spot_img
December 26, 2024, 6:23 pm
spot_img

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சரித்திரம் அறிவோம்

பழங்காலத்திலிருந்தே, நுகர்வோர் பாதுகாப்பின் முக்கியத்துவம் சமூகத்தில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், சமூக, அரசியல், பொருளாதார காரணங்களாலும் காலம் மற்றும் பிராந்தியம் உள்ளிட்ட வேறுபாடுகளாலும் நுகர்வோர் பாதுகாப்பு ஒவ்வொரு பகுதியிலும் ஒருமித்த வளர்ச்சியை அடையவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து   அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விவாதங்கள் தோன்றின.  

உலக நுகர்வோர் தினம்

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பல்வேறு நாடுகளில் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு இயக்கங்கள் (Voluntary Consumer Movement) தோன்றின. மக்களாட்சி நடைபெறும் பல நாடுகளில் நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆலோசனைகளையும் நடவடிக்கைகளையும் அரசுகள் மேற்கொண்டன. அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடி கடந்த 15 மார்ச் 1962 ஆம் தேதியில் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸுக்கு ஒரு செய்தியை (Message) அனுப்பி நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான சட்டங்களை இயற்றுமாறு பாராளுமன்றத்தை கேட்டுக்கொண்டார்.  இதனை தொடர்ந்து ஒவ்வொரு மார்ச் 15 அன்றும் உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  

நுகர்வோர் சங்கங்கள்

கடந்த 1960 ஏப்ரலில் தொடங்கப்பட்ட நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (Consumer International) பல்வேறு நாடுகளில் நுகர்வோர் பாதுகாப்புக்காக செயல்பட்டு வந்த சங்கங்களை ஒருங்கிணைத்தது. அமெரிக்காவில் 1970 – களின் முற்பகுதியில் ரால்ப் நாடர் தலைமையிலான நுகர்வோர் ஆர்வலர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதுடன் நுகர்வோர் உரிமைகளுக்கான பட்டியலையும் (List of Consumer Rights) வெளியிட்டனர். கடந்த 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச (Consumer International) அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (Economic and Social Council) ஆலோசனை நிலை தகுதியை (Consultative Status) 1977 ஆம் ஆண்டு வழங்கியது. இந்த அமைப்பின் சார்பில் 1975 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் நுகர்வோர் பாதுகாப்புக்கான மாதிரி சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை தயாரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பண்டைக்காலம் முதலே நுகர்வோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்ட போதிலும் 1960 ஆம் ஆண்டுகளுக்கு பின்னரே நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் இந்தியாவில் தோன்றின.

ஆலோசனைகள்

1977 ஆம் ஆண்டில், ஐ. நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரிடம் ஒவ்வொரு நாட்டிலும் இயற்றப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் நுகர்வோர் குறைதீர் அமைப்புகள் பற்றிய கணக்கெடுப்பைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டது. 1979 ஆம் ஆண்டில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளைக் கொண்ட விரிவான அறிக்கையை ஐ. நா. பொதுச் செயலாளரிடம் கோரியது. 1981 -1983 ஆண்டுகளில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் வேண்டுகோளின்படி ஐ.நா. பொதுச் செயலாளரால் ஐ.நா. உறுப்பு நாடுகளின் அரசுகளிடமும் நுகர்வோர் பாதுகாப்பு தன்னார்வ அமைப்புகளிடமும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான பொதுவான வழிகாட்டுதல்களின் தொகுப்பை உருவாக்கும் நோக்கத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள், 1985

ஐ.நா. பொது செயலாளரால் 1983 -ல் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு நுகர்வோர் பாதுகாப்பிற்கான வரைவு வழிகாட்டுதல்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கங்களுக்கு இடையே வழிகாட்டுதல்களின் நோக்கம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விரிவான விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகள் நடந்தன. 18 ஏப்ரல் 1985 அன்று நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் (United Nations Guidelines for Consumer Protection) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. குறிக்கோள்கள், பொதுக் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என நான்கு பிரிவுகளாக 46 கோட்பாடுகளாக (IV Parts & 46 Articles) ஐ.நா. நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள், 1985, அமைந்திருந்தன. இந்த கோட்பாடுகளில் 36 கோட்பாடுகள் “உடல் பாதுகாப்பு, நுகர்வோரின் பொருளாதார நலன்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விநியோக வசதிகள், நுகர்வோர் பரிகாரம் பெற உதவும் நடவடிக்கைகள், கல்வி மற்றும் தகவல் திட்டங்கள், குறிப்பிட்ட நடவடிக்கைகள்” என்ற தலைப்புகளிலான வழிகாட்டுதல்கள் ஆகும்.

தேசிய நுகர்வோர் தினம்

1985 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் நுகர்வோர் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை இந்தியா ஏற்று கொண்டதாலும் இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசு விருப்பம் கொண்டு இருந்ததாலும் இந்திய பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை 24 டிசம்பர் 1986 அன்று பெற்று அரசு இதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. 

 திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், 2015

2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் நுகர்வோர் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் நுகர்வோர் பாதுகாப்புக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை (Revised Guidelines) கடந்த 22 டிசம்பர் 2015 அன்று ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் முற்றிலும் நீக்கப்பட்டு புதிய அம்சங்களுடன் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வு

பாராளுமன்றம் இந்திய மக்களாகிய நமக்கு வழங்கியுள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் போது அவற்றில் தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகவும் நாம் ஒவ்வொருவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அறிந்து கொள்வதும் நுகர்வோர் விழிப்புணர்வை பரப்புவதும் நமது கடமையாகும்.

இணையதள முகவரிகள்

ஐ.நா. நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள், 1985 

https://documents.un.org/doc/resolution/gen/nr0/462/25/pdf/nr046225.pdf?token=EfnvYxDIakDHtZRUjc&fe=true

ஐ.நா. நுகர்வோர் பாதுகாப்புக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், 2015 

https://unctad.org/system/files/official-document/ares70d186_en.pdf

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019

https://consumeraffairs.nic.in/sites/default/files/CP%20Act%202019.pdf

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்