ஆன்லைன் பர்சேஸ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்து வருவதால் மஞ்சை மஞ்சள் உருளைக்கிழங்கு தேசமாக (country of couch potatoes) இந்தியா மாறக்கூடும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். சிறிய கடை நடத்துபவர்களின் வணிகம் கடுமையாக பாதிப்பதற்கு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் முக்கிய காரணமாக உள்ளன என்றும் உணவுகளை வீட்டிலிருந்து ஆர்டர் செய்து சாப்பிடுதல், திரைப்படங்களை ஓ.டி.டி (OTT) மூலம் வீட்டிலேயே பார்த்தல் போன்ற பழக்கங்களால் மக்கள் சமூக உறவுகளில் (social relations) ஈடுபடுவது குறைந்து அமைதியற்ற வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் என்றும் நண்பர்களுடன் இரவு உணவு அல்லது காபிக்கு வெளியே செல்வது போன்ற சமூக நடவடிக்கைகள் மனித வளர்ச்சிக்கு அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அறிவியல் வளர்ச்சி நுகர்வோருக்கு வசதிகளை உருவாக்கி கொடுத்தாலும் சில்லறை வர்த்தகத்தில் (retail business) உள்ள பாரம்பரியத்தை அவை பாதிக்கின்றன என்றும் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் உள்ளூர் சில்லறை விற்பனைக் கடைகள் போன்ற துறைகளில் ஆன்லைன் பர்சேஸ் விளைவுகளை மையமாகக் கொண்டு, ஈ-காமர்ஸின் வளர்ச்சி மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். “இப்போது நகரங்களின் கடைவீதிகளில் எத்தனை மொபைல் கடைகளைப் பார்க்கிறீர்கள்? 10 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் இருந்தனர்? அந்த மொபைல் கடைகள் எங்கே? ஆப்பிள் அல்லது பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமே மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் பாகங்களை விற்பனை செய்வார்களா?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகள் மூலம் ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி இந்திய சந்தையை கைப்பற்ற முயல்கின்றன என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. அமேசான் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் விலை, இழப்பு நிதி மற்றும் சரக்குகளை வைத்திருப்பதன் மூலம் வலுவான சந்தை இருப்பை நிறுவுவதற்கு அதிக அளவில் முதலீடு செய்கின்றன. இது அரசாங்கத்தின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மீறுகிறது” என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறியுள்ளார். அதே சமயத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களால் சிறிய வணிகர்களும் பொதுமக்களும் மிகுந்த பயனடைவதாக தெரிவித்துள்ளன. அரசாங்கம் இ-காமர்ஸுக்கு எதிரானது அல்ல, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிகங்களுக்கு இடையே நியாயமான போட்டியை மட்டுமே விரும்புகிறது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வீடுகளிலேயே வழங்கும் இ காமர்ஸ் நிறுவனங்களின் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தங்களது வியாபாரத்தை பாதிப்பதாக உள்ளது என்று அனைத்து இந்திய நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஸ்டாக் வைத்து விற்பது அல்லது வணிகர்கள் மூலமாக விற்பது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் இந்த நிறுவனங்கள் இரண்டு முறைகளிலும் வியாபாரத்தை நடத்துகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் பல நிறுவனங்கள் உள்ளூர் அளவில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்படுகின்றன. இதனால் நாட்டின் சில்லறை விற்பனைத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் மக்களின் வாங்கும் தேவையில் 90 சதவீத விற்பனையை பிடித்து விடும் என்று கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது உள்ளூர் சில்லரை விற்பனையாளர்கள் அரிதாகவே இருப்பார்கள். இந்த சூழலில் ஆன்லைன் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைகளே ஒவ்வொரு பொருட்களுக்கும் கொடுக்க வேண்டியது ஏற்படும். இதனால், வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை (Monopoly) ஆன்லைன் நிறுவனங்கள் பெற்று அவர்கள் நிர்ணயிப்பதே பொருட்களின் விலை என்ற நிலை ஏற்பட்டு எல்லா பொருட்களுக்கும் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்படும் என்று பலர் கருதுகிறார்கள்.
பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வணிகத்தை மேற்கொள்வதால் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம் மூலம் இந்தியாவின் பணம் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு பாதிக்கக்கூடும். இந்திய மக்களில் பெரும்பாலானோர் குறு, சிறிய மற்றும் நடுத்தர (micro, small and medium retail sellers) அளவிலான விற்பனை நிலையங்களை நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சில்லரை விற்பனை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் பாதிக்கப்படும் போது சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகும். ஆன்லைன் பர்சேஸ் முறையில் பல மோசடிகளும் அதிகரித்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.
சுருங்கக் கூறின், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் நிறுவனங்களை நெறிப்படுத்தாவிட்டால் (regulate) வருங்காலத்தில் அபரிமிதமான விலைவாசி உயர்வு, சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, இந்தியாவின் பணம் வெளிநாட்டுக்கு செல்லுதல் உள்ளிட்ட பல சவால்களை மேற்கொண்டு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றால் மிகையாகாது. மேலும், ஆன்லைன் வணிக இணையதளங்களில் பொருட்களை வாங்கி பிரச்சனை ஏற்படும் போது ஆன்லைன் வணிக இணையதளங்கள் தாங்கள் ஒரு மீடியேட்டர் மட்டுமே செயல்படுகிறோம் என்றும் தங்கள் இணையதளம் மூலம் வாங்கப்பட்ட பரிவர்த்தனையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழல்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தகுந்த சட்டம் இயற்றலும் அதனை அமலாக்கம் செய்வதும் நெறிமுறைக்கான அமைப்பை ஏற்படுத்துவதும் தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது.