spot_img
November 15, 2024, 7:32 am
spot_img

அசல் ஆவணங்களை திருப்பி தராத வங்கி வாடிக்கையாளருக்கு நான்கு வாரங்களுக்குள் ரூ 1,00,000/- இழப்பீடு வழங்கவும் தவறினால் ஒவ்வொரு நாளும் ரூபாய் ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கடனை திருப்பிச் செலுத்திய பின்னரும் அசல் ஆவணத்தை வாடிக்கையாளருக்கு வழங்காத வங்கி நான்கு வாரத்துக்குள் அசல் ஆவணத்தை திருப்பி தரவும் ரூ 1,00,000/- இழப்பீடு வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் கிராமம், அய்யக்கல் புதூரில் வசித்து வருபவர் கந்தசாமி மகன் கே. நடராஜன் (77). இவருக்கு சொந்தமான நிலத்தின் அசல் ஆவணத்தை அடமானம் வைத்து இவரது மனைவியும் இவரும் கோயம்புத்தூரில் சிவானந்தா காலனியில் உள்ள இந்தியன் வங்கியில் வணிக அபிவிருத்திக்காக கடந்த 1990 ஆம் ஆண்டு ரூபாய் 10 லட்சம் கடன் பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் வங்கியின் சார்பில் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடராஜன் மீதும் அவரது மனைவி லட்சுமி மீதும் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.

வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட சமரச ஒப்பந்தப்படி ரூபாய் 15 லட்சத்தை பெற்ற கடனுக்காகவும் வட்டிக்காகவும் நடராஜன் திருப்பி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து வங்கியின் சார்பில் கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சமர்ப்பித்திருந்த அசல் ஆவணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு   வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னரும் அசல் ஆவணத்தை வழங்காததால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீது நடராஜன் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நுகர்வோர் மாவட்ட நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், தலைமையிலான அமர்வு இன்று (12-11-2024)  வழங்கிய தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்த ஒரு ஆவணத்தை வழங்காமல் காலதாமதம் செய்து வருவது சேவை குறைபாடு என்று கூறப்பட்டுள்ளது. நான்கு வாரத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு அவரது அசல் ஆவணத்தை திரும்ப வழங்கவும் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கத் தவறினால் காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளும் ரூபாய் ஆயிரத்தை கூடுதல் இழப்பீட்டுத் தொகையாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்