spot_img
December 3, 2024, 11:17 pm
spot_img

உணவகங்கள் நுகர்வோர் பாதுகாப்பு தலங்களாக செயல்படுகின்றனவா?

காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து காரில் கிளம்பி 400 கிலோமீட்டர் கடந்து சென்னையை அடைய மதியம் ஒரு மணி ஆகிவிட்டது.   கொல்லிமலையில் விளையும் பொருட்களுக்கு சந்தையாக திகழும்  பேளுக்குறிச்சி என்ற கிராமத்தில்   ஒரு சின்னஞ்சிறிய கடையில்  நானும் நண்பர் கண்ணனும்   காலை சுமார் எட்டு மணிக்கு சாப்பிட்டோம்.  பூ போன்ற இட்லி, சுவையான சட்னி, சூடான சாம்பார் ஆகியவற்றை சாப்பிட்டு மகிழ்ந்து எவ்வளவு பணம் என கேட்ட போது கடைக்காரர்   இருவருக்கும் ரூ  80/- என  கூறினார். டிப்ஸாக ரூ 10/-   சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் என ரூ  90/- கொடுத்த போது சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும் என   கூறி டிப்ஸ் கொடுத்து பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் நன்றாக பரிமாறுமாறும் வேலையை வளர்த்து விடாதீர்கள் என்று அறிவுரை கூறினார். 

சென்னையில் தி. நகரில் முக்கிய பிரமுகர் ஒருவரை பேட்டி எடுத்து விட்டு அவரது அலுவலகத்தில் இருந்து வெளியில் வரும் போது வயிறு என்னை கொஞ்சம் கவனியுங்கள் எனக் கூறியது. அங்கே விசாரித்த போது அருகில் பட்டு  மெஸ் என ஒன்று இருப்பதாக தெரிவித்தார்கள். நாங்கள் இருவரும் அங்கு சென்று அமர்ந்து அவர்கள் கொடுத்த மெனு கார்டை பார்த்தோம். “சைவ சாப்பாடு இங்கு இல்லை. சிக்கன் சாப்பாடு என்றாலும் மட்டன் சாப்பாடு என்றாலும் ரூ 400/- என போட்டுள்ளார்கள். வேறு கடைக்கு செல்லலாம்”  என்றார் கண்ணன்.

மணி சுமார் 4 ஆகிவிட்டது. வேறு எங்கு அலைவது என கூறிய நான் அசைவ சாப்பாடு ஆளுக்கு ஒன்று சொல்லி சாப்பிட தொடங்கினோம்.  ஒரு சின்ன கப்பில் மட்டன் சுக்கா என கொடுத்து இருந்தார்கள். அதை ஸ்பூனில் எடுத்த போது ஒரு கொத்து மயிர் வந்தது. சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து கேட்டபோது “சாரி சார்”  எனக் கூறிக் கொண்டே அந்தக் கப்பை எடுத்துச் சென்று மீண்டும் ஒரு கப் மட்டன் சுக்கா கொண்டு வந்து வைத்தார். பசி  எங்கள் இருவருக்கும் மறந்து விட்டது. மேனேஜரை கூப்பிடுங்கள் அவரிடம் தெரிவித்த போது. மேனேஜர் வெளியில் சென்று இருப்பதாக கூறினார். இங்கு இருப்பவர்களின் நிர்வாகி ஒருவரை கூப்பிடுங்கள் என்றோம். ஒருமுறை யோசித்து விட்டு மேனேஜர் வந்து விட்டதாக கூறி ஒருவரை அழைத்து வந்து நிறுத்தினார். வந்தவரோ மேனேஜர் போல் தெரியவில்லை சாரி சார். தப்பு நடந்து விட்டது. இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் வந்தவர்.   குறைந்தபட்சம் உங்கள் ஓனருக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் ஓனர் போன் நம்பர் கொடுங்கள் என்றோம். ஓனர் இங்கதான் இருக்கிறார் என கூறி ஒருவரை அழைத்து வந்து நிறுத்தினார்.   ஓனருக்கு நீங்க என்ன ஆகணும்? என்று கேட்டபோது ஓனர் என சொந்தக்காரர் என அவர் தெரிவித்து விட்டார்.  நேரமில்லாததால் அவர்களை திட்டி விட்டு கிளம்ப வேண்டியது ஆகிவிட்டது. இருப்பினும் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் ஒரு புகாரை அனுப்பி வைத்தோம்.

