இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷா தேவி ஸ்வீடன் சிட்டிசன்சிப் பெற்றவராவார். இந்திய வம்சாவளி என்ற பிரிவில் விசா பெற்று இந்தியாவிற்கு அவ்வப்போது வந்து சில காலம் இருப்பது ஆஷா தேவியின் வழக்கமாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு சுவீடனில் இருந்து பெர்லின், அபுதாபி வழியாக வரக்கூடிய எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் ஆஷா தேவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இவரது அதிக எடை உள்ள பைகளை விமான நிலையத்தில் ஏர்வேஸ் கவுண்டரில் கொடுத்து விமான லக்கேஜ் பிரிவுக்கு அனுப்பி விட்டார். கைப்பை (hand bag) ஒன்றை மட்டும் விமானத்துக்குள் கொண்டு சென்று விமானத்தில் இருக்கைக்கு மேலே இருக்கக்கூடிய கேபின் பகுதியில் (overhead cabin) வைத்துள்ளார்.
இந்நிலையில் பெர்லின் விமான நிலையத்தில் விமான பணிப்பெண் ஒருவர் ஆஷா தேவியை அணுகி சாதாரண வகுப்பில் இருக்கை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் உயர் வகுப்பில் உள்ள இருக்கையில் மாறி கொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது ஆஷா தேவி அவரது இருக்கைக்கு மேல் இருந்த கைப்பையை எடுக்க முயற்சித்த போது உயர் வகுப்பில் உள்ள இருக்கை பகுதியில் கைப்பையை வைக்க இடமில்லை என்று கூறி கைப்பையை ஏற்கனவே உள்ள இடத்திலேயே விட்டுச் செல்லுமாறு கேட்டுள்ளார். தமது கைப்பையில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாகவும் அதற்கு பூட்டு (locking system) எதுவும் இல்லை என்றும் தம் இருக்கைக்கு மேலே உள்ள இடத்தில் இருப்பதே பாதுகாப்பானது என்றும் ஆசாதேவி தெரிவித்தும் அவர் பேசும் மொழியை புரிந்து கொள்ளாத விமானப்பணி பெண் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
டெல்லியில் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பாக ஆஷா தேவி கைப்பையை விமானத்தில் இருக்கைகளுக்கு மேல் இருக்கக்கூடிய கேபினில் அனைத்து இடத்திலும் தேடியும் காணவில்லை. விமானத்திலிருந்து பயணிகள் இறங்கத் தொடங்கி விட்டதால் விமான பணி பெண்களையும் அணுக இயலவில்லை. விமானத்திலிருந்து வந்து கன்வேயர் பெல்ட்டில் தமது அதிக எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு கைப்பையும் கன்வேயர் வருமோ பெல்ட்டில் வருமோ? என காத்திருந்து ஏமாற்றமே ஆஷா தேவிக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்பு விமான நிலையத்தில் செயல்படும் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு ஆஷா தேவி சென்று புகாரை அங்கு வழங்கப்பட்ட படிவத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த படிவத்தின் கார்பன் நகலை ஆஷா தேவிக்கு வழங்கி உள்ளனர். ஆஷா தேவி வீட்டுக்கு சென்ற பின்னர் பலமுறை ஏர்வேஸ் நிறுவனத்தில் தமது கைப்பையை கண்டுபிடித்து வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்கள் கழித்து பார்சல் மூலமாக கைப்பை அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால், அந்தக் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கரன்சிகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்றும் விமான நிறுவனம் அவற்றை திருப்பித் தருவதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆஷா தேவி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 17 செப்டம்பர் 2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஷா தேவி விமான நிலையத்தில் எழுதிக் கொடுத்த புகார் படிவத்தில் கைப்பையில் இருந்த பொருட்கள் என்ற பட்டியலில் வெளிநாட்டு கரன்சிகளையும் தங்க நகைகளையும் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் இந்நிலையில் கைப்பையில் காணாமல் போனதாக சொல்லப்படும் வெளிநாட்டு கரன்சிகளையும் தங்க நகைகளையும் திரும்ப வழங்குமாறு உத்தரவிட இயலாது என்றும் கைப்பையை விமானத்தில் இருந்து இறங்கும் போது வழங்காமல் காலதாமதமாக வழங்கியதற்கு இழப்பீடாக ரூ 50,000/- மட்டும் வழங்க வேண்டும் என்றும் விமான நிறுவனத்துக்கு இந்த தீர்ப்பில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
01. விமான பயணத்தின் போது விமான லக்கேஜ் பிரிவிற்கு அனுப்பி இருந்தாலும் கைப்பையை வைத்திருந்தாலும் விமானத்திலிருந்து இறங்கி வரும் போது அவற்றில் ஏதாவது காணாமல் போனால் புகார் கொடுக்கும் போது காணாமல் போன கைப்பை அல்லது லக்கேஜில் உள்ள பொருட்களின் பட்டியலை எழுதிக் கொடுக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டு பயணத்தின் போது ஒவ்வொரு லக்கேஜிலும் உள்ள பொருட்களின் பட்டியலை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.
02. விமானத்தில் லக்கேஜ் பிரிவுக்கு அனுப்பிய லக்கேஜ்கள் விமானத்தில் இருந்து இறங்கி வரும் போது கன்வேயர் பெல்ட்டில் வராமல் விமானத்திலேயே வேறு ஊருக்கு செல்வது அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது. இதனால், அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பலர் கைப்பையில் மாற்று உடைகளை வைத்துக் கொள்ளுகிறார்கள். இவ்வாறு பயணிகளின் லக்கேஜ்கள் அவர் இறங்கும் விமான நிலையத்திற்கு வந்து சேராமல் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தவிர்க்க விமான கட்டுப்பாட்டு அமைப்புகள் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.