spot_img
November 24, 2024, 2:41 am
spot_img

இருண்ட வணிக நடைமுறை-பகுதி 4: மாறுவேடமிட்டு விளம்பரம் உள்ளிட்ட நான்கு வகை இருண்ட வணிக நடைமுறைகளை அறிவோம்!

இடைமுக குறுக்கீடு

இணையதள வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட தகவல்களை மட்டும் முன்னிலைப்படுத்துதல் மற்றும் மற்ற பிற தொடர்புடைய தகவல் மூலமாக நுகர்வோர் ஒருவர் விரும்பிய செயலை செய்யாமல் தவறாக வழி நடத்துதல் “இடைமுக குறுக்கீடு” (Interface interference) என்ற பெயரில் அழைக்கப்படும் இருண்ட வணிக முறைகளில் ஒரு வடிவமாகும்.  

உதாரணமாக, வேண்டாம் (No) என்பதை தேர்வு செய்ய இயலாதவாறு தெளிவற்ற நிலையில் அதனை இணையதளத்தில் காட்டுதல் அல்லது அதனை சிறிய எழுத்துக்களில் கணினி   திரையில் காட்டுதல் அல்லது வேண்டாம் என்பதற்கு எதிர்மறையான குறியீடுகளை காட்டுதல் போன்றவை. மற்றொரு உதாரணமாக, இணையதளத்தில் ஒரு பொருளை அல்லது சேவையை வாங்குவதற்கு தேடிக் கொண்டிருக்கும்போது மற்றொரு விளம்பரத்தை காட்டி அதனை நீக்குவதற்கு அந்த விளம்பரத்தின் வலது மேற்பக்க மூலையில் சிறிய எக்ஸ் குறியை வடிவமைத்து அதனை தேடும் அளவிற்கு செய்வது.  

தூண்டல் மற்றும் மாறுதல்

இணையதளத்தில் நுகர்வோர் விரும்பும் ஒன்றை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக காட்டி அதனை பதிவு செய்ய முயற்சிக்கும் போது வேறு விளம்பரத்தை காட்டும் “தூண்டல் மற்றும் மாறுதல்” (Bait and switch) என்ற இருண்ட வணிக நடைமுறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.  உதாரணமாக,   ஒரு மொபைல் போனை குறைந்த விலையில் விற்பதாக இணையதள திரையில் காட்டி அதனை நுகர்வோர் வாங்குவதற்கு பதிவு செய்து பணம் செலுத்தும் நிலைக்கு செல்லும்போது அந்த பொருள் தீர்ந்து விட்டதாக கூறி அதே மாதிரியான வேறு ஒரு மொபைல் போனை காட்டி அதிக விலையை தெரிவிப்பது. மற்றொரு உதாரணமாக, ஒரு பொருள் இணையதள விற்பனையாளரிடம் இல்லாத நிலையில் அதனை விற்பதாக காட்டி வாடிக்கையாளர் அதனை தேர்வு செய்து   முன்பதிவு செய்யும் போது (cart) அந்த பொருள் இருப்பில் இல்லை (அவுட் ஆப் ஸ்டாக்) என தெரிவித்து அதே வகையான ஆனால் கூடுதல்   விலை உடைய பொருள் இருப்பதாக காட்டுவது.

சொட்டு விலை நிர்ணயம்

இணையதள தேர்வு செய்யும் பக்கத்தில் வாங்க நினைக்கும் ஒரு  பொருளின் விலையை காட்டாமல் ரகசியமாக வைத்திருப்பது, பொருளை இணையதளத்தில் தேர்வு செய்து உறுதிப்படுத்தி பணம் செலுத்தும் பகுதிக்கு செல்லும் போது அதிகமான தொகையை காட்டுவது, ஒரு பொருளை அல்லது சேவையை கட்டணம் இல்லாமல் வழங்குகிறோம் என விளம்பரப்படுத்தி அதனை பெற முயற்சிக்கும் போது குறிப்பிட்ட அப்ளிகேஷனை வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது, ஏற்கனவே ஒரு சேவையை பணம் கொடுத்து பெற்ற பின்பு அந்த சேவையை தொடர்ந்து பெற குறிப்பிட்ட அளவில் கூடுதல் பணத்தை செலுத்தினால்தான் சேவை வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்துவது போன்றவை சொட்டு விலை நிர்ணயம் (Drip pricing) என்ற இருண்ட வடிவ வணிக நடைமுறைகளின் வகைகளாகும்.

உதாரணமாக, விமான பயணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் என்று இணையதள பக்கத்தில் காட்டுவதை நம்பி தேர்வு செய்து பணம் செலுத்தப் போகும்போது கூடுதல் கட்டணங்களுடன்   பணத்தை கேட்பது, மற்றொரு உதாரணமாக, செஸ் விளையாடுவதற்கான   அப்ளிகேஷனை இலவசமாக வழங்குவதாக கூறியதை நம்பி அதனை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து மீண்டும் தொடர பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிப்பது. மற்றொரு உதாரணமாக, ஒரு உடற்பயிற்சி மையத்தில் (Gym) உறுப்பினராக சேரும்போது கட்டணத்தை பெற்றுக் கொள்ளும் நிர்வாகம் அங்கு செல்லும்போது அங்கு விற்கப்படும் உடற்பயிற்சி உடைகளை வாங்கினால் தான் உடற்பயிற்சி மையத்திற்குள் அனுமதிப்போம் என்று உறுப்பினர் சேர்க்கையின் போது தெரிவிக்காத நிபந்தனையை விதிப்பது.

மாறுவேடமிட்டு விளம்பரம்

ஒரு இணையதள பக்கத்தில் ஏதாவது வாங்குவதற்காக தேடும் போது விளம்பரங்களை   தகவல்கள் மாதிரி காண்பிப்பது மாறுவேடமிட்டு விளம்பரம் (Disguised advertisement) வெளியிடுவதும் இருண்ட வணிக நடைமுறையாகும்.  

அரசு வெளியிட்டுள்ள இருண்ட வடிவ வணிக நடைமுறை  குறித்த வழிகாட்டுதல்களின் இதர அம்சங்கள் ஓரிரு நாட்களில் இறுதிப் பகுதியாகவெளியிடப்படும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்