சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, உள்ளிட்ட சுதந்திரங்களுக்கான உரிமை, வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரம் போன்ற உரிமைகள், சுரண்டலுக்கு எதிரான உரிமைகள், மத சுதந்திரத்திற்கான உரிமைகள், பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் ஆகியவற்றை இந்திய அரசியலமைப்பு நமக்கு அடிப்படை உரிமைகளாக வழங்கி உள்ளது.
வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனிமனித கௌரவம் ஆகியவற்றிற்கான உரிமைகளை மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது. பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, கேட்க உரிமை, தீர்வுக்கான உரிமை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை ஆகியவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது.
தொழிலாளர்களுக்கான உரிமைகளை தொழிலாளர் நலச் சட்டங்களும் சுற்றுச்சூழலுக்கான உரிமைகளை சுற்றுச்சூழல் தொடர்புடைய சட்டங்களும் நமக்கு வழங்கி உள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ள உரிமைகள் சட்டங்களில் வரையறுக்கப்பட்டு உரிமைகளின் வகைகள் விளக்கப்பட்டு உரிமைகளை பயன்படுத்துவதற்கும் உரிமை மீறல்கள் நடைபெறும் போது நிவாரணம் பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட சட்டங்களிலேயே வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு உரிமைகளையும் மக்களுக்கு வழங்கும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிக்கும் உரிமைதான் எல்லா உரிமைகளை காட்டிலும் மேலானதாகும். ஆனால், வாக்காளர்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுக்கும் பிரத்தியோக சட்டம் சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்தும் இயற்றப்படவில்லை. வாக்காளர்களின் உரிமைகள் மீதான மீறல்கள் ஏற்படும் போது எளிதில் நீதியை அணுகக்கூடிய வகையிலான பிரத்தியோக அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.
வாக்காளர்களின் உரிமைகள்
- சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை
- நியாயமான, சுதந்திரமான தேர்தல்களுக்கான உரிமை
- பாதுகாப்பு உரிமை
- கேள்வி கேட்க உரிமை
- தகவல் அறியும் உரிமை
- தேர்தல் ஆணையத்தின் மீதான உரிமை
- தேர்தல் கட்சிகள் மீதான உரிமை
- வேட்பாளர்கள் மீதான உரிமை
- தேர்தல் குற்றங்களுக்கு எதிரான உரிமை
- உரிமை மீறல்களில் எளிதான தீர்வு காண உரிமை
- வாக்காளர் விழிப்புணர்வுக்கான உரிமை
வாக்காளர்களின் கடமைகள்
- கட்டாயம் வாக்களித்தல்
- வாக்கை விற்பனை செய்யாமல் இருத்தல்
- எந்த அழுத்தங்களுக்கும் உட்படாமல் இருத்தல்
- சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு ஒத்துழைத்தல்
- வாக்குறுதிகளின் உண்மை தன்மைகளை கண்டறிதல்
- தவறான பிரச்சாரங்களை முறியடித்தல்
- உண்மையான மக்களாட்சிக்கு உறுதுணையாக இருத்தல்
இவ்வாறு வாக்காளர்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறை செய்து வாக்காளர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி உரிமைகளை காக்க தேசிய மற்றும் மாநில வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? கேட்டு பாருங்களேன். Will the political parties contesting the election promise to set up a voter rights protection commission?
“தேர்தல் சீர்திருத்தம் நியாயமான தேர்தல் சிறந்த ஆட்சி ஆகியவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பு மக்கள் கைகளில் உள்ள வாக்குரிமையில் உள்ளது” என்று டாக்டர் வீ. ராமராஜ் எழுதிய “மதிப்பிற்குரிய வாக்காளருக்கு” என்ற நூலில் 1996 ஆம் ஆண்டு எழுதிய கருத்து இன்னும் பொருத்தமானதாகவே உள்ளது. # Dr. V. Ramaraj #Father of Voterology