines for Prevention of Misleading Advertisement in Coaching Sector, 2024) கடந்த 2024 நவம்பர் 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய விதிகளின்படி, தங்கள் பயிற்சி நிலையத்தில் படித்ததால் ஒரு குறிப்பிட்ட மாணவர் போட்டி தேர்வில் முதலாவது இடத்தை அல்லது இரண்டாவது இடத்தை பெற்றார் என விளம்பரத்தை பயிற்சி மையங்கள் வெளியிடும்போது அவரது பெயரையும் புகைப்படத்தையும் வெளியிடுவதோடு அவர் பயிற்சி மையத்தில் பணம் செலுத்தியுள்ள விவரத்தையும் வெளியிட வேண்டும். இதன் மூலம் பயிற்சி மையத்தில் படிக்காத ஒரு நபர் சிறந்த வெற்றியை பெற்று விட்டால் அவரை தங்கள் பயிற்சி மையத்தில் படித்ததாக விளம்பரம் செய்வது தவிர்க்கப்படுகிறது. தங்களது பயிற்சி மையத்தில் படித்த மாணவர் இத்தகைய வெற்றியை பெற்று விட்டார் என்று கூறி பயிற்சி மையத்தால் வெளியிடப்படும் எந்த ஒரு விளம்பரத்திலும் வெற்றி பெற்ற மாணவரின் புகைப்படத்தையும் அவரது விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாணவரின் எழுத்து மூலமான ஒப்புதல் இல்லாமல் பயிற்சி மையங்கள் வெளியிடக்கூடாது.
புதிய விதிகளின்படி, “எங்களிடம் படித்தால் நூறு சதவீதம் பாஸ்” என்று விளம்பரம் வெளியிட்டு விளம்பரத்தின் கீழே சிறிய எழுத்துக்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற விளம்பரங்களை பயிற்சி மையங்கள் வெளியிடுகின்றனர். எங்களிடம் படித்தால் நூறு சதவீதம் பாஸ் என்று எவ்வளவு பெரிய அளவிலான எழுத்தில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. அதே அளவில் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற எழுத்தின் அளவு இருக்க வேண்டும் என்பதோடு என்ன நிபந்தனைகள் என்பதும் பெரிய அளவிலான எழுத்தில் விளம்பரத்தில் இடம்பெற வேண்டும். இதன் மூலம் விளம்பரத்தை பார்த்துவிட்டு கீழே உள்ள படிக்க முடியாத அளவில் இடம் பெற்றுள்ள நிபந்தனையை தெரிந்து கொள்ளாமல் விளம்பரத்தை நம்புவது தவிர்க்கப்படுகிறது.
புதிய விதிகளின்படி, பயிற்சி மையங்கள் வழங்கும் படிப்பு பற்றிய விவரங்கள், பயிற்சி மையத்தில் உள்ள வசதிகள், பயிற்சி மையத்திற்கு உள்ள அங்கீகாரம் போன்ற உண்மையான தகவல்களை விளம்பரங்களில் பயிற்சி மையங்கள் தெரிவிக்க வேண்டும். தவறினால் அவை தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் என கருதப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் சிஸ்டத்தில் (National Consumer Helpline System) பயிற்சி மையங்கள் இணைவது அவசியமானது.
புதிய விதிகளின்படி, வழங்கும் படிப்பின் கால அளவு, பயிற்சி மையத்தில் உள்ள வசதிகள், பயிற்சி கட்டணம், இடையில் பயிற்சியிலிருந்து விலகினால் திரும்ப வழங்கப்படும் பயிற்சி கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் பயிற்சி மையங்கள் வெளியிடும் விளம்பரங்களில் வெளியிட வேண்டும். போட்டித் தேர்வில் தேர்ச்சி அடைவது நிச்சயம், வேலை வாய்ப்பு உறுதி போன்ற தவறாக வழிநடத்தும் வாசகங்களை பயிற்சி மையங்கள் விளம்பரங்களில் வெளியிடக்கூடாது.
புதிய விதிகளின்படி, “இப்போது சேராவிட்டால் இந்த பயிற்சியில் எப்போதும் கிடைக்காது”, “மிகக் குறைந்த இடங்களை உள்ளன” என்பது போன்ற தந்திர வாசகங்களை பயன்படுத்தி பயிற்சி மையங்களில் சேர்வதற்கு அவசரத்தை உருவாக்கும் உத்திகளை பயிற்சி மையங்கள் பின்பற்றக் கூடாது – நேர்மையாற்ற வர்த்தக நடைமுறைகளை பயிற்சி மையங்கள் கடைப்பிடிக்க கூடாது.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடும் பயிற்சி மையங்கள் மீது சென்ட்ரல் கன்ஸ்யூமர் ப்ரொடக்சன் அத்தாரிட்டியில் புகார் செய்யலாம் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் புகார் செய்யலாம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்யும்போது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். தவறான விளம்பரங்களால் பல கோடிகளை சுருட்டும் பயிற்சி மையங்கள் புதிய விதிகளால் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிய விதிகளை அமலாக்கம் செய்ய தகுந்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே நுகர்வோர் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.