spot_img
July 27, 2024, 1:11 pm
spot_img

ஆபத்து – மெல்ல சாகும் சேமிப்பு பழக்கம்

சமீபத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சேமிப்பு குறைந்துள்ளது என்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளது.  இந்த தகவல்தான் இந்த கட்டுரை எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.

இன்று இந்தியர்களின் சேமிப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இணையதள வர்த்தகத்தை கூறலாம். கவர்ச்சிகரமான விளம்பரங்கள்,  பொருட்கள் நேரடியாக தங்களுடைய வீடுகளுக்கு வந்து சேரக்கூடிய ஒரு நிலை,  பிரபல முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் உள்ளூரில் கிடைக்காத பொழுது இணையதள மூலமாக வாங்கக்கூடிய வசதி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களுடைய வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்யக் கூடிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இது நேரடியாக நுகர்வோர்களின் சேமிப்பை பாதிப்பதோடு தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி குவிக்க கூடிய ஒரு மோசமான நுகர்வோர் கலாச்சாரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

உதாரணமாக பயன்பாட்டிற்கு அதிகமாக உள்ள மொபைல் போன் வாங்குவது வருமானத்திற்கு அதிகமாக உடை, காலணிகள் மற்றும் அழகு பொருட்களுக்கு செலவு செய்வது பொருட்கள் இருக்கும் பொழுதே மீண்டும் அதே பொருட்களை வாங்கி குவிப்பது, தேவையில்லை என்றாலும் இணையதளத்தில் பொருட்களை தேடுவது, வாங்குவது போன்ற மோசமான நுகர்வோர் கலாச்சாரத்தை இந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. 

அதிகரித்து வரும் பண வீக்கத்தை நம்முடைய பாரம்பரிய பொருளாதார கையாளு முறையான, தேவைக்கு மற்றும் அளவான பொருட்களை வாங்குவது அவ்வாறு வாங்கிய பொருட்களை முழுவதும் பயன்படுத்துவது, வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிப்புக்கு எடுத்து வைப்பது, கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து பொருட்களை வாங்காமல் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கக்கூடிய பழக்கங்களை பின்பற்றுவது மற்றும் ஊக்குவிப்பதன் மூலமாக பண வீக்கத்தை சமாளிக்கலாம். 

முதலில் நமது அன்றாடச் செலவுகளைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். அவற்றில் தேவையானவை எவை?, தேவையற்றவை எவை?, குறைப்பதற்கு சாத்தியமுள்ளவை எவை? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆய்வு செய்து பார்த்து தேவையற்ற செலவுகளை உடனடியாகக் கைவிட வேண்டும். பிறவற்றில் முடிந்த அளவுக்கு செலவுகளைச் சுருக்க வழிபார்க்க வேண்டும். இவ்வாறு செலவுகளை இறுக்கிப் பிடிக்கும் சிக்கனத்தின் மூலம் நமது பணம் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. 

சிக்கனத்தின் மூலம் தினந்தோறும், மாதந்தோறும், ஆண்டுதோறும் எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியும் என்ற இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறாக சேமிப்புக்கு ஒரு மதிப்பீட்டையும் மதிப்பையும் உருவாக்க வேண்டும். சில சமயங்களில் நமது வருவாயும், அதன்மூலம் உருவாக்கப்படும் சேமிப்பும் நமது தேவைகளுக்குப் போதுமானவையாக இல்லாமல் போகலாம். ஆயினும், நாம் முயன்றால், அந்தத் தேவைகளில் பலவற்றை நிறைவேற்றிவிட முடியும். அதற்காக நாம் கூடுதல் உழைப்பையும், திறனையும் செலவிடவேண்டி இருக்கும். 

சிறிய மீனைப் போட்டு பெரிய மீனை தூண்டிலில் பிடிப்பதைப்போல, நம்மிடம் சேமிப்பாக உள்ள சிறிய தொகையை மேலும் பணம் சேர்ப்பதற்கான முதலீடாக நாம் பயன்படுத்த வேண்டும். நமது முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலும், முதிர்வுத் தொகையிலும் கணிசமான பகுதியை மறுமுதலீட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். இவற்றினால் நமது பணவளம் பெருகும். 

