spot_img
October 22, 2024, 9:01 am
spot_img

மூன்று ரூபாய் அதிகம் வசூலித்ததற்காக சட்டப் போராட்டம் நடத்தி வென்ற பயணி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டியில் வசிப்பவர் ராஜன் மகன் பாரதிவாணன் (41).  இவர் கடந்த 2023 மார்ச் மாதத்தில் சேலம் கந்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் செல்வதற்காக எஸ்ஆர்பிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். 

பாரதிவாணன் நடத்துனரிடம் ரூபாய் பத்தை கொடுத்து  பயண சீட்டு கேட்டபோது நடத்துனர் ரூ.10/-க்கான   பார்சல்  கட்டண சீட்டை வழங்கியுள்ளார்.  கந்தம்பட்டியில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூபாய் ஏழுக்கு பதிலாக பத்து ரூபாய் ஏன் வசூல் செய்கிறீர்கள்? என்றும் மீதம் ரூபாய் மூன்று தருமாறும் பாரதிவாணன் நடத்துனரிடம் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் பயணியிடம் தரக்குறைவாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

நடத்துனரின் செயலால் உளைச்சலுக்கு உள்ளான பயணி அரசு கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நடத்துனர் மீதும் பேருந்து உரிமையாளர் மீதும் புகார் செய்துள்ளார். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் விசாரணையில்   அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக பயண கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உத்தரவுப்படி பேருந்து உரிமையாளர் ரூபாய் மூன்றை வரைவோலை மூலமாக பயணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பேருந்து நிர்வாகமும் நடத்துனரும்   அரசு கட்டணத்தை விட கூடுதலாக பணத்தை வசூலித்ததற்காகவும் சரியான நடவடிக்கையை போக்குவரத்து அலுவலர் எடுக்காததற்காகவும் சம்பந்தப்பட்ட பயணி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூடுதலாக ரூபாய் மூன்று கட்டணம் வசூலித்ததற்கு   இழப்பீடாக ரூபாய் ஆயிரமும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் ஆயிரமும் வழக்கு தாக்கல் செய்தவருக்கு பேருந்தின் உரிமையாளர் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று   தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து உரிமையாளர் இரண்டு வார காலத்திற்குள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் காலங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் தொகையை பயணிகளிடம் வசூலிக்க மாட்டோம் என உறுதி மொழியை வழங்க வேண்டும் என்றும் நிரூபிக்கப்பட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு காரணமாக ஏன்  பேருந்து வழித்தட உரிமத்தை ரத்து செய்யக்கூடாது? என்பதற்கு சரியான   முகாந்திரத்தை வழங்க வேண்டும் என்றும் இதனை செய்ய தவறினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு   பேருந்து வழித்தட உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது சம்பந்தப்பட்ட   நடத்துனரின் உரிமத்தை ஒரு மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், பயணி கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது  குறித்து அவருக்கு அனுப்பிய பதிலில் நடத்துனர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படவில்லை. நீதிமன்றத்திலும் இடைநீக்கத்திற்கான உத்தரவு   நகல் தாக்கல் செய்யப்படவில்லை. 

வட்டார போக்குவரத்து அலுவலர் இரண்டு வார காலத்திற்குள் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சம்பந்தப்பட்ட  நடத்துனர் உரிமத்தை இடைநீக்கம்  செய்ததற்கான ஆணையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான சாட்சியத்தை வழங்கியதாக சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (மேற்கு) மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்