2019 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோர் தகராறுகளை விசாரிக்கும் அமைப்பான நுகர்வோர் நீதிமன்றம் என்று மக்களால் அழைக்கப்படும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் (Consumer Disputes Redressal Commissions) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் தேசிய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் என அமைக்கப்பட்டுள்ளன.
அமைப்பு முறை
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை மாநில அரசு அமைக்க வேண்டும். புகார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஒரே மாவட்டத்தில் தேவைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட ஆணையங்களை மாநில அரசு அமைக்கலாம். தமிழகத்தில் சில மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆணையங்கள் அமைக்கப்படாத மாவட்டங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க அருகாமையில் உள்ள மாவட்ட ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இரண்டு மாவட்ட ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆணை பிறப்பிப்பவர்கள்
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு தலைவரும் இரண்டுக்கு குறையாத உறுப்பினர்களும் இருக்க வேண்டும். இதில் குறைந்தது ஒருவர் மகளிராக இருக்க வேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை, பதவிக்காலம், அவர்களது பதவி விலகல், பதவி நீக்கம் போன்ற விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி மாவட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் மாவட்ட நீதிபதியாக பதவியேற்க தேவையான கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும். மாவட்ட தலைவருக்கு நீதித்துறை ஊதிய குழு (Judicial Pay Commission) பரிந்துரைத்துள்ள முதுநிலை மாவட்ட நீதிபதிக்கான சம்பள விகிதத்தில் (District Judge Super Time Scale) ஊதியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆணைய உறுப்பினர்களுக்கு அரசின் ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள மாநில அரசின் துணைச் செயலாளருக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.
பண அதிகார வரம்பு
தற்போதைய விதிமுறைகளின்படி விலைக்கு வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு (consideration) ரூபாய் 50 லட்சம் வரை உள்ளவற்றில் நுகர்வோர் தகராறுகள் ஏற்படும் போது மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நுகர்வோர் புகாரை சமர்ப்பிக்கலாம். இந்தப் பண உச்சவரம்பை அதிகரித்து அல்லது குறைத்து நிர்ணயம் செய்ய விதிகளை ஏற்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் வாங்கிய பொருள் அல்லது சேவையின் விலை மட்டுமே பண மதிப்பாக (consideration) எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் ரூபாய் 48 லட்சத்துக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். வாகனத்தில் உற்பத்தி குறைபாடு இருப்பதாக தெரிய வந்து புகாரை தாக்கல் செய்யும்போது வாங்கிய வாகனத்தை திரும்ப பெற்றுக் கொண்டு உற்பத்தியாளர் ரூபாய் 48 லட்சம் தர வேண்டும் என்று கேட்பதோடு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூபாய் 50 லட்சம் உற்பத்தியாளர் கூடுதலாக தர வேண்டும் என்று கேட்பார் எனில் மொத்த கோரிக்கை தொகை ரூபாய் 98 லட்சம் ஆகும். ஆனால், இந்த வழக்கையும் மாவட்ட ஆணையத்தில் தாக்கல் செய்யலாம். ஏனெனில் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு என்பது 48 லட்சம் மட்டுமே. மாவட்ட ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்ய வாங்கிய பொருள் அல்லது சேவையின் விலை ரூபாய் 50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
பூகோள அதிகார வரம்பு
நுகர்வோர் புகாரை தாக்கல் செய்யும் போது (1) முறையீட்டாளர் வசிக்கும் அல்லது தொழில் புரியும் இடம் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அல்லது (2) முழுமையாகவோ, பகுதியாகவோ வழக்கு ஏற்பட்ட இடம் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அல்லது (3) வழக்கு தாக்கல் செய்யும் போது எதிர் தரப்பினர் வசிக்கும்/ வணிகம் புரியும்/ கிளை அலுவலகம் வைத்திருக்கும்/ லாபத்துக்காக பணியாற்றும் இடம் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (4) எதிர்தரப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் போது மேற்கண்ட இடங்களில் ஏதேனும் ஒரு இடம் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரை தாக்கல் செய்யலாம்.
கட்டணம்
தற்போதைய விதிமுறைகளின்படி நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் புகார் செய்யும் போது செலுத்த வேண்டிய கட்டண விவரம் பின்வருமாறு.
வாங்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் விலை | கட்டணம் |
ரூபாய் 5 லட்சம் வரை | இல்லை |
ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை | ரூ 200/- |
ரூபாய் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை | ரூ 400/- |
ரூபாய் 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை | ரூ 1,000/- |
நடைமுறைகள்
புகார் தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்த விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் இரண்டாம் பகுதியாக வெளியிடப்பட உள்ளது.