நமது எந்தத் தேவைகளுக்காக முதலீடுகளை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, வியாபார வளர்ச்சி என்பது போன்ற குறுகிய காலத்துக்கு ஆனதாகவோ அல்லது குழந்தைகளின் எதிர்காலக் கல்வி, அவர்களது திருமணச் செலவு என்பது போன்ற நீண்ட காலத்துக்கு உரியதாகவோ இருக்கலாம். 

பணத்தைச் சேமித்து பெருக்க நினைப்பவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம். எதிர்பாராமல் ஏற்படும் திடீர் தேவைக்காக சேமிப்பில் இருந்து செலவழித்தல், முதலீடுகளை பாதியிலேயே திரும்பப் பெறுதல் ஆகிய தவறுகளைச் செய்யக்கூடாது. உயிர்காப்பு மருத்துவம் போன்ற தவிர்க்க இயலாத தேவைகளுக்காக அன்றி வேறு தேவைகளுக்காக முதலீட்டைத் திரும்பப் பெறக்கூடாது. நம்மால் சமாளிக்க முடியாதோ என்ற வீண் அச்சம் காரணமாகவும், சலிப்பு காரணமாகவும் இல்லையேல் அறியாமையினாலோதான் முதலீட்டைப் பெரும்பாலும் திரும்பப் பெறுகிறார்கள். 

இந்தியாவில் சேமிப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான மற்றும் பிரதானமானதாக கருதப்படுவது

  • கோவிட் 19 காலகட்டம் மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியர்களுடைய சராசரி மாத வருமானம் குறைந்தது.
  • கோவிட் 19 காலகட்டத்தில் கணிசமான அளவில் நோய் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக செலவிடக் கூடிய கலாச்சாரம் உருவானது.
  • குடும்ப உறுப்பினர்களுடைய உடல் மற்றும் மன நலத்திற்காக செலவு செய்வது கணிசமாக உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணம்
  • சமீப காலமாக உணவு பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதும்.
  • குடும்பத்தின் கடன் சுமைகளை சமாளிப்பதற்காக அதிக வட்டிக்கு கடன் பெறுவதும் மற்றும் அத்தொகையை திருப்பி செலுத்துவதும்.
  • உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பெரும்மந்தம் மற்றும் நிலைப்பு தன்மையின்மையும் ஒரு முக்கிய காரணம் ‌
  • தேவைக்கு அதிகமாக பொருட்களை ஆன்லைன் வணிகத்தின் மூலமாக வாங்கி குவிப்பதும் இன்று இவ்வாறு சேமிப்பு குறைவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
  • மக்கள் சேமிப்பை தவிர்த்து பொருட்களை வாங்குவது செலவு செய்வது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் ஒரு காரணமாகும்.
  • சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் பொருளாதார உயர்வு பற்றிய சரியான புரிதல் அல்லது தெரிந்து கொள்ளாததும் இன்று இந்திய குடும்பங்களில் சேமிப்பு குறைந்ததற்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றது.
  • பொதுமக்களிடையே சேமிப்பின் அவசியம் மற்றும் இன்றியமையாத அம்சங்களை பற்றி போதிய விழிப்புணர்வுகளை அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் ஏற்படுத்தாததும்.

வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறை, பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது, முதலீடு செய்வது, தேவை ஏற்பட்டால் மட்டுமே கடன் பெறக்கூடிய கலாச்சாரம் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளின் மூலமாக சேமிப்பின் அளவை உயர்த்த முடியும். எதிர்காலத்தில் இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு தகுந்தவாறு கடன் பெறுவது மற்றும் முதலீடுகளை செய்வது என்கின்ற சரியான கணிப்புகளை உருவாக்குவது மிக மிக அவசியம். அவ்வாறு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நிலைப்பு தன்மையின்மையை சமாளிக்க கூடிய வகையில் இந்தியர்களை உருவாக்குவது மிக மிக அவசியமான மற்றும் சமூகப் பொறுப்பான ஒரு நடவடிக்கையாக அரசு கருத வேண்டும்.

முனைவர் பி.சக்திவேல்
முனைவர் பி.சக்திவேல்
முனைவர் பி.சக்திவேல், பேராசிரியர், அரசறிவியல் துறை, அண்ணாமலை பல்கலைகழகம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்