சென்னையில்  வேலைகளை முடித்து விட்டு மறுநாள் மதியம் சுமார் ஒரு மணி அளவில் பூந்தமல்லி வழியாக கிருஷ்ணகிரி நோக்கி நானும் கண்ணனும் காரில் பயணிக்க தொடங்கினோம்.  சென்னையில் இருந்து சுமார் 70, 80 கிலோ மீட்டர் பயணித்த   பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் சாப்பிட கடை தேடிய போது பல கார்கள் நின்ற உணவகம் ஒன்று கண்ணில் பட்டது. அங்கு சென்று சாப்பிட்டோம். ஆனால், சுத்தம் கிலோ என்ன விலை? என்பது போல அந்த கடை பணியாளர்கள் இருந்தார்கள். ஆனால், உணவு வகைகளின் விலை ஒன்றும் சாதாரணமானதாக இருக்கவில்லை.

கிருஷ்ணகிரியில் நண்பரை சந்தித்து பேசிவிட்டு இரவு சுமார் சேலத்துக்கு பயணிக்கும் போது சேலத்துக்கு முன்னதாக சுங்கச்சாவடி அருகில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவுக்காக நானும் கண்ணனும் சென்றோம். அந்த பிரபலமான உணவகத்தில் பல வண்ண கார்கள் அணிவித்து நின்றன. உள்ளே சென்று இடம் பிடித்து அமர்ந்த போது வந்த பணியாளர் எங்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். சொல்லி அனுப்பினோம். மீண்டும் ஒரு பணியாளர் வந்தார். என்ன வேண்டும் என்று கேட்டார். ஏற்கனவே சொல்லியாகிவிட்டது என்றோம். “என்ன?” என ஏதோ இலவசமாக சாப்பிட வந்தவர்களை கேட்பது போன்ற தோரணையில் கேட்டார். சார் கேட்டவர் சூப்பர்வைசர். நான்தான் உங்களுக்கு பரிமாறுகிறேன். என்ன வேண்டும் இன்னொரு முறை சொல்லுங்க  என கேட்டிருக்கலாம். இதன் பின்னர் நாங்களும் பொறுமையாக ஆளுக்கு ஒரு தோசை கொடுங்கள் என்றோம். ஐந்து நிமிடங்கள் கழித்து அவர் ஆளுக்கு இரண்டு பூரி கொண்டு வந்து கொடுத்தார். அங்கும் மேனேஜரை அழைத்து புகார் செய்ய வேண்டியதாயிற்று இருப்பினும் அந்த பணியாளர் மன்னிப்பு கூட கேட்கவில்லை.

சாப்பிட்டு வெளியில் வரும்போது அருகில் இருந்த கடையில் அசல் நன்னாரி சர்பத் பாட்டில் இருப்பதாக கூறினார்கள். அதனை வாங்கிக்கொண்டு வீட்டில் வந்து கொடுத்த போது அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றிப் பார்த்து விட்டு ரசாயனம் கலக்காத நன்னாரி வேர்களால் தயாரிக்கப்பட்ட சர்பத் போலதான் தெரிகிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்த மனைவி லேபிளில் தேதியை பார்த்துவிட்டு முகம் மாறி 2023 மே மாதத்திலேயே காலாவதி ஆகிவிட்டது. இதை வாங்கி வந்திருக்கிறீர்கள் என்று திட்ட தொடங்கினார்.

மற்ற நுகர்வு பொருட்களை காட்டிலும் உணவகங்களும் உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களும் மனிதனின் ஆரோக்கியத்தோடு நேரடியாக தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன. இந்நிலையில் உணவகங்கள் நுகர்வோர் பாதுகாப்பு தலங்களாக இருக்க வேண்டுமே தவிர நுகர்வோரின் காசை சுரண்டும் இடங்களாகவும் ஆரோக்கியத்தை அழித்துவிடும் இடங்களாகவும் இருக்கக் கூடாது. 

இங்கு கூறப்பட்ட நான்கு சம்பவங்களுமே உண்மையில் நடைபெற்றவை. குடும்பத்தோடு செல்லும்போது இது போன்ற சம்பவங்கள் நடந்தால் கடைக்காரரிடம் நாம் அதனை கேட்டால் உடன் வரும் குடும்பத்தினர் வெளியில் செல்லும் போது ஏன் பிரச்சனை செய்கிறீர்கள்? உங்களோடு வந்தால் எப்போதும் இது போன்ற பிரச்சனைகள்தான் என்று கூறத் தொடங்கி விடுகிறார்கள். உணவகங்களுக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கும்  விலை நிர்ணயம், தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்தி சரியான விலைக்கு – தரமான உணவுகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். பாதிக்கப்படுவோர் நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலையை மாற்றி நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்